இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக்

  • வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் தொழில்நுட்ப நிறுவனமான 'ஓபன்டோர்', இந்தியாவில் உள்ள தனது ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் முற்றிலுமாக மூடிவிட முடிவு செய்திருக்கிறது இந்த அதிரடி முடிவால் இந்தியாவில் பணிபுரிந்து வந்த சுமார் 250 ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழக்கிறார்கள். அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் அனைவரும் அமெரிக்கர்கள் என்பதால், அங்கேயே வேலைகளை செய்ய முடிவு செய்துள்ளது. அதேபோல் அமெரிக்காவில் அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் பணியாளர்கள் எண்ணிக்கை நிறுவனத்தில் கணிசமாக குறைந்துள்ளளது. இதுபற்றி ஓபன்டோர் நிறுவனத்தின் சிஇஓ சிஇஓ காஸ் நெஜாடியன் விளக்கமும் அளித்துள்ளார்.

    Advertisement

    அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் தொழில்நுட்ப நிறுவனமான 'ஓபன்டோர்' முன்பு பல்வேறு சிஸ்டம்களில் இருந்த மேனுவல் வேலைகளை கையாள்வதற்காகவே இந்தியாவில் இந்த பெரிய குழுவை உருவாக்கியது. ஆனால் தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அமெரிக்காவிலேயே கொண்டுவரப்பட்டுள்ள AI தொழில்நுட்பக் குழுக்களின் காரணமாக, இந்திய ஊழியர்களின் தேவை குறைந்துள்ளது. எனவே, செயல்பாடுகளை எளிமைப்படுத்த அனைத்து பணிகளையும் அமெரிக்காவிற்கே மாற்ற நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    Advertisement

    இதுபற்றி ஓபன்டோர் நிறுவனத்தின் சிஇஓ சிஇஓ காஸ் நெஜாடியன் அளித்துள்ள விளக்கத்தில், "வணக்கம், நமது ஓப்பன்தோர் நிறுவனத்தில் கொண்டு வரப்படும் ஒரு பெரிய மாற்றத்தைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சில மாதங்களுக்கு முன்பு நாம் 'ஓப்பன்தோர் 2.0' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியபோது, இந்தியாவில் நமக்கு சுமார் 250 ஊழியர்கள் இருந்தார்கள். கடந்த சில மாதங்களாகவே, அங்குள்ள வேலைகளில் சிலவற்றை அமெரிக்காவிற்கு மாற்றிக் கொண்டுதான் இருக்கிறோம்.

    இப்போது அந்த இறுதி முடிவை எடுத்துவிட்டோம். இந்தியாவில் நடக்கும் நமது நிறுவனத்தின் வேலைகளை முழுமையாக நிறுத்தப் போகிறோம். இது, இதுவரை நம் நிறுவனத்திற்காக உண்மையோடும் உழைப்போடும் வேலை செய்த இந்தியாவில் உள்ள நமது சக ஊழியர்கள் அனைவரையும் பாதிக்கும் ஒரு கடினமான முடிவுதான்.

    Advertisement

    ஏன் இந்த மாற்றத்தைச் செய்கிறோம்?

    நமது வாடிக்கையாளர்கள் அனைவரும் அமெரிக்காவில் இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கான வேலைகளை அவர்களுக்கு அருகிலிருந்தே கவனிப்பதுதான் சரியாக இருக்கும். கடந்த சில வருடங்களாக, கம்ப்யூட்டரில் தனித்தனியாக இருந்த வேலைகளையும், மனிதர்களாகப் பார்த்துப் பார்த்து செய்ய வேண்டிய மேனுவல் வேலைகளையும் கையாள்வதற்காகத்தான் இந்தியாவில் ஒரு பெரிய குழுவை உருவாக்கினோம்.

    ஆனால், இப்போது அந்தத் தனித்தனி வேலைகள் அனைத்தையும் நாம் ஒரே தொழில்நுட்பத்தின் கீழ் கொண்டு வந்துவிட்டோம். அதுமட்டுமில்லாமல், அமெரிக்காவிலேயே அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் சிறிய குழுக்களை அமைத்துள்ளோம். இதனால், இனி இந்த வேலைகள் அனைத்தையும் வாடிக்கையாளர்களுக்கு மிக அருகிலேயே நேரடியாகச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    இந்த மாற்றத்திற்குப் பிறகு, நமது நிறுவனத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை குறையலாம். ஆனால், நமது நிறுவனத்தின் வளர்ச்சியும் தாக்கமும் முன்பை விடப் பல மடங்கு அதிகமாக இருக்கும். நாம் உருவாக்கியுள்ள புதிய தொழில்நுட்பக் கருவிகளின் உதவியோடு, இங்குள்ள ஊழியர்கள் இன்னும் கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு, புதிய விஷயங்களை உருவாக்குவார்கள்.

