ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு

  • இஸ்லாமாபாத்: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் வாய்ப்பு இருப்பதாகவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான பதற்றம் கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் நிலையில், இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தைகள் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement

    ஈரான் - அமெரிக்கா இடையே விரைவில் இறுதி ஒப்பந்தம் ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக பாகிஸ்தான் பிரதமரின் கருத்து அமைந்துள்ளது. அதேநேரத்தில் 24 மணி நேரத்திற்குள் எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகாது என்று ஈரான் மாறுபட்ட தகவலையும் தெரிவித்துள்ளது.

    Advertisement

    ஈரான் அமெரிக்கா போர்

    ஈரான் - அமெரிக்கா போரால் வளைகுடா பிராந்தியத்தில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்தது. இதன் விளைவாக அமைதிப்பேச்சுவார்த்தை நடைபெற்றது. எனினும் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டாமல் தொடர்ந்து இழுபறி நிடித்துக்கொண்டே வருகிறது.

    பேச்சுவார்த்தைக்கு இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஆனால் இதனை மீறி அவ்வப்போது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. சமீபத்தில் கூட ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியது. இதனால் பதிலுக்கு இஸ்ரேலும் ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்தியது. இதேபோன்று ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் ஈரான் தான் தாக்குதல் நடத்தியதாக அந்த நாடு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

    Advertisement

    24 மணி நேரத்தில் ஒப்பந்தம் கையெழுத்தாகும்

    இதனால் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நீடித்து வந்தது. எப்போது இயல்புநிலை திரும்பும் என தெரியாமல் தொடர் இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப், அடுத்த 24 மணி நேரத்தில் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என கூறியுள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், "அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இதுவரை இல்லாத அளவுக்கு நெருக்கமாக வந்துள்ளோம். அடுத்த 24 மணி நேரத்தில் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

    Advertisement

    மேலும், ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன் மின்னணு முறையில் கையெழுத்திடும் நிகழ்வு நடைபெறலாம் என்றும், அதனைத் தொடர்ந்து அடுத்த வாரம் தொழில்நுட்ப மட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. காரணம், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நாளை (ஜூன் 14-ஆம் தேதி) தனது 80-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். அந்த நாளிலேயே முக்கியமான அமைதி ஒப்பந்தம் உருவாகலாம் என்ற தகவல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    ஈரான் சொல்வது என்ன?

    ஆனால், ஒப்பந்தம் இன்னும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரிக்கை விடுத்துள்ளார். அனைத்து விவகாரங்களிலும் முழுமையான உடன்பாடு எட்டப்பட்ட பிறகே ஒப்பந்தம் உறுதியானதாக கருத முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தைகளில் ஹார்முஸ் ஜலசந்தியின் எதிர்கால நிர்வாகம், கடல் போக்குவரத்து பாதுகாப்பு, பொருளாதார தடைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றத்தை குறைப்பதுடன், உலக எண்ணெய் சந்தை மற்றும் சர்வதேச அரசியலிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். அடுத்த 24 மணி நேரத்தில் என்ன நடக்க போகிறது என்பதை உலக நாடுகள் உற்று கவனித்து வருகின்றன.

    English Summary

    Pakistan PM Shehbaz Sharif says the US and Iran are closer than ever to signing a peace agreement, with finalisation expected within 24 hours. While optimism is growing, Iran says some issues remain unresolved. The deal could significantly impact Middle East stability.