மாஸ்கோ: போர் பயிற்சியின்போது அதிநவீன ஹெலிகாப்டர் மெஷின் துப்பாக்கியை வைத்து ராணுவ வீரர் சுட்டார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த ராணுவ வீரரை ஹெலிகாப்டர் மெஷின் துப்பாக்கி தூக்கி வீசியது தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடந்து வருகிறது. இந்த போர் 4 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள ரஷ்யாவின் ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரஷ்யாவிடம் பல்வேறு வகையான அதிநவீன ராணுவ ஆயுதங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் YakB -12.7 எனும் ஹெலிகாப்டர் மெஷின் கன் (YakB -12.7 Helicopter Machine Gun). இந்த ஹெலிகாப்டர் மெஷின் கன் என்பது 360 என்ற அளவில் ரோட்டேட் செய்து எதிரிகளின் இலக்குகளை குறிவைத்து சுடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இது ரஷ்யாவின் Anti Aircraft Gun என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் தான் இந்த மெஷின் கன்னை வைத்து 2 ரஷ்ய ராணுவ வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது ஒரு வீரர் மெஷின் கன்னை இயக்கினார். மெஷின் கன் சுழன்றபோது அவர் தனது கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் மெஷின் கன் அவரை தூக்கி வீசியது. அதோடு மெஷின் கன் தொடர்ந்து சுட்டது. இந்த சமயத்தில் அவர் அருகே இருந்த இன்னொரு வீரர் நொடியில் குனிந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் இடம்பெற்ற மெஷின் கன் 4 பேரல் கொண்ட 12.7 எம்எம் ரோட்டரி மெஷின் கன் ஆகும். இது ஹெலிகாப்டரை குறிவைத்து தாக்குவதற்கு வசதியாக உருவாக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.