எவரெஸ்ட் மலையில் காணாமல் போன வழிகாட்டி! இறுதி சடங்கு செய்த பிறகு உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்!


  • காத்மாண்டு: எவரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போய், இறந்துவிட்டார் என்று கருதப்பட்ட நேபாள ஷெர்பா வழிகாட்டி ஒருவர், 6 நாட்களுக்குப் பிறகு அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்ட நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது அவ்வளவு லேசுபட்ட காரியம் கிடையாது. ஒருமுறை ஏறினாலே நாக்கு தள்ளிவிடும். அப்படியெனில், வழிகாட்டியாக இருக்கும் நபர்களை நினைத்து பாருங்கள். இருப்பினும் நேபாள நாட்டை சேர்ந்த வழிகாட்டி ஒருவர் எவரெஸ்ட் மலையில் காணாமல் போய் 6 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறார்.

    Advertisement

    என்ன நடந்தது?

    52 வயதான தாவா ஷெர்பா என்ற அனுபவமிக்க நேபாள மலை ஏறும் வழிகாட்டி, கடந்த மே 29 அன்று எவரெஸ்ட் சிகரத்திலிருந்து கீழே இறங்கும்போது காணாமல் போனார். அவருடன் சென்ற போலந்து நாட்டைச் சேர்ந்த பயணி பேஸ் கேம்ப் வந்து சேர்ந்தார், ஆனால் தாவா வந்து சேரவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த நேபாள அரசாங்கம் தேடுதல் பணியை தொடங்கியது. ஹெலிகாப்டர்கள் மூலமாகத் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் இறந்துவிட்டதாகவே அனைவரும் கருதினர். ஆனால், 6 நாட்களுக்குப் பிறகு அதாவது இன்று காலையில், எவரெஸ்ட்டின் மிக அபாயகரமான பகுதியான 'கும்பு பனிக்கட்டிப் பாதையில்' பனிச்சரிவுகளுக்கு இடையே அவர் பேஸ் கேம்பை நோக்கித் தனியாக தவழ்ந்து வந்துகொண்டிருந்ததை எவரெஸ்ட் தூய்மைப் பணிக்குழுவினர் கண்டுபிடித்தனர்.

    Advertisement

    உடனடியாக மீட்கப்பட்ட அவருக்கு உணவும் தண்ணீரும் வழங்கப்பட்டு, ஹெலிகாப்டர் மூலம் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள ஹாம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

    தாவா ஷெர்பா இனி உயிருடன் வர வாய்ப்பில்லை என்று கருதி, அவரது மனைவி தாமு ஷெர்பா மற்றும் மகள் மெண்டோ லாமு ஷெர்பா ஆகியோர் தங்களின் மத வழக்கப்படி பல நாட்கள் நடைபெறும் இறுதிச்சடங்கு வழிபாடுகளைத் தொடங்கினர்.

    இறுதிச்சடங்கின் இரண்டாவது நாளில், உள்ளூர் செய்திகள் மற்றும் தெரிந்தவர் ஒருவர் போன் மூலம் தாவா உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் என்ற தகவலைக் கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்தனர்.

    Advertisement

    முதலில் தங்களால் இதை நம்ப முடியவில்லை என்றும், பின்னர் மீட்புக் குழுவினரிடம் புகைப்படம் கேட்டுப் பெற்று, அவர்தான் தங்களின் தந்தை என்பதை உறுதி செய்துகொண்ட பிறகே அளவற்ற மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவரது மகள் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Everest: The miraculous rescue—six days later and still alive—of a Nepali Sherpa guide who had gone missing on Mount Everest and was presumed dead has evoked deep emotion.