இஸ்லாமாபாத்: 2019 புல்வாமா தாக்குதலின் முக்கிய மாஸ்டர் மைண்டாக செயல்பட்ட ஹம்சா புர்ஹான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். 'டாக்டர்' என அறியப்பட்ட புல்வாமாவைச் சேர்ந்த இவர், 40க்கும் மேற்பட்ட CRPF வீரர்களின் மரணத்திற்குக் காரணமாக இருந்தவர் இருந்தவர். 2022ல் மத்திய உள்துறை அமைச்சகத்தால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட இவர், இப்போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்தியப் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு ஆறாத வடுக்காக இருப்பது 2019 புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல்.. கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா என்ற இடத்தில் ஸ்ரீநகர் நோக்கிப் பாதுகாப்பு வாகனங்கள் வந்து கொண்டு இருந்தபோது, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை ஓட்டிவந்த தற்கொலைப் படை பயங்கரவாதி ஒருவன், தாக்குதலை நடத்தினான். இதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்தனர்.
இதில் மூளையாகச் செயல்பட்ட ஹம்சா புர்ஹான் என்பவர் தான் இப்போது கொல்லப்பட்டுள்ளார். இவரைப் பின்தொடர்பவர்கள் இவரை டாக்டர் என்றே அழைப்பார்கள். இவரது உண்மையான பெயர் அர்ஜுமந்த் குல்சார் டார் கொண்ட புர்ஹான்.. முசாபராபாத்தில் நடந்த தாக்குதலில் காயங்களுடன் உயிரிழந்தார். 'துரந்தர்' திரைப்படத்தைப் பார்த்தவர்களுக்கு இச்சம்பவம் திகில் உணர்வைத் தரலாம். கடந்த சில ஆண்டுகளில், பாகிஸ்தான் மற்றும் POK பகுதிகளில் பயங்கரவாதிகள் மர்மமான முறையில் கொல்லப்பட்டு வருவது ஒரு தொடர்ச்சியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.. புல்வாமாவின் கர்பட்போராவில் பிறந்த ஹம்சா புர்ஹான், உயர் கல்வி என்ற போர்வையில் 2017ல் பாகிஸ்தான் சென்றார். அங்குத் தடைசெய்யப்பட்ட அல்-பத்ர் பயங்கரவாத அமைப்பில் இணைந்து தளபதியாக உயர்ந்தார். பின்னர் காஷ்மீருக்குத் திரும்பி இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாதத்தில் ஈடுபடுத்தினார். தெற்கு காஷ்மீரில், புல்வாமா முதல் ஷோபியான் வரை தனது பயங்கரவாத நெட்வோர்க்கை விரிவுபடுத்தினார். புர்ஹானுடன் தொடர்பு கொண்ட இளைஞர்கள் படிப்படியாகத் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக புல்வாமா குடும்பங்களே கூறியுள்ளன. 2019 பிப்ரவரி 14ம் தேதி நடந்த புல்வாமா தாக்குதல் உட்பட ஜம்மு காஷ்மீரில் பல பயங்கரவாத நடவடிக்கைகளுடன் புர்ஹான் தொடர்புடையவர். ஜெய்ஷ்-இ-முகமது நடத்திய இந்தத் தாக்குதலில், லேத்போராவில் CRPF வாகன அணிவகுப்பு மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார் மோதி 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இது இந்தியாவின் பாதுகாப்புப் படையினர் மீது நடந்த மிக மோசமான தாக்குதலாகும். இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்திய விமானப்படை பாலகோட்டில் வான்வழித் தாக்குதலை நடத்தியது. புல்வாமா தாக்குதலுக்கு வெடிபொருட்கள், கையெறி குண்டுகளை புர்ஹான் வழங்கியதாகப் பாதுகாப்பு அமைப்புகள் கூறின. 2020 நவம்பர் 18ம் தேதி CRPF படைகள் மீது நடத்தப்பட்ட கையெறி குண்டுத் தாக்குதலிலும் இவருக்குத் தொடர்பு உண்டு. தொடர் தேடல்களுக்கு மத்தியிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குத் தப்பிச் சென்று தலைமறைவாக இவர் இருந்த நிலையில், இப்போது உயிரிழந்துள்ளார்.. லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற பயங்கரவாத தலைவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் மர்மமான தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே புர்ஹானின் மரணம் இருக்கிறது. அடையாளம் தெரியாத நபர்கள் நடத்தும் துப்பாக்கிச் சூடு, மர்மமான சூழ்நிலைகள் என்றே இந்த மரணங்கள் அரங்கேறுகிறது. கடந்த மாதம், பஹல்காம் தாக்குதலின் முதலாம் ஆண்டு தினத்திற்கு முன், லஷ்கர்-இ-தொய்பா நிறுவன உறுப்பினர் அமீர் ஹம்சா, லாகூரில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த மார்ச் மாதம், ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரின் சகோதரர் முகமது தாஹிர் அன்வர், பாகிஸ்தானில் மர்மமான சூழ்நிலையில் உயிரிழந்தார். ஒரு வருடத்திற்கு முன், லஷ்கர்-இ-தொய்பாவின் முன்னணிப் பயங்கரவாதி அபு கட்டால், பாகிஸ்தானின் ஜீலம் சிந்த் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 26/11 மும்பை தாக்குதலின் சதிகாரன் ஹாஃபிஸ் சையத்தின் கூட்டாளியான கட்டாலும் இதேபோல மர்மமாக உயிரிழந்தனர். கடந்த 2023ம் ஆண்டில் இருந்தே இதுபோன்ற கொலைச் சம்பவங்கள் தொடர் கதையாக இருக்கிறது. அந்த ஆண்டு மட்டும், ஏழு மாதங்களில் குறைந்தது ஏழு பயங்கரவாதிகள் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகளில் கொல்லப்பட்டனர்.. நெட்டிசன்கல் பலரும் இதை 'துரந்தர்' திரைப்படக் காட்சிகளுடன் ஒப்பிட்டுப் பேசி வருகிறார்கள்.மர்ம மரணம்
யார் இவன்?
தொடர்கதை
துரந்தர்