மஸ்கட்: ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் ஓமன் அருகே இந்திய கொடியுடன் பயணித்த சரக்கு கப்பல் மீது திடீரென்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குஜராத்தை சேர்ந்த மாலுமி துடிதுடித்து பலியானார். 14 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இதனை மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
''நவம்பர் 2ம் தேதி (நேற்று) இந்தியாவின் MSV AL JUSUFI சரக்கு கப்பல் 14 இந்திய மாலுமிகளுடன் பயணித்தது. இந்த கப்பல் ஓமன் கடல் அருகே வந்தபோது வானில் இருந்து வேகமாக வந்த அடையாளம் தெரியாத பொருள் ஒன்று தாக்கியது.
இதில் 13 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஓமன் கடற்படையால் மீட்கப்பட்டனர். ஆனால் ஒரு மாலுமியை காப்பாற்ற முடியவில்லை. அவரது பெயர் கந்தார் நஹிம் அஜி. குஜராத்தை சேர்ந்தவர். இவர் தாக்குதலில் படுகாயமடைந்து இறந்துள்ளார். அவரது குடும்பத்தினரிடம் மத்திய கடல் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் ஓமன் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. மீட்கப்பட்ட 13 மாலுமிகளையும் இந்தியா அழைத்து வர மற்றும் இறந்தவரின் உடலை இந்தியா கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் வேகமாக எடுத்து வரப்படுகிறது'' என கூறியுள்ளார்.