ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்!


  • ஜெனீவா: உலகம் முழுவதும் வரும் மாதங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் பெரும்பாலான நாடுகளில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் என்றும், இதற்கு முக்கிய காரணமாக எல் நினோ காலநிலை நிகழ்வு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், எல் நினோ மீண்டும் வலுவடையும் சூழல் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் உலகின் பல பகுதிகளில் வெப்ப அலைகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும், சில இடங்களில் கடுமையான வறட்சி நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    பசிபிக் பெருங்கடலின் வெப்பமண்டல பகுதிகளில் கடல் நீரின் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் போது எல் நினோ நிகழ்வு உருவாகிறது. இந்த மாற்றம் உலகளாவிய வானிலை அமைப்பையே பாதிக்கும். குறிப்பாக மழைப்பொழிவு, வெப்பநிலை, புயல் உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு இயற்கை நிகழ்வுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

    உலக வானிலை அமைப்பு

    உலக வானிலை அமைப்பின் மதிப்பீட்டின்படி, வரும் மாதங்களில் எல் நினோ நிலை தொடர்வதற்கான வாய்ப்பு 90 சதவீதம் வரை உள்ளது. இதனால் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் உலகின் பெரும்பாலான நிலப்பரப்புகளில் சராசரியை விட அதிக வெப்பநிலை பதிவாகும் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "அறிவியல் தரவுகள் மிகவும் தெளிவாக ஒரு எச்சரிக்கையை வழங்குகின்றன. எல் நினோ உருவாகும் சாத்தியம் மிகவும் அதிகமாக உள்ளது. இதை உலக நாடுகள் காலநிலை தொடர்பான அவசர எச்சரிக்கையாக கருத வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    Advertisement

    உலக வெப்பமயமாதல்

    ஏற்கனவே உலக வெப்பமயமாதல் காரணமாக பல நாடுகள் கடும் வெப்பத்தை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் எல் நினோ உருவாகுவது, எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் மேலும் எண்ணெய் ஊற்றுவது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வானிலை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பொதுவாக எல் நினோ இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை உருவாகும் இயற்கை நிகழ்வாகும். ஆனால் அது உருவாகும் ஒவ்வொரு முறையும் உலகளாவிய வானிலை அமைப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சில நாடுகளில் கடுமையான வறட்சி நிலை உருவாகும் நிலையில், சில பகுதிகளில் அதிக மழை மற்றும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    Advertisement

    எல் நினோ

    இந்தியாவைப் பொறுத்தவரை எல் நினோ மிகவும் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்தியாவின் விவசாயம் பெருமளவில் தென்மேற்குப் பருவமழையை சார்ந்துள்ளது. நாட்டின் ஆண்டு மழைப்பொழிவில் சுமார் 70 முதல் 75 சதவீதம் வரை தென்மேற்குப் பருவமழை மூலமாகவே கிடைக்கிறது.

    வெப்பநிலை

    ஆனால் எல் நினோ உருவாகும் ஆண்டுகளில் தென்மேற்குப் பருவமழை பலவீனமடையும் வாய்ப்பு அதிகம். இதனால் மழைப்பொழிவு குறையலாம். அதே நேரத்தில் வெப்பநிலை அதிகரித்து நீர்வளப் பற்றாக்குறை உருவாகும் அபாயமும் உள்ளது. இதன் தாக்கம் விவசாய உற்பத்தி முதல் பொருளாதார வளர்ச்சி வரை பல துறைகளில் எதிரொலிக்கக்கூடும்.

    Advertisement

    இந்திய வானிலை ஆய்வு மையம்

    இந்திய வானிலை ஆய்வு மையமும் ஏற்கனவே எல் நினோ தாக்கம் காரணமாக இந்த ஆண்டின் பருவமழை செயல்பாட்டில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக விவசாயிகள், நீர்வள நிர்வாக அமைப்புகள் மற்றும் மாநில அரசுகள் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும், வெப்ப அலைகள் அதிகரிக்கும் சூழலில் பொதுமக்களும் தங்களது உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் அதிக வெப்பத்திலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம் என கூறப்படுகிறது.

    English Summary

    WMO warns El Niño could push temperatures higher worldwide, with hotter-than-normal conditions expected through August.