ஈரோடு பக்கம் வந்து பாருங்க.. 36 டிகிரிக்கே திணறும் ஐரோப்பியன்ஸ்! உருகும் டென்னிஸ் ராக்கெட்! வீடியோ!

  • பாரிஸ்: ஐரோப்பிய நாடுகளில் கடுமையான வெப்ப அலை நிலவி வரும் நிலையில், சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள சில வீடியோக்கள் உலகம் முழுவதும் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. ஜெர்மனியில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் டென்னிஸ் ராக்கெட்டின் கைப்பிடி உருகியது போன்ற காட்சிகளும், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மின்விசிறி வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாகக் கூறப்படும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. ஆனால், இந்தியாவில் இதனை விட அதிக வெயிலையே பார்த்து விட்டோம் என கமெண்ட் செய்து வருகின்றனர் இந்திய நெட்டிசன்ஸ்.

    Advertisement

    கடந்த சில நாட்களாக ஐரோப்பாவின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. குறிப்பாக, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கடுமையான வெப்ப அலை நிலவி வருகிறது.

    Advertisement

    இதனால் போக்குவரத்து சேவைகள் பாதிப்பு, மின்சார தேவையில் திடீர் உயர்வு, மருத்துவ அவசரநிலை எச்சரிக்கைகள் போன்றவை தொடர்ந்து பதிவாகி வருகின்றன. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, பிரான்சில் வெப்ப அலை காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

    குறிப்பாக முதியவர்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினை உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஜெர்மனியில் டென்னிஸ் ராக்கெட் கைப்பிடி வெப்பத்தால் மென்மையாகி உருகுவது போன்ற வீடியோவை ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதனுடன், "ஐரோப்பிய பொருட்களின் தரம் இவ்வளவுதானா?" என்று கேலி செய்யும் வகையிலான கேப்ஷனும் இடம் பெற்றிருந்தது.

    Advertisement

    இந்த வீடியோவைப் பார்த்த பலரும் பல்வேறு கருத்துகளை பதிவிட்டனர். "ஜெர்மனியிலும் இப்படிப்பட்ட நாள் வரும் என்று அவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள்" என்றும், "இந்தியாவில் 45 முதல் 48 டிகிரி வரை வெப்பநிலை இருந்தாலும் பொருட்கள் நன்றாகவே உள்ளன. 36 டிகிரியிலேயே இப்படி ஆகிறதா?" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

    மேலும் சிலர், ஜெர்மனியில் வெப்பத்தின் தாக்கத்தால் ரயில் தண்டவாளங்களே பாதிக்கப்பட்டதாகவும், அதன் காரணமாக சில சேவைகள் நிறுத்தப்பட்டதாகவும் கூறி வருகின்றனர். இதற்கிடையில், பாரிஸில் மக்கள் மின்விசிறி வாங்க நீண்ட வரிசையில் நிற்பதாகக் கூறப்படும் மற்றொரு வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது. "இது தான் அதிநவீன குளிரூட்டும் தொழில்நுட்பம்" என்று கிண்டலாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவும் எப்போது எடுக்கப்பட்டது என தெரியவில்லை என்றாலும், ஐரோப்பாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    Advertisement

    இந்தச் சூழலில், இந்தியாவின் கோடை கால வெப்பத்துடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் ஏராளமான பதிவுகள் வெளியாகி வருகின்றன. "41 டிகிரி என்பது டெல்லியில் சாதாரண கோடை வெப்பநிலை. அதைவிட அதிக வெப்பத்தையும் இந்தியர்கள் சமாளிக்கிறார்கள். ஆனால் ஐரோப்பா ஏன் இவ்வளவு திணறுகிறது?" என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    அதேநேரத்தில், காலநிலை ஆய்வாளர்கள் வேறு கருத்தை முன்வைக்கின்றனர். ஐரோப்பிய நாடுகளின் பெரும்பாலான கட்டிடங்கள், போக்குவரத்து அமைப்புகள் மற்றும் பொதுக்கட்டமைப்புகள் நீண்டகால கடுமையான வெப்பநிலையை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படவில்லை என்பதால், தற்போது வெப்ப அலை மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    Advertisement

    சமூக வலைதளங்களில் பல பதிவுகள் நகைச்சுவை நோக்கில் பகிரப்பட்டாலும், காலநிலை மாற்றத்தின் தாக்கம் ஐரோப்பாவில் தீவிரமடைந்து வருவது ஒரு முக்கியமான பொது சுகாதார பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்ற கடுமையான வெப்ப அலைகள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால், அதற்கேற்ற கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

    English Summary

    Europe’s heatwave triggers viral videos of melting tennis rackets and fan queues, drawing comparisons with India’s harsher summer temperatures.