நைட் ஷிப்ட் தான் வேண்டும்! அடம் பிடிக்கும் ஊழியர்கள்.. ஐரோப்பா முழுக்க திடீர் டிரெண்ட்.. என்ன காரணம்

  • மாட்ரிட்: ஐரோப்பிய நாடுகளில் இப்போது வரலாறு காணாத வெப்பம் படுத்தி எடுத்து வருகிறது. இதனால் அங்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் மொத்தமாக தாங்கள் வேலை செய்யும் முறையை மாற்றிக் கொண்டுள்ளனர். வெயில் உச்சத்தில் இருக்கும் நேரத்திற்குப் பதிலாக இரவு நேரங்களில் வேலை செய்யும் முறைக்கு மெல்ல மாறி வருகிறார்கள்.

    Advertisement

    ஐரோப்பிய நாடுகளில் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இந்த காலநிலை மாற்றம் காரணமாக அங்கு மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை உட்பட நம்ம ஊரில் கோடையில் அடிக்கும் வெயிலை விட இது கம்மி தான் என்றாலும் அந்த ஊர் மக்களுக்கு இது முற்றிலும் புதியது. இதனால் அங்கு மக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகிறார்கள்.

    Advertisement

    இரவு ஷிப்ட்

    அங்குள்ள அரசுகள், நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்களது பாரம்பரிய வேலை நேரங்களைக் கூட மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாகக் கட்டுமானம் உள்ளிட்ட அவுட்டோர் வேலை செய்யும் தொழிலாளர்களைப் பகல் நேர வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்காக, பல ஐரோப்பிய நாடுகளில் இரவு நேரம் அல்லது அதிகாலை நேரமே இவர்கள் வேலைக்குச் செல்கிறார்கள்.

    கட்டுமானத் துறை, சாலைப் பராமரிப்புப் பணிகள், விவசாயம் மற்றும் டெலிவரி சேவைகள் போன்ற துறைகளே இந்த கடுமையான வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. தெற்கு ஐரோப்பாவின் பல பகுதிகளில் பகல் நேர வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைக் கடந்து பதிவாகி வருவதால், நீண்ட நேரம் வெளியில் நின்று வேலை செய்வது தொழிலாளர்களின் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடுகிறது. இதனால் நீரிழப்பு, மயக்கம் மற்றும் பக்கவாதம் போன்ற கடுமையான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க பல நிறுவனங்கள் தங்களது பணி நேரத்தை மாற்றி அமைத்து வருகின்றன.

    Advertisement

    அரசுகள் உதவி

    ஸ்பெயின், இத்தாலி மற்றும் கிரீஸ் போன்ற நாடுகள் இந்த விவகாரத்தில் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளன. தீவிர வெப்பத்தில் இருந்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விதிமுறைகளை உருவாக்கியுள்ளன. அதிக வெப்பம் இருக்கும் மதிய நேரத்தில் வெளிப்புற வேலைகளை சில மணி நேரமாவது நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

    இதில் குறிப்பாகக் கட்டுமானத் துறை மிக வேகமாக மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. சாலை போடுவது மற்றும் கட்டட உள்கட்டமைப்பு போன்ற பணிகள் எல்லாமே பகல் நேரத்தில் இருந்து மாற்றப்பட்டு, இரவு நேரங்களிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இது தொழிலாளர்களின் சோர்வைக் குறைத்து அவர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவுகிறது.

    Advertisement

    விவசாயத் துறை

    விவசாயத் துறையிலும் இதே போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விவசாயத் தொழிலாளர்கள் நேரடியாக கடும் வெயிலில் வேலை செய்வதைத் தவிர்க்க, அதிகாலை அல்லது மாலை நேரங்களில் பயிர்களை அறுவடை செய்கிறார்கள். இது விவசாயப் பணிகளுக்கு இடையூறு இல்லாமல் உற்பத்தியைத் தொடர வழிவகுக்கிறது. இதேபோல், ஆன்லைன் டெலிவரி சேவைகளும் மாற்றப்பட்டுள்ளன.

    இப்படி வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ள நகரங்களில் பகல் நேர வேலைகளை ஊழியர்கள் தவிர்த்து வருகிறார்கள். அரசும் கூட இதற்கு ஆதரவாகவே நிற்கிறது. அதற்கு பதிலாக அதிகாலை அல்லது இரவு நேரங்களில் வேலை என்பது போல தங்கள் ஷெட்யூலை மாற்றி அமைத்து வருகிறார்கள்.

    Advertisement

    எல்லாம் ஓகே!

    மறுபுறம் இந்த மாற்றங்களை வரவேற்றுள்ள அந்நாட்டின் சுகாதார நிபுணர்கள், ஒருவேளை வெயிலில் வேலை செய்யும் சூழல் ஏற்பட்டாலும் போதிய அளவு தண்ணீர் குடிப்பது, நிழலான இடங்களில் ஓய்வெடுப்பது மற்றும் தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது போன்றவை பின்பற்றுமாறு வலியுறுத்துகின்றனர். அதேநேரம் இரவு நேரம் வேலைக்கு செல்லும்போது, போதிய வெளிச்சமின்மை, தொழிலாளர்களின் தூக்கம் மற்றும் குடும்ப வாழ்க்கை, கூடுதல் ஆபரேடிங் செலவு ஆகியவை பிரச்சினையாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Extreme heat across Europe is forcing construction workers, farmers and delivery personnel to switch to night shifts(ஐரோப்பிய நாடுகளை படுத்தி எடுக்கும் அதீத வெப்பம்): Europe Heatwave latest news in tamil.