ஹார்முஸில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. டேங்கர் கப்பல்கள் செய்த காரியம்.. இந்தியாவுக்கு தான் நிம்மதி!

  • தெஹ்ரான்: வளைகுடா போர் காரணமாக உலகையே அச்சுறுத்தி வந்த 'ஹார்முஸ் ஜலசந்தி' முடக்கம் இப்போது சற்றே சீரடையத் தொடங்கியுள்ளது உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இதேபோல வரும் நாட்களிலும் கடல் போக்குவரத்து சீரடைந்தால் இன்னும் சில வாரங்களில் கப்பல் போக்குவரத்து முழுமையான இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் போர் வெடித்தது. இந்தப் போர் வாரக் கணக்கில் நீடித்தது. இதனால் வளைகுடாவில் கச்சா எண்ணெய் சப்ளை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மேலும், ஈரானும் தனியாக ஹார்முஸ் ஜலசந்தியை அதிரடியாக முடக்கியது.

    Advertisement

    உலக பொருளாதாரம்

    உலக கச்சா எண்ணெய் மற்றும் எல்என்ஜி தேவையில் ஐந்தில் ஒரு பங்கை பூர்த்தி செய்யும் இந்தப் பாதை முடங்கியதால், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு $105 வரை எகிறி உலகப் பொருளாதாரத்தையே உலுக்கியது. குறிப்பாக இந்தியா போன்ற கச்சா எண்ணெய்யை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

    மாறும் நிலைமை!

    இந்த மாத தொடக்கம் வரையிலும் கூட ஹார்முஸில் பதற்றம் உச்சத்தில் இருந்தது. இம்மாதத் தொடக்கத்தில் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிக குறைவாக வெறும் 19 கப்பல்கள் மட்டுமே ஹார்முஸை கடந்தது. ஆனால், இப்போது நிலைமை மாறியுள்ளது. தற்போது வாரத்திற்கு 55 கப்பல்கள் என்ற சராசரி நிலைக்கு மீண்டுள்ளதாகக் கடல்சார் கண்காணிப்பு நிறுவனமான கெப்ளர் (Kpler) தெரிவித்துள்ளது.

    Advertisement

    கப்பல்களுக்கு அனுமதி

    மே 11 முதல் மே 17 வரையிலான காலகட்டத்தில், ஈரான் இஸ்லாமிய புரட்சிகரக் காவல்படை இந்த வழித்தடத்தில் கட்டுப்பாடுகளைச் சற்றே தளர்த்தி, கப்பல்கள் செல்ல அனுமதித்துள்ளது. ஒரே நாளில் மட்டும் 30க்கும் மேற்பட்ட கப்பல்களுக்கு ஈரான் அனுமதி வழங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. திரவக் கச்சா எண்ணெய் டாங்கர்கள் சுமார் 27 கப்பல்கள் கடந்துள்ளன. இதில் சீனா, ஓமன் மற்றும் ஜப்பானுக்குச் செல்லும் 3 பிரம்மாண்டக் கச்சா எண்ணெய் கப்பல்களும் அடக்கம். அதேபோல எல்பிஜி டாங்கர்கள் 16 கப்பல்கள், சரக்குக் கப்பல்கள் 15, எல்என்ஜி டாங்கர் ஒன்று என மொத்தம் 55 கப்பல்கள் ஒரே வாரத்தில் ஹார்முஸை கடந்துள்ளன.

    Advertisement

    இயல்பு நிலைக்குத் திரும்பாது

    ஹார்முஸில் நிலைமை தற்காலிகமாகச் சீரடைந்தாலும் கூட, இனி ஒருபோதும் ஹார்முஸ் போருக்கு முந்தைய இயல்பு நிலைக்குத் திரும்பப் போவதில்லை என்று ஈரான் அதிகாரிகள் கறாராகக் கூறியுள்ளனர். மேலும், இந்தச் சர்வதேச கடல்வழிப் பாதையைக் கண்காணிக்கவும், அதைக் கடந்து செல்லும் கப்பல்களிடம் இருந்து சுங்க கட்டணத்தை வசூலிக்கவும் ஒரு புதிய பிரத்தியேக அமைப்பை ஈரான் உருவாக்கியுள்ளது. இது சர்வதேசக் கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஈரானுக்குப் பயந்து பல கப்பல்கள் தங்களின் இறுதிச் செல்லும் இடத்தை மறைத்தே பயணிக்கின்றன.

    ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களின் எண்ணிக்கை 19லிருந்து 55 ஆக உயர்ந்திருப்பது, கச்சா எண்ணெய் விலை உயர்வால் தவித்து வரும் ஆசிய நாடுகளுக்குத் தற்காலிகமாக ஒரு ஆக்ஸிஜன் கொடுத்திருப்பது உண்மைதான். ஆனால், இதை முழுமையான அமைதி என்று எடுத்துக்கொள்ள முடியாது. வளைகுடாவில் முழுமையாக அமைதி திரும்பினால் மட்டுமே உலக பொருளாதாரமும் நார்மல் ஆகும்!

    English Summary

    Marine traffic through the Strait of Hormuz shows recovery signs, allowing 55 vessels to pass in a week(ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முடக்கம்): Strait of Hormuz Blockade issue latest news in tamil.