கொழும்பு: இலங்கையின் தலைநகரான கொழும்புவில், இந்திய வரலாற்று நாயகன் திப்பு சுல்தானின் தியாக வாழ்வை விளக்கும் 'தியாகச்சுடர் திப்பு சுல்தான்' என்ற சிறப்பு நூல் அண்மையில் வெளியிடப்பட்டது.
இஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழ்நாட்டின் ஈரோடு பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர் எம்.கே. ஜமால் முஹம்மது எழுதிய இந்த நூல் அறிமுகம் செய்யப்பட்டது. இலங்கை தலைநகரில் நடைபெற்ற இந்த நிகழ்வு இலக்கிய மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த புத்தக வெளியீட்டு விழாவில் மனித உரிமை ஆர்வலரும் மூத்த ஊடகவியலாளருமான முர்ஷிதீன், பிரபல தொழிலதிபர் இப்ஹம், சமூக சேவகி சியாமா பாத்திமா, துபாய் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் மற்றும் மூத்த ஊடகவியலாளர் அஹ்மட் அய்யூப் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். விழாவில் சிறப்புரையாற்றிய ஊடகவியலாளர் முர்ஷிதீன், திப்பு சுல்தானின் வீரத்தையும் தியாகத்தையும் விரிவாக எடுத்துரைத்தார். அவர் பேசுகையில்: "18-ஆம் நூற்றாண்டில், அதாவது 1782 முதல் 1799 வரை மைசூர் பகுதியை மிகச் சிறப்பாக ஆட்சி செய்த வீரமிக்க அரசர் திப்பு சுல்தான். இந்தியாவின் மீது ஆதிக்கம் செலுத்த நினைத்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியை இறுதிவரை எதிர்த்துத் துணிச்சலாகப் போரிட்டவர். இவருடைய தீரத்தைப் பாராட்டி மக்கள் இவரை 'மைசூர் புலி' என்று அன்போடு அழைக்கின்றனர். அத்தகைய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரரின் வரலாற்றை எடுத்துக்கூறும் இந்த நூல் கொழும்பு மண்ணில் வெளியாவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைய இளைய தலைமுறையினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த புத்தகத்தை வாங்கிப் படித்து அவரது வரலாற்று உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டார். ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து நின்ற திப்பு சுல்தானின் பெருமைகளை எளிய தமிழில் விவரிக்கும் இந்த புத்தகம், வாசகர்களுக்குப் பயனுள்ள வரலாற்றுத் தகவல்களை வழங்கும் என விழாவில் பங்கேற்றவர்கள் பாராட்டினர்.