அரண்டு போன டிரம்ப்.. அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த புதின்.. சத்தமின்றி புதிய சாதனை படைத்த ரஷ்யா!

  • மாஸ்கோ: மத்தியக் கிழக்கில் வெடித்துள்ள போர் காரணமாக உலகெங்கும் மிகப் பெரிய குழப்பமே ஏற்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் அதிசயம் என்னவென்றால் இதனால் மிகப் பெரிய லாபத்தை ரஷ்யா அள்ளி இருக்கிறது. அமெரிக்க டாலருக்கு அதிர்ச்சி தரும் வகையில் ரஷ்யாவின் 'ரூபிள்' மிக வலிமையான நாணயமாக மாறியுள்ளது.

    Advertisement

    கடந்த பிப்ரவரி 2022ல் உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான போரைத் தொடங்கியபோது, மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. ரஷ்யப் பொருளாதாரம் அழியப்போகிறது, ரூபிள் நாணயம் குப்பையாகப் போகிறது என்றெல்லாம் கூட பலரும் சொன்னார்கள். ஆனால், 4 ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் நிலைமை தலைகீழாக இருக்கிறது.

    Advertisement

    ரூபிள்

    இது தொடர்பாகச் சர்வதேச ஊடகமான புளூம்பெர்க் சில முக்கிய செய்திகளை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஏப்ரல் முதல் பார்த்தால் அமெரிக்க டாலருக்கு எதிராக ரஷ்ய ரூபிள் 12% வரை பலமடைந்துள்ளது. தற்போது ஒரு டாலருக்கு நிகரான ரூபிளின் மதிப்பு 72.6 ஆக உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி 2023க்கு பிறகு ரூபிள் இந்தளவுக்கு வலிமையான நிலையை அடைவது இதுவே முதல்முறை.!

    தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக, ரூபிள் வீழ்ச்சியடையும் என்ற சந்தை வல்லுநர்கள் கணித்திருந்த நிலையில், அதைப் பொய்யாக்கும் வகையில் ரூபிள் பலமடைந்துள்ளது. வளைகுடா போரால் அனைத்து நாடுகளும் திணறி வரும் சூழலில், ரஷ்யப் பொருளாதாரம் அசுர வேகத்தில் வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.

    Advertisement

    காரணங்கள்

    இதற்குச் சில முக்கிய காரணங்களை வல்லுநர்கள் பட்டியலிடுகிறார்கள். முதலில் வளைகுடா போரால் ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியதால் உலகளவில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், ரஷ்ய எண்ணெய் மீது விதித்திருந்த கடுமையான கட்டுப்பாடுகளை அமெரிக்கா வேறு வழியின்றிச் சற்றே தளர்த்தியது. இது தான் ரஷ்யாவுக்குக் கிடைத்த மிகப் பெரிய ஜாக்பாட் என்றே சொல்லலாம். இதனால் ரஷ்யக் கச்சா எண்ணெய் வர்த்தகம் உச்சத்திற்குப் போனது.

    போரால் கச்சா எண்ணெய் விலையும் உச்சத்திற்குப் போய் இருக்கிறது. கடந்த மார்ச் மாதத்தில் பேரல் ஒன்றுக்கு $44.6ஆக இருந்த கச்சா எண்ணெய்யின் சராசரி விலை, ஏப்ரலில் $94.9ஆக எகிறியது. இப்போது 100 டாலரை தாண்டி வர்த்தகமாகி வருகிறது. இந்த விலையேற்றமும் ரஷ்யாவுக்கு லாபம் தான்.. இதனால் ரஷ்யாவின் முக்கிய ஏற்றுமதி நிறுவனங்கள் ஏப்ரல் மாதத்தில் மட்டும் தங்களின் வெளிநாட்டு விற்பனையை 3 மடங்கு அதிகரித்து $7.3 பில்லியன் டாலராக உயர்த்தின. இது டாலருக்கு நிகரான ரூபிள் மதிப்பைப் பலப்படுத்தியது.

    Advertisement

    ரஷ்யாவின் மாஸ்டர் பிளான்

    அதேபோல பல்வேறு நாடுகளுடன் ரஷ்யா போட்ட ஒப்பந்தம் காரணமாக ரஷ்யா தனது நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்குத் தனது சொந்த நாணயமான ரூபிள் மூலமாகவே கட்டணம் செலுத்துகிறது. அதாவது இந்தியா உட்பட உலக நாடுகள் இறக்குமதி செய்யும்போது அந்தத் தொகையை டாலரில் செலுத்த வேண்டும். இதனால் அந்நிய செலாவணி குறைந்து ரூபாய் மதிப்பு சரியும். ஆனால், ரஷ்யாவின் இறக்குமதி பொருட்களுக்கான தொகையில் கிட்டத்தட்ட 60% தற்போது நேரடியாக ரூபிள் நாணயத்திலேயே செலுத்தப்படுகிறது. மேலும், ரஷ்ய மத்திய வங்கியின் அதிக வட்டி விகிதங்கள் காரணமாக, வெளிநாட்டு நாணயங்களுக்கான தேவை உள்நாட்டில் பெருமளவு குறைந்துள்ளது.

    Advertisement

    உபரி நிதி

    ரஷ்யாவின் நிதி விதிகளின்படி, கச்சா எண்ணெய் விலை $59க்கு மேல் போகும்போது கிடைக்கும் உபரி வருவாயைக் கொண்டு, நாட்டின் அவசரக்கால நிதியான 'தேசிய நல்வாழ்வு நிதிக்காக' சர்வதேச கரன்கி மற்றும் தங்கம் வாங்கப்படும். கடந்த ஜூன் மாதத்திற்குப் பிறகு முதல்முறையாக, இந்த மே மாதத்தில் ரஷ்யா 110 பில்லியன் ரூபிள்களை ($1.5 பில்லியன் டாலர்) இந்த நிதிக்காக ஒதுக்கியுள்ளது.

    இருப்பினும், ரூபிள் நாணயம் அளவுக்கு அதிகமாகப் பலமடைவது ரஷ்யாவின் ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு புதிய தலைவலியைக் கொடுத்துள்ளது. டாலருக்கு நிகராக ரூபிள் வலுவாக இருப்பதால், அவர்கள் டாலரில் ஈட்டும் வருவாயை ரூபிளாக மாற்றும்போது கம்மியான தொகையே கிடைக்கிறது. இது நிறுவனங்களின் லாபம் மற்றும் அரசுக்கு வரும் வரி வருவாயைச் சற்றே பாதிக்கிறது.. ஆனால், இப்போது பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதாகவும் இதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்றும் நிதி அமைச்சர் ஆண்டன் சிலுவானோவ் தெளிவுபடுத்தியுள்ளார்.

    English Summary

    Despite Western economic sanctions, the Russian Ruble has surged by 12% against the US Dollar(டாலருக்கு நிகரான அதிர்ச்சி வலுவடையும் ரூபிள்): Russia vs US dollar is creating shock for many.