டபுள் கேம்.. பாகிஸ்தான் + சீனா.. பேச்சுவார்த்தை நடக்கும்போதே ராணுவம் களமிறக்கப்பட்டது அம்பலம்!

  • இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சர்வதேச அரசியலில் ஒருபுறம் அமைதித் தூதனாகவும், மறுபுறம் ராணுவக் கூட்டாளியாகவும் இரட்டை வேடமிட்டு ஆடி வரும் டபுள் கேம் இப்போது ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையேயான போரில் முக்கிய மத்தியஸ்தராக தன்னை காட்டிக் கொள்ளும் அதே வேளையில், சவுதி அரேபியாவுக்கு ஆதரவாகப் பாகிஸ்தான் தனது பிரம்மாண்ட ராணுவப் படைகளை இறக்கியுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

    Advertisement

    சர்வதேச அரங்கில் தன்னை ஒரு அமைதியின் தூதராகக் காட்டிக் கொள்ள பாகிஸ்தான் முயல்கிறது. அமெரிக்கா ஈரான் இடையேயான மோதலில் கூட ஏதோ தாங்கள் தான் அமைதி பேச்சுவார்த்தையை முழுமையாக முன்னின்று நடத்துவது போல பாகிஸ்தான் காட்டிக்கொண்டது. ஒரு பக்கம் இப்படிச் செய்தாலும் கூட மறைமுகமாக பாகிஸ்தான் பல காய்களை நகர்த்தி வந்துள்ளது இப்போது தெரிய வந்துள்ளது.

    Advertisement

    சவுதி- பாகிஸ்தான்

    கடந்த ஆண்டு சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையே கையெழுத்தான ரகசியப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே பாகிஸ்தான் இதைச் செய்துள்ளது. அதாவது அமெரிக்கா உடனான மோதலின் போது ஈரான் தனது அண்டை நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தியது. அதன்படி சவூதியின் முக்கிய எரிசக்தி நிலையங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியிருந்தது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு சவூதியைக் காக்கும் அரணாகப் பாகிஸ்தான் தனது ராணுவ பலத்தைக் களமிறக்கியுள்ளது.

    சீன ஆயுதங்கள்

    வெறும் பெயரளவிலான அல்லது ஆலோசனைக் குழுவை மட்டும் அனுப்பாமல், ஒரு பெரும் படையையே பாகிஸ்தான் சவூதிக்கு அனுப்பியுள்ளதாகப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்டமாக 8,000 வீரர்கள் சவூதி எல்லைகளைப் பாதுகாக்க அனுப்பப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் இந்த எண்ணிக்கையை 80,000 வீரர்கள் வரை உயர்த்த ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், சீனாவோடு இணைந்து தயாரிக்கப்பட்ட சுமார் 16 'ஜேஎஃப்-17' (JF-17) போர் விமானங்கள் அடங்கிய முழு ஸ்குவாட்ரனும், 2 ஸ்குவாட்ரன் டிரோன்களும் ஏப்ரல் மாதமே சவூதிக்குச் சென்றுள்ளது..

    Advertisement

    இது தவிர வான்வழித் தாக்குதல்களை முறியடிக்கச் சீனாவின் நவீன HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த டீலின் ஒரு பகுதியாகப் பாகிஸ்தானின் அதிநவீனப் போர்க்கப்பல்களும் சவூதி கடல் எல்லை நோக்கி விரைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஒட்டுமொத்த ராணுவப் படைகளையும் பாகிஸ்தான் வீரர்களே இயக்குகிறார்கள். அதேநேரம் இதற்கான ஒட்டுமொத்தச் செலவையும் சவூதி அரேபியாவே முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது.

    பாகிஸ்தான் அமைச்சர்

    இந்த ஒப்பந்தம் குறித்துப் பேசியிருந்த பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், "சவூதி அரேபியா மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், அதைத் தங்களுக்கு எதிரான தாக்குதலாகவே பாகிஸ்தான் கருதும். சவூதி அரேபியா இப்போது பாகிஸ்தானின் அணுசக்தி குடையின் கீழ் பாதுகாப்பாக உள்ளது" என மறைமுகமாக ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    Advertisement

    பாகிஸ்தானின் இரட்டை கேம்

    அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த 6 வாரங்களாக நீடிக்கும் தற்காலிகப் போர்நிறுத்தத்திற்கு இந்த பாகிஸ்தான் தான் தூதுவராகச் செயல்பட்டது. ஆனால், அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் அதே நேரம் இப்படி ராணுவத்தை அனுப்பும் செயலிலும் பாகிஸ்தான் இறங்கியுள்ளது. தன் மண்ணில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் வகையில் ஈரான் மீது சவூதி அரேபியா பல ரகசியத் தாக்குதல்களை நடத்தியுள்ளதும், அதற்குப் பாகிஸ்தான் ராணுவம் பின்னணியில் உதவியுள்ளதும் அம்பலமாகியுள்ளது.

    பாகிஸ்தான் பொருளாதார ரீதியாகத் திவாலாகும் நிலைக்குச் செல்லும்போதெல்லாம் சவூதி அரேபியா பில்லியன் டாலர்களை அள்ளிக்கொடுத்துக் காப்பாற்றியுள்ளது. அந்த நன்றிக்கடனுக்காகவே இப்போது சவூதியின் வாடகை ராணுவமாக பாகிஸ்தான் மாறியுள்ளது எனச் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் சாடுகின்றனர்.

    English Summary

    Pakistan double game in Middle East politics is exposed as it deploys 8,000 troops, JF-17 fighter jets(சவுதிக்கு உதவ சீனா ஆயுதங்களை அனுப்பிய பாகிஸ்தான்): China made defense equipments in Saudi.