ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!

  • அமெரிக்கா - இஸ்ரேல் போருக்கு மத்தியில் ஈரான் மக்கள் உள்நாட்டுக்குள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதில் மிக முக்கியமானது இண்டர்நெட் முடக்கம். ஈரான் நாட்டு மக்கள் ஜனவரி மாதம் முதல் இண்டர்நெட் முடக்கத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். இதற்கு விடிவு காலம் பிறந்துள்ளது.

    Advertisement

    ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் நாடு முழுவதும் இணைய சேவையை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவு பிறப்பித்துள்ளார். ஈரானில் கிட்டத்தட்ட முழுமையான இண்டர்நெட் தடை 87 நாட்களுக்கு மேல் நீடித்து வந்த நிலையில் மீண்டும் இண்டர்நெட் சேவை நடைமுறைக்கு வந்துள்ளது.

    Advertisement

    இண்டர்நெட் கண்காணிப்பு அமைப்பான நெட் பிளிக்ஸ் வெளியிட்ட தகவலின்படி, இந்த தடை மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் நடைபெற்ற காலகட்டத்தில் மக்கள் பாதுகாப்பு தகவல்களை பெறுவதில் கூட சிக்கல் ஏற்பட்டது. இதோடு இண்டர்நெட்-ஐ முக்கியமானதாக நம்பியிருக்கும் தொழில்கள் மற்றும் வியாபாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

    இந்த ஆண்டு ஜனவரி 8-ம் தேதி அரசுக்கு எதிராக ஈரான் மக்கள் நாடு தழுவிய போராட்டங்களை நடத்தினர், இதை கட்டுக்குள் கொண்டு வர ஈரான் அரசு முதன் முதலில் இந்த இண்டர்நெட் தடை முதன்முதலில் அமல்படுத்தப்பட்டது. பிப்ரவரி மாதத்தில் சில நாட்களுக்கு இணைய சேவை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியது. ஆனால் பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டு தாக்குதல்கள் தொடங்கியதை அடுத்து மீண்டும் முழு தடை விதிக்கப்பட்டது.

    Advertisement

    இணைய தடை காரணமாக பொதுமக்கள் உலக நிகழ்வுகள் மற்றும் உள்ளூர் தகவல்களை உடனடியாக அறிய முடியாமல் போனது பெரும் நெருக்கடியை உருவாக்கியது. முக்கியமாக போர் தாக்குதல் நேரத்தில் மக்கள் பாதுக்காப்பு சார்ந்த தகவல்களையும் பகிர முடியாமல் போனது.

    இதோடு இண்டர்நெட் முடக்கம் காரணமாக மருத்துவம், கல்வி, வங்கி சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளும் பாதிக்கப்பட்டன. சிறு வியாபாரிகள் மற்றும் இணைய அடிப்படையிலான தொழில்கள் செய்பவர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். நீண்ட நாட்களாக தொடர்ந்த இந்த தடை ஈரான் மக்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைத்துள்ளதாக பல தரப்பினரும் கவலை தெரிவித்தனர்.

    Advertisement

    அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை

    தற்போது அமெரிக்கா - ஈரான் மத்தியில் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈரானிடம் இருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மொத்தமாக கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்த நிலையில், ஈரான் முழுமையாக மறுத்துவிட்டது.

    இதேபோல் ஈரான் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளில் அமெரிக்கா சிலவற்றை ஏற்க தயாராக இருந்தாலும் இஸ்ரேல், சவுதி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை அமெரிக்காவை தடுத்து நிறுத்தியது. இதன் மூலம் மொத்த பேச்சுவார்த்தை மீண்டும் கிரவுண்ட் ஜீரோவுக்கு வந்துள்ளது.

    ஈரான் அணுசக்தி திட்டத்தை மொத்தமாக கைவிடுவது தான் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் ஈரான் இதற்கு சற்றும் வளைந்துக்கொடுக்காமல் நிற்கிறது. இதேபோல் ஈரான் ஹார்முஸ் வழித்தடத்தை மொத்தமாக கைப்பற்றி இனி வரும் காலத்தில் ஒவ்வொரு கப்பல்களுக்கும் கட்டணத்தை வசூலிக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இதற்கு அமெரிக்காவும், உலக நாடுகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    Advertisement

    இதேவேளையில் அமெரிக்க கடற்படை கப்பல்கள் பெர்சியன் கடலில் நிறுத்தி வைக்கப்பட்ட காரணத்தால் ஈரான் துறைமுகம் முழுமையாக முடங்கியுள்ளது. இதனால் ஏற்றுமதி, இறக்குமதி என அனைத்தும் முடங்கி உணவு பொருட்கள் முதல் கச்சா எண்ணெய் வர்த்தகம் வரையில் அனைத்தும் பாதித்துள்ளது.

    English Summary

    After more than 87 days of severe internet restrictions that disrupted daily life, businesses, and access to critical information during US-Israel strikes, Iranian President Masoud Pezeshkian has directed the full restoration of internet services across the country. This development comes as diplomatic negotiations between the US and Iran remain stalled over Tehran’s nuclear programme, sanctions, and control of key maritime routes in the Persian Gulf.