279 பேர் உயிரை பறித்த ஈஸ்டர் குண்டுவெடிப்பு! 15 பேருக்கு 220 ஆண்டுகள் சிறை! இலங்கை நீதிமன்றம் அதிரடி

  • கொழும்பு: இலங்கையில் கடந்த 2019ல் அரங்கேறிய ஈஸ்டர் குண்டுவெடிப்பு ஒட்டுமொத்த உலகையும் அதிர வைத்தது. இலங்கை வரலாற்றில் நடந்த மோசமான தீவிரவாத தாக்குதல்களில் ஒன்றாக பார்க்கப்படும் இந்த வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தலா 220 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    கடந்த 2019 ஏப்ரல் 21ஆம் தேதி இலங்கையில் உள்ள மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்களை குறிவைத்து தொடர் தற்கொலைப் படை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களில் 279 பேர் உயிரிழந்தனர். இலங்கை வரலாற்றில் பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட மிக மோசமான பயங்கரவாத தாக்குதலாக இது கருதப்படுகிறது.

    Advertisement

    15 பேர் குற்றவாளிகள்

    இந்த வழக்கில் இலங்கை நடத்திய விசாரணையில் 15 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அனைவருமே குற்றவாளிகள் என இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்த நிலையில், 14 பேர் மீது கொலை, பயங்கரவாத சதி மற்றும் ஆயுதங்கள், வெடிபொருட்களை வைத்திருந்தது உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தது.

    9 பேர் விடுவிப்பு

    15வது நபர் மீது சுமத்தப்பட்ட சில குற்றச்சாட்டுகள் மட்டுமே நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது. இருப்பினும், 15 பேருக்கும் தலா 220 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவர்களுக்கு சொந்தமான சொத்துகள் மற்றும் பிற உடைமைகளை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் முதலில் 25 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அவர்களில் ஒருவர் காவலில் இருந்தபோது உயிரிழந்தார். மேலும் 9 பேர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.

    Advertisement

    என்ன குற்றச்சாட்டு

    தற்கொலை படையினருக்கு உதவியதாகவும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டது. விசாரணை ஐந்து ஆண்டுகள் நடைபெற்ற நிலையில், தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. இலங்கையில் 1976ஆம் ஆண்டுக்குப் பிறகு மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. பொதுவாக மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் மேல்முறையீடு செய்யப்படும் போது அது ஆயுள் தண்டனையாக மாற்றப்படும் நடைமுறை இருக்கிறது. இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீதிமன்றமே சிறை தண்டனை மட்டுமே வழங்கியுள்ளது.

    இந்த தீர்ப்பை இலங்கையின் ரோமன் கத்தோலிக்க திருச்சபை வரவேற்றுள்ளது. இறுதியாக நீதி கிடைத்துள்ளது என்றும் பாதிக்கப்பட்டவர்களின் ஆன்மா சாந்தி அடையும் எனவும் தெரிவித்துள்ளது.

    Advertisement

    ராஜ்பக்ச குடும்பம்

    இந்த விவகாரம் பெரிதாக வெடித்த காலத்தில்.. தாக்குதலின் பின்னணியில் இலங்கை அரசின் முக்கிய புள்ளிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த குற்றச்சாட்டில் இலங்கையின் முன்னாள் உளவுத்துறை தலைவர் சுரேஷ் சல்லே தற்போது காவலில் உள்ளார். இந்த குண்டுவெடிப்புகளை திட்டமிட்டு செயல்படுத்திய முக்கிய நபர் அவர்தான் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை சல்லே மறுத்துள்ளார்.

    இலங்கையில் குழப்பத்தை உருவாக்கி, மீண்டும் அதிகாரத்தை பிடிக்க ராஜபக்ச முயன்றதாகவும் அதற்காகவே இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதாகவும் கூட சில தகவல்கள் வெளியானது. இருப்பினும் இலங்கை அரசியலில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த ராஜபக்ச குடும்பம், ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பாக தங்களுக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளது.

    English Summary

    Sri Lankan High Court has convicted 15 people in the 2019 Easter Sunday bombings case(இலங்கை ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு): Sri Lanka Easter Bombings Case latest news in tamil.