என் உடலில் இருப்பது இந்திய DNA.. பெருமையாக சொன்ன இந்தோனேசிய அதிபர்.. பூரித்து போன பிரதமர் மோடி

  • ஜகார்த்தா: அரசு முறை பயணமாக இந்தோனேசியா சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, தனது உடலில் இந்திய டிஎன்ஏ இருப்பதாகவும் இதனால் தான் இந்திய பாடல்களுக்கு நடனமாடுவதாகவும் குறிப்பிட்டார். மேலும், இந்தியாவிடம் இருந்து இந்தோனேஷியா பல விஷயங்களைக் கற்க வேண்டி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    Advertisement

    பிரதமர் மோடி அரசு முறை பயணமாக இந்தோனேசியா சென்றிருந்தார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதன்படி ஜகார்த்தாவில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினர் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இந்தோனேசிய அமைச்சர்கள், இந்திய வம்சாவளியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    Advertisement

    முக்கியமான சந்திப்பு

    அப்போது பேசிய இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, இந்திய நாகரிகம் இந்தோனேசியாவின் கலாச்சாரம், மொழி மற்றும் சமூக வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், தனது உடலில் இந்திய டிஎன்ஏ இருப்பதாகக் கூறிய பிரபோவோ சுபியாண்டோ, இந்தியாவின் அனுபவங்களில் இருந்து இந்தோனேசியர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

    இந்திய டிஎன்ஏ

    அவர் மேலும் பேசுகையில், "இந்தியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்வதற்கு முன்பு நான் ஜீனோமிக் டிஎன்ஏ பரிசோதனை செய்தேன். அதில் எனது உடலில் இந்திய டிஎன்ஏ இருப்பது தெரியவந்தது. அதனால் தான் இந்திய இசையைக் கேட்டாலே என் உடல் தானாகவே நடனமாடத் தொடங்குகிறது என்று நினைக்கிறேன்! நான் மட்டுமல்ல.. என்னுடைய சக அமைச்சர்களும், ராணுவ அதிகாரிகளும் கூட இந்தியப் பாடல்களைப் பாடவும், நடனமாடவும் விரும்புகிறார்கள். அவர்களுக்கும் இந்திய டிஎன்ஏ இருக்கலாம்.

    Advertisement

    பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த தலைவர். அவரது பல கொள்கைகளை நானும் பின்பற்றுகிறேன். இந்தோனேசியாவின் நாகரிகமும், கலாச்சாரமும் இந்திய நாகரிகத்தின் தாக்கத்தால் உருவாகியவை. இரண்டிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எங்கள் மொழியில் சுமார் 50 சதவீத வார்த்தைகள் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தவை. எங்கள் நாட்டில் பலரது பெயர்களும் சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டவை. இதனால் இந்தியாவுடன் எங்களுக்கு ஆழமான கலாச்சார உறவு உள்ளது. இனி இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு மேலும் வலுப்பெற வேண்டும்" என்றார்.

    பிரதமர் மோடி

    இதற்குப் பதிலளித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "பிரபோவோ சுபியாண்டோ இந்தியாவின் உண்மையான நண்பர். உங்கள் உடலில் இந்திய டிஎன்ஏ இருப்பதாகக் கூறியது ஒவ்வொரு இந்தியரின் மனதையும் தொட்டுள்ளது. அந்த டிஎன்ஏ என்பது பரஸ்பர நம்பிக்கை, பகிரப்பட்ட பாரம்பரியம் மற்றும் வரலாற்று நினைவுகளால் உருவானது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    Advertisement

    ஜனநாயகம்

    மேலும், இரு நாடுகளும் உலகின் மிக முக்கியமான ஜனநாயக நாடுகள் என குறிப்பிட்ட பிரபோவோ, ஜனநாயகத்தைப் பாதுகாப்பது இரு நாடுகளின் பொறுப்பு என்றும் கூறினார். அவர் மேலும், "பிரதமர் மோடியுடன் இன்று மிகவும் முக்கியமான சந்திப்பு நடைபெற்றது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் இந்தியாவும், இந்தோனேசியாவும் முக்கியமானவை. ஜனநாயகம் என்பது நீதி, நம்பிக்கை மற்றும் அனைவரையும் உள்ளடக்கும் ஆட்சிக்கான சிறந்த வழி என்பதே எங்கள் கருத்து" என்றார்.

    English Summary

    Indonesia President Prabowo Subianto said a DNA test showed he has Indian ancestry and urged Indonesians to learn from India's achievements(இந்தோனேசியாவுக்கு சென்ற பிரதமர் மோடி): Prime minister Narendra Modi Indonesia trip.