    நமது வேலைகளில் இனி என்னென்ன மாற்றங்கள் வரும்?

    வேலைகள் எளிமையாகும்

    குழப்பமான பல கம்ப்யூட்டர் டூல்களையும், தேவையில்லாத வேலை முறைகளையும் குறைத்து, பணிகளைச் சுலபமாக்கப் போகிறோம். ஒரு வீட்டை வாங்குவது, புதுப்பிப்பது, அப்புறம் விற்பது என எல்லாவற்றையும் நிறுவனத்தில் உள்ள யார் வேண்டுமானாலும் ஒரே கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் பார்த்துத் தெரிந்துகொள்ளும் வகையில் ஒரே பொதுவான சிஸ்டத்தை உருவாக்கப் போகிறோம்.

    Advertisement

    மேனுவல் வேலைகளுக்கு குட்பை

    மனிதர்களே உட்கார்ந்து ஒவ்வொன்றாகச் செய்து கொண்டிருந்த பழைய வேலை முறைகளை நிறுத்திவிட்டு, எல்லாவற்றையும் நவீன தொழில்நுட்பமாக மாற்றப் போகிறோம்.

    இந்திய ஊழியர்களுக்கு இதனால் என்ன நடக்கும்?

    வேலை இழக்கும் ஊழியர்களுக்கு இது ஒரு கஷ்டமான நேரம்தான் என்பதை நான் புரிகிறேன். அதனால் அவர்களுக்குத் தேவையான பணிநீக்கக் காலப் பணம், அவர்கள் வேறு நிறுவனங்களில் புதிய வேலை தேடிக் கொள்வதற்கான உதவிகள் மற்றும் தேவையான அனைத்து ஆதரவுகளையும் நாங்கள் நிச்சயம் செய்வோம். இங்கிருக்கும் முக்கிய வேலைகளை அமெரிக்காவிற்கு முழுமையாக மாற்றி முடிக்கும் வரை, இந்தியாவில் உள்ள ஒரு சில ஊழியர்கள் மட்டும் தற்காலிகமாகத் தொடர்ந்து பணியாற்றுவார்கள்.

    Advertisement

    இந்த முடிவு இந்திய ஊழியர்களின் திறமைக் குறைபாட்டால் எடுக்கப்பட்டது அல்ல. அவர்கள் அனைவரும் மிகவும் திறமையானவர்கள். எந்த ஒரு நிறுவனம் அவர்களை வேலைக்கு எடுத்தாலும், அந்த நிறுவனத்திற்கு அவர்கள் ஒரு பெரிய பலமாக இருப்பார்கள். ஓப்பன்தோர் நிறுவனம் இன்று இந்த அளவிற்கு வளர்ந்திருப்பதற்கு இந்திய ஊழியர்கள் ஆற்றிய பங்கு மிகப்பெரியது, அதற்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன்.

    ஊழியர்கள் குறைந்தாலும் நமது நிறுவனத்தின் லட்சியத்திலோ அல்லது வலிமையிலோ எந்த மாற்றமும் இல்லை. அமெரிக்காவில் உள்ள மக்களின் வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து, அவர்களுக்குச் சிறந்த சேவை வழங்குவதில் நாம் எப்போதும் போல் உறுதியாக இருப்போம்." இவ்வாறு கூறியுள்ளார்.

    இதனிடைய சிஇஓ வெளியிட்ட இன்னொரு பதிவில், "நீங்கள் ஆட்களை வேலைக்கு அமர்த்துகிறீர்கள் மற்றும் இந்தியாவில் உங்களுக்குச் செயல்பாடுகள் உள்ளன என்றால், இவர்கள் மிகச் சிறந்த பணியாளர்கள். இதை எனது பரிந்துரைக் கடிதமாகக் கருதி, இவர்களைப் பணியில் அமர்த்துங்கள்" பரிந்துரை செய்துள்ளார்.

    ஓப்பன்தோர் நிறுவனம் செய்திருப்பது ஒரு ஆரம்பம்தான். ஆமாம், இதேபோல் பல அமெரிக்க நிறுவனங்கள் தங்களது அவுட்சோர்சிங் வேலைகளை மீண்டும் அமெரிக்காவிற்கே கொண்டு செல்லும் ஆபத்து தற்போதைய ஏஐ யுகத்தில் ஓரளவுக்கு இருக்கிறது. முன்பெல்லாம் ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு 100 பேர் செய்ய வேண்டிய மேனுவல் வேலைகள் (டேட்டா என்ட்ரி, சிஸ்டம் பராமரிப்பு, பேசிக் கோடிங், கஸ்டமர் சப்போர்ட்) தேவைப்பட்டால், அமெரிக்காவில் சம்பளம் அதிகம் என்பதால் அதை இந்தியா போன்ற நாடுகளுக்கு அவுட்சோர்ஸ் செய்வார்கள்.

