இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ள நிலையில், அந்த வலியை இப்போது பாகிஸ்தான் உணர ஆரம்பித்துவிட்டது. நடப்பு ஆண்டுக்கான காரீஃப் பருவத்தில் பாகிஸ்தானில் சிந்து நதிப் படுகையில் நீர்வரத்து 22 சதவீதம் குறையும் என அந்நாட்டு அரசு கணித்துள்ளது. இதனால் அங்குள்ள அதிகாரிகள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.
கடந்த 2025 ஏப்ரல் மாதம் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. அப்போது பாகிஸ்தானுக்கு இந்தியா பல்வேறு விதங்களில் பதிலடி கொடுத்தது. ஒரு பக்கம் ஆபரேஷந் சிந்தூரில் பயங்கரவாதிகள் வேட்டையாடப்பட்ட நிலையில், இன்னொரு பக்கம் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. தண்ணீரும் ரத்தமும் ஒன்றாக பாயாது என சொல்லி இந்தியா இந்த ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தால் மீண்டும் ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும். ஆனால், அதை செய்யாமல் சர்வதேச அரங்குகளில் இந்த விஷயத்தை பாகிஸ்தான் எடுத்து செல்கிறது. இந்தியா தனக்கு எதிராக "நீர் போர்" நடத்துவதாகவும் குற்றஞ்சாட்டி, ஏதோ இந்தியா தவறு செய்தது போல ஒரு இமேஜ்ஜை உருவாக்க முயல்கிறது. ஆனாலும், சர்வதேச அரங்குகளில் பாகிஸ்தான் தொடர்ந்து அம்பலப்பட்டு நிற்கிறது. இதற்கிடையே பாகிஸ்தானில் 2026-27ஆம் ஆண்டுக்கான காரீஃப் பருவத்தில் சிந்து நதி படுகையில் நீர்வரத்து 22 சதவீதம் குறையும் என அந்நாட்டு அரசின் ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானின் விவசாயிகளுக்கு தேவையான நீர் கிடைப்பதில் நெருக்கடி ஏற்படலாம் என்ற கவலை அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மற்றும் சிந்த் ஆகிய இரு மாகாணங்களிலும் ஒட்டுமொத்த நீர் அமைப்பில் 22 சதவீத பற்றாக்குறை ஏற்படும் என்றும் அந்த ரிப்போர்ட்டில் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், 2026ஆம் ஆண்டின் காரீஃப் பருவத்திலும் நீர்வரத்து 22 சதவீதம் குறைந்ததாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவது, ஆறுகளில் நீர்வரத்து எவ்வளவு இருக்கும் என்பதில் நிலவும் நிச்சயமற்ற தன்மை ஆகியவை குறித்தும் பாகிஸ்தான் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஜீலம்-செனாப் நதிகளில் நீர்வரத்து குறைவது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். செனாப் ஆற்றில் இந்தியா குறைந்த அளவில் தண்ணீர் திறப்பதால் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் தரப்பு புலம்பி வருகிறது. கடந்த 2025 ஏப்ரலில் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தபோதும், பாகிஸ்தான் இதேபோன்ற நீர் நெருக்கடி நிலைமையை சந்தித்தது. கடந்த ஆண்டு மே மாதத்தில் தொடங்கிய காரீஃப் பயிர் பருவத்தில் நீர்ப்பற்றாக்குறை 21 சதவீதம் வரை இருக்கும் என அந்நாட்டு அதிகாரிகள் கணித்திருந்தனர். இருப்பினும், அப்போது இமயமலையின் உயரமான பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் பனிப்பாறைகள் உருகியதால் கிடைத்த நீரும் அந்த நெருக்கடியைச் சமாளிக்க உதவின. ஆனால், இந்தாண்டு வசமாக சிக்கி கொண்டனர். பாகிஸ்தானின் விவசாய உற்பத்தியில் 90 சதவீதம் சிந்து நதி பாசன அமைப்பை சார்ந்துள்ளது. இதனால், சிந்து நதி படுகையில் நீர்வரத்து குறைவது அந்நாட்டின் உணவு உற்பத்தியை பாதிக்கும். பாகிஸ்தான் உணவு பாதுகாப்பிலும் குழப்பத்தை ஏற்படுத்தும். குறிப்பாக பாகிஸ்தான் பஞ்சாப் மற்றும் சிந்த் மாகாணங்கள் முழுமையாக சிந்து நதியையே நம்பி இருக்கும் நிலையில், அங்குள்ள மக்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். தற்போது நீர்த்தேக்கங்களின் அளவு குறைவது, ஆறுகளில் நீர்வரத்து குறித்த நிச்சயமற்ற நிலை மற்றும் ஜீலம்-செனாப் நதிகளில் குறையும் நீர்வரத்து குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் பதறி போய் இருக்கிறார்கள். நிலைமை வரும் நாட்களில் சீராகவில்லை என்றால் பாகிஸ்தான் நிச்சயம் பெரிய சிக்கலை சந்திக்கும்.பாகிஸ்தான்
தண்ணீர் பற்றாக்குறை
ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பியது
சிந்து நதி ஏன் முக்கியம்