“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை!

  • காத்மாண்டு: நேபாளாத்தின் புதிய பிரதமராக தேர்வாகியிருக்கும் பாலன் ஷா, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இந்தியாவின் எல்லையை நாங்கள் ஆக்கிரமித்திருக்கிறோம் என்று கூறியிருப்பது, அவருக்கு எதிரான விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது.

    Advertisement

    லிபுலேக், லிம்பியதுரா மற்றும் காலாபானி ஆகிய எல்லைப் பகுதிகள் தொடர்பாக இந்தியா மற்றும் நேபாளம் இடையே நீண்ட காலமாகத் எல்லைப் பிரச்சனை நீடித்து வருகிறது. இப்படி இருக்கையில், இந்திய எல்லையை ஆக்கிரமித்திருப்பதாக பிரதமர் ஒப்புக்கொண்டிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் பாலன் ஷா, “நான் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு தான் ஓர் அதிர்ச்சியூட்டும் உண்மையை அறிந்துகொண்டேன். இந்தியா மட்டுமல்ல, நேபாளமும் பல இடங்களில் இந்திய எல்லையை ஆக்கிரமித்துள்ளது. எனவே இரு நாடுகளும் நண்பர்களாக அமர்ந்து உண்மைகளை ஆராய்ந்து இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும்” என்று பேசினார்.

    எல்லையை நேபாளம் ஆக்கிரமித்துள்ளதாக அதன் நாட்டின் பிரதமரே நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டது நேபாளத்தில் பெரும் அரசியல் விவாதத்தைக் கிளப்பியது. பிரதமரின் இந்தக் கருத்து நேபாளத்திற்குள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் உடனடியாக ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டது.

    Advertisement

    அதில், பிரதமர் 'ஆக்கிரமிப்பு' எனக் குறிப்பிட்டது அதிகாரப்பூர்வ நிலப்பரப்புரிமையை அல்ல. இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட 'நோ-மேன்ஸ் லேண்ட்' எனப்படும் மனிதர்கள் நடமாடக் கூடாத எல்லைக் கோட்டுப் பகுதி மற்றும் எல்லைத் தூண்கள் சேதமடைந்துள்ள சில இடங்களில் இரு நாட்டு விவசாயிகளும் எல்லையைக் கடந்து விவசாயம் செய்வதைக் குறிப்பிட்டுத்தான் பிரதமர் அவ்வாறு பேசினார் எனத் தெளிவுபடுத்தியது.

    இந்தப் எல்லைப் பிரச்சனை என்பது ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய காலத்திலிருந்தே நீடிப்பதால், இதில் பிரிட்டன் அரசாங்கமும் அக்கறை காட்ட வேண்டும் எனப் பிரதமர் பாலன் ஷா வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் குறித்து இந்தியா, சீனா மற்றும் பிரிட்டன் ஆகிய மூன்று நாடுகளுடனும் நேபாள அரசு தூதரக ரீதியாகப் பேசியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    நேபாள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் பிரதமரின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். “நேபாளம் ஒருபோதும் இந்திய நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை, பிரதமர் தனது பேச்சுக்கு ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கேட்டுத் தனது பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்” என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    English Summary

    Nepal: Balen Shah, who has been elected as Nepal's new Prime Minister, has sparked criticism after stating in the country's parliament that they have encroached upon India's border.