நேபாள வெள்ளத்தில் சிக்கிய ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் எங்கே? 3ஆவது நாளாக தேடும் பணி தீவிரம்

  • காத்மாண்டு: நேபாள வெள்ளத்தில் மாயமான மயிலாடுதுறையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானத்தை 3ஆவது நாளாக மீட்பு பணியினர் தேடி வருகிறார்கள். அவரது செல்போன் இணைப்பும் கிடைக்காததால் உறவினர்கள் பதைபதைப்பில் ஆழ்ந்துள்ளனர்.

    Advertisement

    வடக்கு நேபாளத்தில் கோஷி ஆற்றின் மேல் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக திடீர் காட்டாற்று வெள்ளம் கடந்த 26ஆம் தேதி ஏற்பட்டது. இந்த துயரச் சம்பவத்தில் இதுவரை 389 பேர் உயிரிழந்தனர்.

    Advertisement

    பெருவெள்ளத்தில் சிக்கிய 977 பேரை காணவில்லை. நேற்று இரவு வரை 21 தமிழர்கள் உட்பட 84 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தமிழர்களின் மீட்பு பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்கள் ஆதவ், ராஜ்மோகன் உள்பட 4 பேர் டெல்லி சென்றுள்ளனர்.

    அங்கு அவர்கள் மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள். நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற தமிழர்கள் பலரது நிலை தெரியவில்லை. சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மகாதேவ் கைலாஷ் ஆன்மீக சுற்றுலா ஏஜென்சி மூலம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி சென்னை, கரூர், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 49 பேர் நேபாளத்திற்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    Advertisement

    அவர்கள் யாத்திரையை முடித்துக் கொண்டு நேற்று தாயகம் திரும்ப வேண்டிய நிலையில் அவர்கள் இன்னும் திரும்பவில்லை. அவர்களது நிலையும் தெரியவில்லை.

    அது போல் தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட இடங்களை சேர்ந்தவர்களும் வேறு ஏஜென்சி மூலம் நேபாளம், திபெத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

    அந்த வகையில் மயிலாடுதுறையை சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானமும் சென்றிருந்தார். அவர் நேபாள பெருவெள்ளத்தில் சிக்கியுள்ளார். அவரது செல்போனும் தொடர்பில் இல்லாததால் அவரது உறவினர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

    கடந்த புதன்கிழமை முதலே சிவஞானத்தை காணவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்றும் தெரியவில்லை. இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் நேபாளம் சென்றிருந்தார். அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

    Advertisement

    நேபாள அரசு கொடுத்த உதவி எண்கள், இந்திய அரசு கொடுத்த எண்கள் என அனைத்திலும் தொடர்பு கொண்டுவிட்டோம். சொல்வதாக சொல்கிறார்கள், ஆனால் எந்த அப்டேட்டும் இல்லை என கவலை தெரிவித்துள்ளனர்.

    அது போல் ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசியும் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளார். அவரது தலைமையில் 148 தமிழர்களும் 2 வெளிநாட்டினரும் சென்றுள்ளனர்.

    இந்த நிலையில் தான் உள்பட 150 பேரும் சாகா என்ற இடத்தில் பாதுகாப்பாக இருப்பதாக தேச மங்கையர்க்கரசி வீடியோ வெளியிட்டுள்ளார். இதனால் அவரது ஆன்மீக ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    இந்த பெருவெள்ளம் அதிக வேகத்தில் வந்ததால் பலரது உடல் அடித்து செல்லப்பட்டு எங்கெங்கோ தடுப்புகளில் மோதி மிகவும் கோரமான நிலையில் இருப்பதாக சொல்கிறார்கள். இதனால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

    Advertisement

    இந்த நேபாள வெள்ளத்தில் சாலைகள், மின்சாரக் கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவ ஹெலிகாப்டர்கள், தனியார் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் நேபாளில் 19 மேம்பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் பல்வேறு இடங்களுக்கு போக்குவரத்து என்பது துண்டிக்கப்பட்டுள்ளது.

    எங்காவது பாதுகாப்பாக இருக்கும் நபர்கள் எவ்வாறு மீட்கப்படுவர் என்பது தெரியவில்லை. அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவம், தங்குமிடம் உள்ளிட்டவை கிடைக்கின்றனவா என்றும் தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் மேல் அவர்களிடம் பணம் இருக்கிறதா என்பது பெரும் கேள்வியாக இருக்கிறது.

    English Summary

    Nepal flash floods: Where is Retired Chennai High court Judge Sivagnanam? He was in search for the 3rd consecutive day.