டெல்அவிவ்: இஸ்ரேலில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கட்சி உள்பட யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக வெளியாகி உள்ள 5 கருத்து கணிப்புகளின் முடிவுகள் பின்வருமாறு:
இஸ்ரேல் நாட்டின் நீண்டகால பிரதமராக இருப்பவர் பெஞ்சமின் நெதன்யாகு. இவர் 1996 -1999, 2009 - 2021 வரையும், அதன்பிறகு 2022ம் ஆண்டு முதல் தற்போது வரை பிரதமராக இருந்து வருகிறார். இஸ்ரேல் நாடாளுமன்றம் 'நெசெட்' என அழைக்கப்படும்.
நேற்று மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி இரவு 10 மணிக்கு நிறைவு பெற்றது. வாக்குச்சீட்டு முறையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்கு செலுத்தினர். தேர்தல் முடிவடைந்த பிறகு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த தேர்தலில் வழக்கத்தை விட அதிகளவில் ஓட்டுகள் பதிவாகின. மொத்தம் 77.7 சதவீதம் என்ற அளவுக்கு வாக்கு பதிவாகி இருந்தது. கடந்த 2022ம் ஆண்டு நடந்த இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் 70.6 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவான நிலையில் தற்போது கூடுதலாக மக்கள் வாக்களித்துள்ளனர். அதுமட்டுமின்றி கடந்த 1999ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக இந்த தேர்தலில் தான் அதிகமாக வாக்குகள் பதிவாகி உள்ளது. இது இந்த தேர்தலில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் நாடாளுமன்றத்தை எடுத்து கொண்டால் மொத்தம் 120 இடங்கள் உள்ளன. இதில் 61 இடங்களை கைப்பற்றும் கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க முடியும். ஆனால் இஸ்ரேல் வரலாற்றில் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடித்தது என்ற வரலாறு கிடையாது. இந்த நிலை தற்போதைய தேர்தலிலும் தொடர உள்ளது. வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான 'லிகுட்' கட்சியின் கூட்டணிக்கும், இஸ்ரேல் பாதுகாப்பு படையின் தலைமை தளபதியாக பதவி வகித்த காடி ஐசன்கோட் தலைமையிலான 'யஷார்' கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இருப்பினும் இருவருக்கும் ஆட்சியமைக்க தேவையான 61 இடங்களில் வெற்றி கிடைக்காது என்று தேர்தலுக்கு பிந்தைய 5 கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. சேனல் 24 நடத்திய தேர்தல் கருத்து கணிப்பில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூட்டணி 55 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. காடி ஐசன்கோட் தலைமையிலான கூட்டணிக்கு 49 இடங்களும் அரபு கட்சிகளுக்கு 16 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேனல் 11 Kan கருத்து கணிப்பில் நெதன்யாகு கூட்டணிக்கு 50 இடங்களும், காடி ஐசன்கோட் கூட்டணிக்கு 53 இடங்களும், அரசு கட்சிகளுக்கு 17 இடங்களும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. சேனல் 12 கருத்து கணிப்பில் நெதன்யாகு கூ்டணிக்கு 50, காடி ஐசன்கோட் கூட்டணிக்கு 52, அரபு கட்சிகளுக்கு 18 இடங்களும் கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது. அதேபோல் சேனல் 13 கருத்து கணிப்பில் நெதன்யாகு கூட்டணிக்கு 50 இடங்களிலும், காடி ஐசன்கோட் கூட்டணிக்கு 53 இடங்களிலும், அரபு கட்சிகளுக்கு 17 இடங்களிலும் வெற்றி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேனல் 4 கருத்து கணிப்பில் நெதன்யாகு கூட்டணி 60 இடங்களிலும், காடி ஐசன்கோட் கூட்டணிக்கு 43 இடங்களிலும், அரபு கட்சிகள் 60 இடங்களிலும் வாகை சூடலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரதான கூட்டணியான தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் காடி ஐசன்கோட் தலைமையிலான கூட்டணிக்கு மெஜாரிட்டிக்கான 61 இடங்கள் கிடைக்காது. இவர்கள் ஆட்சியமைக்க வேண்டும் என்றால் அரபு கட்சிகளின் ஆதரவு தேவை என இந்த தேர்தலுக்கு பிந்தைய 5 கருத்து கணிப்புகளிலும் கூறப்பட்டுள்ளது. இதனால் நெதன்யாகு மற்றும் காடி ஐசன்கோட் ஆகியோர் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து மெஜாரிட்டிக்கான 61 இடங்களை பிடிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளனர். எனவே இஸ்ரேலின் அடுத்த பிரதமர் யார்? என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.