சான்டோ டொமிங்கோ: டொமினிகன் குடியரசில் அவசரத் தரையிறக்கத்தின் போது தனியார் ஜெட் விமானம் தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.
டொமினிகன் குடியரசில் உள்ள லா ரோமானா சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. தனியார் விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்க முயன்றபோது இந்த விபத்து நடந்திருக்கிறது. விபத்தில் விமானி மற்றும் துணை விமானி இருவர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட 'கல்ப்ஸ்ட்ரீம் ஜி200' ரகத்தைச் சேர்ந்த இந்த தனியார் ஜெட் விமானம், டெக்சாஸ் மாநிலத்தின் ஆஸ்டின் நகருக்குப் புறப்பட்டுச் சென்றது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, சுமார் 30 கி.மீ தொலைவில் இருந்தபோது இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, விமானிகள் அவசர நிலையை அறிவித்துவிட்டு, மீண்டும் லா ரோமானா விமான நிலையத்திற்கே திரும்ப முயன்றனர். ஆனால், தரையிறங்கும் முயற்சியின் போது விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுதளத்திற்கு அருகே மோதி விபத்துக்குள்ளானது. சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள இந்த விபத்தின் அதிர்ச்சியூட்டும் வீடியோவில், விமானம் தரையில் மோதி வேகமாக சறுக்கிச் செல்வதும், அடுத்த சில நொடிகளில் அதன் பின்பகுதி வெடித்துச் சிதறி பெரும் தீப்பிழம்பாக மாறுவதும் பதிவாகியுள்ளது. சம்பவ இடத்திலிருந்து கரும்புகை வானுயர எழும்பியது. விபத்து நடந்த போது விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை என்றும், விமானி மற்றும் துணை விமானி ஆகிய இருவர் மட்டுமே இருந்ததாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மீட்புக் குழுவினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்ற போதிலும், இருவரையும் காப்பாற்ற முடியவில்லை. இந்த விபத்து குறித்து டொமினிகன் சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனம் மற்றும் விபத்து விசாரணை ஆணையம் ஆகியவை விசாரணையைத் தொடங்கியுள்ளன. இயந்திரக் கோளாறுக்கான துல்லியமான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அவசரமாக விமானத்தை தரையிறக்க முயன்றபோது அது விபத்தில் சிக்கியத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விபத்து நடந்தது எப்படி?
பரவலாக ஷேராகும் வீடியோ
உயிரிழப்பு விவரம்