மிஸ்டர் டிரம்ப்.. ஈரான் எப்போதும் யாருக்கும் மண்டியிடாது.. திட்டவட்டமாக சொன்ன அதிபர் பெசஷ்கியான்

  • வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானை அழித்துவிட முடியும் என்று எச்சரித்த மறுநாளே, ஐநா பொது சபையில் உரையாற்றிய ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் முக்கிய தகவல்களை பகிர்ந்தார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வருவதாகவும், அமெரிக்காவிடம் மண்டியிட போவதில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

    Advertisement

    அமெரிக்காவில் நடந்து வரும் ஐநா சபை கூட்டத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசி வருகிறார்கள். அதில் நேற்று முன்தினம் தினம் பேசிய டிரம்ப், ஈரானை மிக கடுமையாக எச்சரித்திருந்தார். ஈரான் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்றும் இல்லையென்றால் ஈரானை மொத்தமாக அழித்துவிடுவோம் என மிரட்டியிருந்தார்.

    Advertisement

    ஈரான் அதிபர்

    இதற்கிடையே நேற்று ஐநா சபையில் பேசிய ஈரான் அதிபர் பெசஷ்கியான் பல முக்கிய விஷயங்கள் குறித்தும் விரிவாக பேசினார். போரின் கோரம் குறித்தும் ஈரான் அதை எப்படி சமாளித்து வருகிறது என்பது தொடர்பாகவும் பேசியிருந்தார். அப்போது ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள ஷாஜரே தாயெபே தொடக்க பள்ளி மீது அமெரிக்கா- ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் தொடர்பான போட்டோக்களை காட்டினார்.

    2026 பிப்ரவரி 28ம் தேதி போர் தொடங்கிய சமயத்தில் நடத்தப்பட்ட இந்த ஏவுகணை தாக்குதலில் பள்ளி கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், இதில் 120க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். உயிரிழந்த 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களின் போட்டோவையும், மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் போட்டோவையும் அவர் கையில் வைத்திருந்தார். அதை அவர் சர்வதேச பிரதிநிதிகளிடம் காட்டினார்.

    Advertisement

    தற்காப்பு மட்டுமே!

    ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டிய பெசஷ்கியான், ஈரான் தன்னை தற்காத்து கொண்டதாகவும் இப்போது வரை தற்காப்பு நடவடிக்கைகளை மட்டுமே எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். அவர் மேலும், "நாங்கள் எங்களை மட்டுமே தற்காத்து கொண்டோம். நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல. எங்கள் மக்கள் மீது கோழைத்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. எங்கள் நாட்டின் மீது தாக்குதல்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் திணிக்கப்பட்டன.

    அமெரிக்காவும் இஸ்ரேலும் எங்களைத் தாக்கிய போது, நாங்கள் முழு பலத்துடன் எங்களை தற்காத்து கொண்டோம். ஆம், அவர்கள் எங்களைத் தாக்கினார்கள். ஆனால் நாங்கள் மண்டியிடவில்லை" என்றும் அமெரிக்காவை நேரடியாக சுட்டிக்காட்டி பெசஷ்கியான் ஆவேசமாக பேசினார். அதேநேரத்தில் போரில் ஈரான் சரணடையாது என்று தெரிவித்த பெசஷ்கியான், போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

    Advertisement

    ஹார்முஸ்

    அமெரிக்கா ஈரான் மோதலில் ஹார்முஸ் ஜலசந்தியும் முக்கிய விவகாரமாக மாறியுள்ளது. போருக்கு முன்பு உலகின் மொத்த கச்சா எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீர்வழி பாதை வழியாக நடந்தது. இதனை சுட்டிக்காட்டிய பெசஷ்கியான், "ஹார்முஸ் ஜலசந்தி மூலம் அனைவரும் பயனடையும் நிலையில், எங்கள் கப்பல்களுக்கு மட்டுமே அனுமதி மறுக்கப்படுவது எப்படி நியாயமாகும்?" என்று கேள்வி எழுப்பினார்.

    ஈரான் வேதனை

    அவர் மேலும், இஸ்ரேல் தொடர்ந்து அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கிறது.. ஆனால் பொருளாதார தடைகள் ஈரான் மீது மட்டுமே விதிக்கப்படுகின்றன. இந்த முரண்பாட்டை கேட்டால் சிரிப்புதான் வரும்.. அமெரிக்காவின் சுயநலத்திற்காக ஈரானிய மக்கள் தண்டிக்கப்படுகிறார்கள். ஒரு நாட்டின் ஒட்டுமொத்த மக்களையே அமெரிக்கா பலிகடா ஆக்குகிறது" என்று வேதனை தெரிவித்தார்.

    Advertisement

    உரையின் இறுதியில் டிரம்பின் பெயரை நேரடியாகக் குறிப்பிட்ட அவர், "மிஸ்டர் டிரம்பும், எங்களை மிரட்ட முயல்பவர்களும் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். வலுக்கட்டாயமான எங்கள் மீது எதையும் திணிக்காதீர்கள்.. பேச்சுவார்த்தை, ராஜதந்திரம் மற்றும் சமரசத்துக்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்" என்றார்.

    English Summary

    Iranian President Masoud Pezeshkian responded to Donald Trump’s warning against Iran(அமெரிக்காவை மிரட்டிய ஈரான்): Iran President Pezeshkian latest news in tamil.