போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்?

  • மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் விதித்த மிக முக்கியமான அணுசக்தி நிபந்தனை ஒன்றை ஈரான் அரசாங்கம் தற்போது முற்றிலுமாக நிராகரித்துள்ளது.

    Advertisement

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஈரானிடம் வலியுறுத்தி வரும் முக்கிய நிபந்தனையான 'செறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்பை நாட்டை விட்டு வெளியே மாற்ற வேண்டும்' என்ற கோரிக்கையை ஈரான் முழுமையாக நிராகரித்துள்ளது. இந்த முடிவு, இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    உறுதியான எதிர்ப்பு

    ஈரான் அதிகாரிகள், யுரேனிய இருப்பு விவகாரம் தற்போதைய அமைதி பேச்சுவார்த்தை கட்டமைப்பில் இடம்பெறவில்லை என்று தெளிவாகக் கூறியுள்ளனர். அமெரிக்காவின் இந்தக் கோரிக்கையை ஈரான் தனது முக்கிய நிலைப்பாட்டுக்கு எதிரானதாகக் கருதுகிறது. ஈரான் தரப்பில், இந்த யுரேனிய இருப்பு எதிர்காலத்தில் தங்களுக்கு ஒரு முக்கியமான மூலோபாய உத்தரவாதமாக (Strategic Guarantee) செயல்படும் என்று வலியுறுத்தப்படுகிறது.

    யுரேனியம் இருப்பு

    ஈரானிடம் தற்போது 60 சதவீத தூய்மையுடன் செறிவூட்டப்பட்ட சுமார் 970 பவுண்ட் (கிட்டத்தட்ட 440 கிலோ) எடையுள்ள அதிபயங்கர யுரேனியம் இருப்பு உள்ளது.

    ஈரானிடம் தற்போதுள்ள 60 சதவீத தூய்மையுள்ள யுரேனியம் என்பது தொழில்நுட்ப ரீதியாக ஆயுதக் தரத்திற்குக் கீழ் மட்டத்தில் இருந்தாலும், ஈரானிடம் தற்போது பயன்பாட்டில் உள்ள செறிவூட்டும் அணு உலை வசதிகள் (Enrichment Facility) இருப்பதால், ஈரான் அரசு நினைத்தால் போதும் தற்போதைய 60 சதவீத செறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்பை வெறும் சில நாட்களிலோ அல்லது வாரங்களிலோ 90 சதவீத ஆயுதத் தரத்திற்கு அவர்களால் எளிதாக மாற்ற முடியும் என்று அணுசக்தி நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    Advertisement

    ஈரானிடம் தற்போது கையிருப்பில் உள்ள இந்த உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அடுத்தகட்டமாகச் சுத்திகரிப்புச் செய்தால், அதனைக் கொண்டு தோராயமாக 10 அணு ஆயுதங்களை (Nuclear Weapons) உருவாக்க முடியும் என கணித்துள்ளனர்.

    பேச்சுவார்த்தை சிக்கலில்

    அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் மோதலுக்கு தீர்வு காணும் வகையில் 60 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தம் மற்றும் அணு ஆயுதத் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பேச்சுகளில் யுரேனிய இருப்பை வெளியேற்றுவது அமெரிக்காவின் முக்கிய நிபந்தனையாக இருந்தது. ஆனால் ஈரான் இதை ஏற்க மறுத்துள்ளதால், பேச்சுவார்த்தைகள் முக்கிய தடையை எதிர்கொண்டுள்ளன.

    Advertisement

    ஈரானின் இந்த உறுதியான நிலைப்பாடு, அமெரிக்காவின் அழுத்தத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், இஸ்ரேல் தரப்பில் இருந்து டிரம்ப் நிர்வாகத்துக்கு கடுமையான அழுத்தம் ஏற்பட்டு வருவதும் சிக்கலை அதிகரித்துள்ளது.

    உலகப் பொருளாதாரத்துக்கு தாக்கம்

    ஈரான்-அமெரிக்க பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள இந்தப் முட்டுக்கட்டை, உலக அளவில் எண்ணெய் விலை உயர்வு மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் எண்ணெய் போக்குவரத்து மீண்டும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

    மொத்தத்தில், ஈரானின் இந்த மறுப்பு, அமெரிக்காவிற்கு கூடுதலாக சிக்கலாக்கியுள்ளது. அடுத்த சில நாட்களில் இந்தப் பிரச்சனைக்கு ஏதேனும் தீர்வு காணப்படுமா அல்லது மீண்டும் மோதல் அதிகரிக்குமா என்பதைப் பொறுத்தே உலகப் பொருளாதாரத்தின் அடுத்த கட்டம் அமையும்.

    English Summary

    Iran has outright rejected the Trump administration’s key demand to move its enriched uranium stockpile out of the country, calling it a strategic guarantee. This major setback complicates ongoing ceasefire and nuclear negotiations, raising fears of renewed conflict and global oil price volatility.