நேபாள வெள்ளம்.. காணாமல் போன அம்மாவை.. டிக் டாக் வீடியோ மூலம் கண்டுபிடித்த இந்திய பெண்!

  • காத்மாண்டு: நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் வரலாறு காணாத திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர், வெள்ளத்தில் மாயமான தனது தாயின் கடைசி இருப்பிடத்தை டிக் டாக் TikTok வீடியோ மூலம் கண்டறிந்துள்ளார். இந்தத் தகவல் எல்லைப் பகுதியில் மாயமான நூற்றுக்கணக்கான யாத்ரீகர்களைத் தேடும் பணிகளில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்துள்ளது.

    Advertisement

    நேபாளம் மற்றும் திபெத்தின் பல்வேறு பள்ளத்தாக்கு பகுதிகளை புதன்கிழமை தாக்கிய கடும் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 675 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மாயமானவர்களில் 13 வயது சிறுவன், இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை ஊழியர்கள் மற்றும் ஒரு மதகுரு உட்பட 33 பிரிட்டிஷ் குடிமக்களும் அடங்குவர். மீட்புப் பணிகளுக்கு உதவ இங்கிலாந்து நிபுணர் குழு சனிக்கிழமை காத்மாண்டு வந்தடைய உள்ளது.

    Advertisement

    இங்கிலாந்தின் மில்டன் கீன்ஸ் பகுதியைச் சேர்ந்த மருந்தாளுநரான துளசி படேல், தனது தாய் ஹேமங்கினி ஜிதேந்திர படேல் மற்றும் சித்தி ஹேமா சுனில் அமின் ஆகியோரைத் தீவிரமாகத் தேடி வருகிறார். இவர்கள் இருவரும் பல மாதங்களாகத் திட்டமிட்டு திபெத்தில் உள்ள புனித யாத்திரைக்குச் சென்றிருந்தனர். கடந்த திங்கட்கிழமை துளசி கடைசியாகத் தனது தாயிடம் பேசியுள்ளார். செவ்வாய்க்கிழமையன்று அவர்கள் ஒரு புகைப்படத்தையும் அனுப்பியுள்ளனர். அதன் பின்னர் அவர்களுடனான தொலைபேசித் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

    அவர்களின் பயணக் குழுவின் கடைசி ஜிபிஎஸ் இருப்பிடம் நேபாள-சீனா எல்லையில் உள்ள பிரண்ட்ஷிப் பிரிட்ஜ் பகுதியைக் காட்டியது. ஆனால், வெள்ளம் சூழ்ந்ததால் துல்லியமான விவரம் கிடைக்கவில்லை. இதையடுத்து துளசி மற்றும் அவரது குடும்பத்தினர் இணையத்தில் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    Advertisement

    அப்போது, நேபாளத்தைச் சேர்ந்த உள்ளூர் வழிகாட்டி ஒருவர் புதன்கிழமை காலை 6 மணிக்குச் சற்று முன்பு பதிவேற்றிய ஒரு டிக் டாக் வீடியோவைக் கண்டுபிடித்தனர். அந்த வீடியோவில், எல்லைப் பகுதியில் அவரது தாயும் சித்தியும் மேலும் மூன்று யாத்ரீகர்களுடன் எல்லையைக் கடக்கக் காத்திருப்பது தெளிவாகப் பதிவாகியிருந்தது. மோசமான வானிலை காரணமாக செவ்வாய்க்கிழமை செல்ல வேண்டிய பயணம் தாமதமாகி, வெள்ளம் தாக்கிய அதே நாளில் அவர்கள் அங்கு சிக்கியுள்ளது தெரியவந்தது.

    "நாங்கள் நம்பிக்கையைக் கைவிடவில்லை. அவர்களைத் தேடக் களத்தில் ஆட்கள் தேவைப்படுகிறார்கள்," என்று துளசி உருக்கமாகத் தெரிவித்துள்ளார். நேபாள எல்லைக்கு நேரில் செல்ல அவர்கள் திட்டமிட்ட போதிலும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்வதில் உள்ள போக்குவரத்து முடக்கம் காரணமாக அங்குள்ள தன்னார்வலர்கள் மற்றும் அதிகாரிகளை வாட்ஸ்அப் வழியாகத் தொடர்பு கொண்டு வருகின்றனர்.

    Advertisement

    கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்காகச் சென்ற பல இந்திய வம்சாவளிப் பயணிகள் இந்த பேரிடரில் மாயமாகியுள்ளனர். அவர்களில் 51 வயதான நீத்து கோயல் திவாரியும் ஒருவர். அவர் சீனப் பகுதியில் சிக்கியிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் அஞ்சுகின்றனர். இந்தியாவிலிருந்து அங்கு செல்வதற்கான விசா கிடைப்பதில் உள்ள தாமதம் உறவினர்களை மேலும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இதேபோல், இங்கிலாந்தின் ஸ்லோ பகுதியைச் சேர்ந்த 53 வயதான லீனா பெக்டர் என்பவரும் மாயமாகியுள்ளார். அவரது கணவர் பூபேஷ் பெக்டர் உடனடியாக காத்மாண்டுவிற்கு விமானப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். எல்லைப் பகுதிகளில் மாயமான நூற்றுக்கணக்கானோரை மீட்கும் பணிகளில் அந்நாட்டு ராணுவமும் உள்ளூர் நிர்வாகமும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

    English Summary

    Nepal Floods: UK Daughter Traces Missing Pilgrim Mother Through TikTok Video