    ஆனால் இப்போது, AI-Native மற்றும் Agentic AI (தானாகவே முடிவெடுக்கும் ஏஐ கருவிகள்) போன்ற தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. இதன் மூலம் அமெரிக்காவில் இருக்கும் 5 பேர் கொண்ட ஒரு சிறிய குழு, இந்த ஏஐ கருவிகளின் உதவியோடு முன்பு 50 பேர் செய்த வேலையைச் செய்து முடித்துவிடுகிறது. இதனால் நிறுவனங்கள் "ஏன் தேவையில்லாமல் வேறு நாட்டில் பெரிய குழுவை வைக்க வேண்டும், இங்கேயே சிறிய டீம் மூலம் வாடிக்கையாளர்களை நேரடியாகக் கவனிக்கலாமே" என்று நினைக்கத் தொடங்கியுள்ளன.

    தினமும் ஒரே மாதிரியாகச் செய்யப்படும் டேட்டா பிராசஸிங், ஃபார்ம் ஃபில்லிங் வேலைகள் இனி இருக்காது. அதேபோல் மென்பொருளில் உள்ள பிழைகளைக் கண்டுபிடிக்கும் சாதாரண டெஸ்டிங் வேலைகளை இப்போது AI ஆப்கள் மிக வேகமாகச் செய்துவிடுகின்றன. சாதாரண கோட் ஸ்கிரிப்ட்களை எழுதுவதற்கு கிட்ஹப் கோபைலட் போன்ற டூல்களையே நிறுவனங்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இதனால் ஜூனியர் லெவல் வேலைகள் உலகளவில் குறைந்து வருகின்றன.


    இந்திய ஐடி துறைக்கு இது முழுமையான வீழ்ச்சியா?

    இந்தியா வெறும் 'குறைந்த கூலிக்கு ஆள் கிடைக்கும் இடம்' என்ற நிலையைத் தாண்டி, திறமையான பொறியாளர்களின் மையமாக மாறிவிட்டது. எனவே, இந்த ஏஐ அலையைச் சமாளிக்க இந்திய ஐடி நிறுவனங்களும், ஊழியர்களும் தங்களை மாற்றி வருகிறார்கள். இனி "எங்களிடம் 50,000 ஊழியர்கள் இருக்கிறார்கள்" என்று சொல்லி இந்திய நிறுவனங்கள் ஆர்டர் வாங்க முடியாது. "எங்களிடம் 5,000 ஏஐ திறமை வாய்ந்த ஊழியர்கள் இருக்கிறார்கள், அவர்கள் 50,000 பேரின் வேலையை அதிவேகமாகச் செய்வார்கள்" என்று மாற வேண்டும். உயர் தொழில்நுட்ப வேலைகளுக்கு மவுசு அதிகம்.ஏஐ மாடல்களை உருவாக்குவது , சைபர் செக்யூரிட்டி , க்ளவுட் ஆர்கிடெக்சர் , மற்றும் ஏஐ சிஸ்டம்களை நிர்வகிக்கும் ஆர்கிடெக்ட் வேலைகளுக்கான தேவை இந்தியாவில் பல மடங்கு அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.

    மென்பொருள் துறையில் 'மனித உழைப்புக்கு பதிலாக கம்ப்யூட்டர் கம்ப்யூட்டிங்'என்ற வர்த்தகப் போர் தொடங்கிவிட்டது. தொழில்நுட்பத்தை வெறும் 'ஆபரேட்' மட்டும் செய்யும் சாதாரண ஐடி ஊழியர்களின் வேலைகளுக்குப் பெரிய ஆபத்து உள்ளது. ஆனால், தங்களை AI திறமைகளோடு அப்டேட் செய்து கொள்ளும் இந்திய ஐடி ஊழியர்களுக்கு சர்வதேச அளவில் இன்னும் புதிய வாய்ப்புகள் உருவாகிக் கொண்டேதான் இருக்கும்.

    Topics: #us #india #jobs #it

    English Summary

    'Opendoor,' a prominent US-based real estate technology company, has decided to completely shut down its operations in India. As a result of this drastic move, approximately 250 employees in India are losing their jobs. Read the CEO’s note.