இரவோடு இரவாக பொழிந்த குண்டு மழை.. அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் போது டிரம்ப் தாக்குதல்.. பதற்றம்

  • தெஹ்ரான்: ஈரான் உடனான போர் முடியப் போகிறது.. இன்னும் சில மணி நேரங்களில் அமைதி ஒப்பந்தம் இறுதியாகும் என்றெல்லாம் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ சொல்லி சில மணி நேரம் கூட ஆகவில்லை. தோஹாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, ஈரானின் தென்பகுதி மீதும் சர்வதேச எரிசக்திப் பாதையான ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகிலும் அமெரிக்க ராணுவம் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

    Advertisement

    கடந்த ஏப்ரல் 8ம் தேதி முதல் வளைகுடாப் பகுதியில் தற்காலிகப் போர்நிறுத்தம் அமலில் இருந்த சூழலில், பாரசீக வளைகுடாவில் அமெரிக்காவின் உளவு ட்ரோன் ஒன்றை ஈரான் படைகள் திடீரெனச் சுட்டு வீழ்த்தியது. இது நிலைமையை மோசமாக்கியது.. ஈரானின் இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்காவின் சென்ட்காம் படைப்பிரிவு பதிலடி கொடுத்துள்ளது.

    Advertisement

    அதிரடி தாக்குதல்

    ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள ஏவுகணை தளங்கள் மற்றும் கடலில் கண்ணிவெடிகளை வைக்க முயன்ற ஈரானியப் படகுகளை இலக்கு வைத்து அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரானின் தென்பகுதி மீதும் சர்வதேச எரிசக்திப் பாதையான ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகிலும் அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த திடீர் ஏவுகணைத் தாக்குதல் ஹார்முஸ் ஜலசந்தியின் நுழைவாயிலில் அமைந்துள்ள ஈரானின் மிக முக்கியமான கடற்படை மற்றும் விமானப் படைத் தளமான பந்தர் அப்பாஸ் (Bandar Abbas) நகரை உலுக்கியுள்ளது.

    பந்தர் அப்பாஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே அடுத்தடுத்து மூன்று பிரம்மாண்ட வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் இந்த தாக்குதல்களை முறியடிக்கப் பந்தர் அப்பாஸ் நகரின் வான் பாதுகாப்பு அமைப்புகள் உடனடியாகச் செயல்பட்டுப் பதிலடித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இதேபோன்ற வெடிச்சத்தங்கள் பாரசீக வளைகுடாவின் சிரிக் மற்றும் ஜாஸ்க் பகுதிகளிலும் கேட்டுள்ளன.

    Advertisement

    அமெரிக்க ராணுவம்

    இது தொடர்பாக அமெரிக்க ராணுவம் தரப்பில் கூறுகையில், "போர்நிறுத்தக் காலத்தில் நாங்கள் மிகுந்த கட்டுப்பாட்டை கடைப்பிடிப்போம். ஆனால், எங்கள் படைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது தற்காத்துக் கொள்வது எங்கள் உரிமை. அந்த அடிப்படையில் இந்தத் தாக்குதல்களை நடத்துவோம்" என்றார். அமெரிக்காவின் இந்த புதிய அத்துமீறல் குறித்து தோஹாவில் இருக்கும் ஈரான் தூதர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாகப் பேசவில்லை.

    அதேநேரம் ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள முகமது பாகர் சொல்காத்ர், தனது முதல் செய்திக்குறிப்பிலேயே அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் இந்தத் தார்மீகப் போரில் எவ்வித பின்வாங்கலும் கிடையாது. போர்க்களம், ராஜதந்திரக் களம் என அனைத்து முனைகளிலும் எங்கள் மக்கள் காட்டிய வீரம் தான் இன்று எதிரியை நம் முன்னால் மண்டியிட வைத்துள்ளது!" என்றார்.

    Advertisement

    பேச்சுவார்த்தை

    இந்தத் தாக்குதல்கள் ஒருபுறம் நடந்தாலும், கத்தாரின் பிரதமர் முன்னிலையில் ஈரானின் தலைமைப் பேச்சாளர் முகமது பாகர் காலிபாஃப், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் அந்நாட்டின் மத்திய வங்கி கவர்னர் ஹேமதி ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழு அமெரிக்க அதிகாரிகளுடன் தோஹாவில் தீவிரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இதில் சில முன்னேற்றங்கள் இருந்தாலும், அமைதி ஒப்பந்தம் இப்போதைக்குச் சாத்தியமில்லை என ஈரான் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாஹி தெரிவித்துள்ளார்.

    புதிய தாக்குதல்கள் நடந்த சில மணிநேரங்களிலேயே டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், "ஈரான் தனது அணுசக்திப் பொருட்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ) உடனடியாக அமெரிக்காவிடம் ஒப்படைத்து அழிக்க வேண்டும்.. அப்படி இல்லை என்றால் சர்வதேச அணுசக்தி ஆணையத்தின் முன்னிலையில் ஈரானிலேயே வைத்து அதனை அடியோடு அழிக்க வேண்டும்" என நிபந்தனையைப் போட்டுள்ளார். டிரம்ப் குறிப்பிட்டுள்ள அந்த 'அணுசக்தி ஆணையம்' 1974-லேயே கலைக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது. அது தெரியாமலேயே டிரம்ப் இந்த வினோத எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.

    Advertisement

    வளைகுடா நாடுகள்

    மறுபுறம், ஈரானுடனான இந்த அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகச் சவூதி அரேபியா, கத்தார், பாகிஸ்தான், எகிப்து, துருக்கி மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் உறவை 'ஆபிரகாம் உடன்படிக்கையில்' கட்டாயமாகக் கையெழுத்திட வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே ஐக்கிய அமீரகம் மற்றும் பஹ்ரைன் இதில் கையெழுத்திட்டிருந்தாலும், சவூதி அரேபியாவும் கத்தாரும், பாலஸ்தீனத்திற்குத் தனி நாடு அந்தஸ்து வழங்கும் வரை, நாங்கள் ஒருபோதும் இஸ்ரேலுடன் எந்தவொரு சமரசமும் செய்ய மாட்டோம்" என கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Despite ongoing peace negotiations in Doha, the US military launched retaliatory missile strikes on Iran's naval base in Bandar Abbas(ஈரான் மீது அமெரிக்கா திடீர் தாக்குதல்): US attacks Iran latest news in tamil.