இங்க அடிச்சா.. அங்க வலிக்கும்! குவைத் - பஹ்ரைனை பந்தாடும் ஈரான்! அட்டாக்குக்கு ரெடியாகும் அமெரிக்கா?

  • டெஹ்ரான்: அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா தனது ராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்தால், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்கள் தொடரும் என்று ஈரான் எச்சரித்துள்ள நிலையில், பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள ராணுவ இலக்குகளை நோக்கி ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் போர் தொடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான மோதல் கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, கத்தாரைச் சேர்ந்த எரிசக்தி நிறுவனத்திற்காக கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியானது.

    Advertisement

    இதனைட் தொடர்ந்து, ஈரான் ராணுவ உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு தளங்கள் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் நடத்தியது. இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

    ஈரான்

    இந்த நிலையில், பஹ்ரைன் மற்றும் குவைத்தில் அமெரிக்க ராணுவம் பயன்படுத்தி வரும் முக்கிய தளங்களை குறிவைத்து ஈரான் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியதாக ஈரான் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ஈரான் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5-வது படைப்பிரிவு தலைமையகம் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் ஆகியவை தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை அமெரிக்காவுக்கு நேரடி எச்சரிக்கையாக மேற்கொள்ளப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அமெரிக்கா

    மேலும், அமெரிக்கா தனது தாக்குதல்களை நிறுத்தாமல் தொடர்ந்தால், வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க இலக்குகள் அனைத்தும் தாக்குதலுக்கு உள்ளாகும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் நிலைமை மீண்டும் மோசமடைந்துள்ளது. இதற்கிடையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றத்தை குறைக்கும் முயற்சியாக இரு நாடுகளுக்கும் இடையே சுமார் 60 நாட்கள் இடைக்கால அமைதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது போர் நிறுத்தம் தொடர்பாக நிரந்தர தீர்வுக்கான பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது.

    போர் நிறுத்த ஒப்பந்தம்

    ஆனால் தற்போதைய தாக்குதல்கள் காரணமாக அந்த அமைதி முயற்சிகள் முற்றிலும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. "போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால், நடைபெற்று வரும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் முழுமையாக நிறுத்தப்படும் என்பதை எதிரிகள் புரிந்துகொள்ள வேண்டும்" என்று ஈரான் பாதுகாப்புப் படை தனது அறிக்கையில் கடுமையாக எச்சரித்துள்ளது.

    Advertisement

    இஸ்ரேல்-ஈரான் மோதல்

    ஈரானின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா என்ன பதிலடி கொடுக்கப் போகிறது என்பது தான் தற்போது உலக நாடுகளின் கவலையாக உள்ளது. ஏற்கனவே இஸ்ரேல்-ஈரான் மோதல், செங்கடல் பாதுகாப்பு பிரச்சினை, கப்பல் போக்குவரத்து பாதிப்பு போன்ற காரணங்களால் உலக பொருளாதாரம் அழுத்தத்தை சந்தித்து வரும் நிலையில், இந்த தாக்குதல் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மத்திய கிழக்கு

    வளைகுடா நாடுகளில் அமெரிக்க ராணுவத் தளங்கள் அதிக அளவில் இருப்பதால், அடுத்த சில நாட்களில் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், மத்திய கிழக்கில் போர் சூழல் மேலும் தீவிரமடையுமா அல்லது இரு தரப்பும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமா என்பது தான் சர்வதேச அரசியல் அரங்கில் முக்கிய கேள்வியாக மாறியுள்ளது.

    English Summary

    Iran claims strikes on US-linked targets in Kuwait and Bahrain, raising fears of renewed military escalation in the Gulf region.