பாரிஸ்: பிரான்ஸ், இத்தாலி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் வன்முறையாக மாறி வரும் நிலையில், சிறார்கள் சேதப்படுத்தும் அரசு மற்றும் தனியார் சொத்துகளுக்கு அவர்களின் பெற்றோரே பொறுப்பேற்கும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
பிரான்சில் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவு, கல்விக்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லாதது உள்ளிட்ட பிரச்சினைகளால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாரிஸ், நான்டெஸ் உள்ளிட்ட நகரங்களில் மாணவர் அமைப்புகள் பள்ளிகளை முற்றுகையிட்டு போராட்டங்களை ஒருங்கிணைத்தன.
மாணவர்களின் போராட்டங்கள் சில இடங்களில் வன்முறையாக மாறின. கடைகளில் கொள்ளை, பள்ளிகளை முற்றுகையிடுதல், போலீசாருடன் மோதல் என பல்வேறு மோசமான சம்பவங்கள் அரங்கேறின. சில இடங்களில் தீவைப்பு மற்றும் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தும் சம்பவங்களும் கூட நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர இரு நாடுகளின் அரசுகளும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்கிடையே சிறார்கள் ஏற்படுத்தும் சேதங்களுக்கு அவர்களின் பெற்றோரிடம் இழப்பீடு கோரும் வகையில், சிவில் சட்ட விதிகளை பயன்படுத்துமாறு பிரான்ஸ் நீதித்துறை அமைச்சகம் அரசு வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸ் சிவில் சட்டத்தின்படி, தங்களுடன் வசிக்கும் மைனர் குழந்தைகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு பெற்றோர் கூட்டாக பொறுப்பேற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, இந்த சட்டத்தை பயன்படுத்தி போராட்டங்களின்போது சேதப்படுத்தப்படும் பள்ளிகள் மற்றும் பொது சொத்துகளுக்கான இழப்பீட்டையும் பெற்றோரிடமிருந்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் 2026 முதல் 2028 வரையிலான காலகட்டத்தில் கல்வி பட்ஜெட்டில் 62 கோடி யூரோ குறைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கு எழுந்த எதிர்ப்பும், மோசமான பள்ளி உட்கட்டமைப்பு, ஆசிரியர்களின் குறைந்த ஊதியம் மற்றும் வாழ்க்கை செலவு உயர்வு ஆகியவை மாணவர்களின் போராட்டங்களுக்கு காரணமாகியுள்ளன. மிலன், ரோம், டூரின், ஃப்ளாரன்ஸ் உள்ளிட்ட நகரங்களில் வேலைநிறுத்தங்கள் மற்றும் பள்ளி முற்றுகைகள் நடைபெற்றன. கடைகளில் சேதம் ஏற்படுத்துவது, பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துவது உள்ளிட்ட சம்பங்களும் கூட நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அக்டோபர் 20ம் தேதி விரிவான பாதுகாப்பு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. சிறார்கள் சொத்துகளை சேதப்படுத்தினால், அவர்களின் பெற்றோரிடம் நேரடியாக இழப்பீடு கோர முடியும். இழப்பீட்டை வசூலிக்க பெற்றோரின் சொத்துகளைப் பறிமுதல் செய்வது அல்லது அரசு வழங்கும் உதவித்தொகையிலிருந்து பணத்தைக் கழிப்பது போன்ற நடவடிக்கைகளுக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் பொது பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டால், ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் 20,000 யூரோ வரை அபராதமும் விதிக்கப்படலாம். சட்ட ஒழுங்குக்கு ஆபத்தானவர்கள் என கருதப்படும் 14 முதல் 17 வயதுடைய சிறுவர்களை முன்னெச்சரிக்கையாக காவலில் வைக்கும் அதிகாரமும் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸ் மற்றும் இத்தாலி என இரு நாடுகளிலுமே வன்முறை போராட்டங்கள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பெரிதாக வெடித்துள்ள நிலையில், இந்த நடவடிக்கைகள் முக்கியமானதாக மாறியுள்ளன. இருப்பினும், இதன் மூலம் போராட்டங்களை கட்டுக்குள் கொண்டு வர முடியுமா என்பது உறுதியாக தெரியவில்லை. இதனால் குழப்பமான ஒரு சூழலே நிலவுகிறது. மாணவர்களின் போராட்டங்கள் வன்முறையாக மாறுவதைத் தடுக்கவும், பொதுச் சொத்துகளுக்கு ஏற்படும் சேதங்களைக் கட்டுப்படுத்தவும் பிரான்ஸ் மற்றும் இத்தாலி அரசுகள் பெற்றோரின் பொறுப்பை முன்னிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.பிரான்ஸ்
இத்தாலி
5 ஆண்டுகள்
குழப்பம்