உடல் வெடித்து சிதறிய பாக்., ராணுவ வீரர்கள்..ரயிலில் தற்கொலைப்படை தாக்குதல்.. BLA–வின் ஷாக் பின்னணி

  • இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வீரர்கள் பயணித்த ரயில் மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் இன்று மோதியது. இதில் ரயில் பெட்டிகள் வெடித்து சிதறி தடம்புரண்ட்டது. இதில் ராணுவ வீரர்கள் உள்பட 30 பேர் வரை பலியாகி உள்ள நிலையில் இன்னும் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    பாகிஸ்தானின் முக்கிய மாகாணமாக பலுசிஸ்தான் உள்ளது. இங்குள்ள குவெட்டாவின் சாமன் பட்டாக் பகுதியில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ வீரர்களை ஏற்றி கொண்டு ஒரு ரயில் குவெட்டாவின் சாமன் பட்டாக் சிக்னல் அருகே வந்தது. அப்போது ரயில் பெட்டியின் மீது கார் ஒன்று பயங்கரமாக வந்து மோதியது.

    கார் மோதிய அடுத்த நொடியே அந்த பெட்டி வெடித்து சிதறியது. 2 ரயில் தடம்புரண்டது. ரயில் தீப்பிடித்து எரிந்தது. வான் முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டது. இதில் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என்று 30 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் ஏராளமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    முதற்கட்ட விசாரணையில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார் ரயில் மீது மோதியது தெரியவந்துள்ளது. இது நன்கு திட்டமிடப்பட்ட ஒரு தற்கொலைப்படை தாக்குதல் ஆகும். பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் காரில் வெடிப்பொருட்களை ஏற்றி வந்து ரயிலில் மோதி இந்த கோரத்தை அரங்கேற்றி இருப்பது தெரியவந்துள்ளது.

    ராணுவ வீரர்கள் தங்களின் குடும்பத்தினருடன் பக்ரீத் பண்டிகையை கொண்டாட பெஷாவருக்கு ரயிலில் புறப்பட்டு சென்றனர். இதுபற்றி முன்கூட்டியே அறிந்த கும்பல் தான் இந்த சதி வேலையில் ஈடுபட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பால் ரயில்வே தண்டவாளத்தில் இருந்து சுமார் 25 முதல் 30 மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த பல கார்கள் முற்றிலுமாக எரிந்துவிட்டன. அருகில் இருந்த ஒரு அடுக்குமாடி கட்டத்தின் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளது. சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது.

    இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பிஎல்ஏ எனும் பலுசிஸ்தான் லிபரேஷன் ஆர்மி பொறுப்பேற்றுள்ளது. இந்த குழுவினர் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று கூறி பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அரசுக்கு எதிராக அவர்கள் போராடி சண்டையிட்டு வருகின்றனர். இதனால் இந்த பலுசிஸ்தான் லிபரேஷன் ஆர்மி என்ற அமைப்பை பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு என்று அறிவித்துள்ளது.

    இந்நிலையில் தான் தாக்குதலுக்கு பொறுப்பேற்று இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என அக்குழு அறிவித்துள்ளது. இதுபற்றி அந்த அமைப்பு சார்பில், "இன்று காலை, பலுசிஸ்தான் விடுதலைப் படையின் தற்கொலைப் படைப் பிரிவான மஜீத் பிரிகேட், குவெட்டா ராணுவ கண்டோன்மெண்ட்டில் இருந்து ராணுவ படையினரை ஏற்றிச் சென்ற ரயில் மீது தற்கொலை படை தாக்குதலை நடத்தியது.

    இந்த ஆபரேஷனுக்கு பலுசிஸ்தான் விடுதலைப் படை முழுப் பொறுப்பையும் ஏற்கிறது. தாக்குதலில் ஏற்பட்ட பொருள் மற்றும் உயிர்ச் சேதங்கள் குறித்த விரிவான தகவல்கள் விரைவில் ஊடகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிக்கையாக வெளியிடப்படும்'' என்று கூறியுள்ளார்.

    English Summary

    Pakistan train Blast: A deadly explosion struck a military train near Quetta in Balochistan, killing numerous personnel and injuring many as the Balochistan Liberation Army claims responsibility. The attack occurred during the Eid festival period, underscoring ongoing security challenges in the region and the group’s stated aims against state infrastructure.