நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர்

  • தெஹ்ரான்: மத்திய கிழக்கில் இப்போது போர் உச்சத்திற்கு போய் இருக்கிறது. தற்காலிக அமைதி ஒப்பந்தம் இருந்தாலும் கூட ஈரானுக்கு பிரஷர் போடும் வகையில் நள்ளிரவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விடிய காலையில் ஈரானும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் மீண்டும் ஒரு போர் வெடிக்கும் அபாயம் உருவாகி இருக்கிறது.

    Advertisement

    வளைகுடாவில் கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுடன் தொடங்கிய ஈரான் - அமெரிக்க மெகா போர், 3 மாதங்களைக் கடந்து தொடர்கிறது. இந்த போர் காரணமாக பல நூறு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த போர் காரணமாக ஹார்முஸ் முடக்கப்பட்டுள்ள நிலையில், எரிசக்தி விலையும் உச்சத்திற்கு பறந்துள்ளது.

    Advertisement

    நள்ளிரவில் தாக்குதல்

    இதனால் இந்தப் போரை முடிக்க ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடக்கிறது. தற்காலிகப் போர்நிறுத்தம் நீடிக்கிறது. ஆனால், மறுபுறம் இரு நாடுகளும் மாற்றி மாற்றி நள்ளிரவில் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது வளைகுடாப் பகுதியை மீண்டும் போர்க்களமாக மாற்றியுள்ளது. கடந்த திங்கள்கிழமை ஈரான் கடற்படையின் கண்ணிவெடி வைக்கும் படகுகள் மற்றும் ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்காவின் சென்ட்காம் படை நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, நேற்று நள்ளிரவும் அமெரிக்க ராணுவம் ஈரானுக்குள் புகுந்து அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளது.

    அமெரிக்கப் படைகளுக்கும், ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் சர்வதேச வணிகக் கப்பல்களுக்கும் அச்சுறுத்தலாக விளங்கிய ஈரானின் முக்கிய ராணுவத் தளம் ஒன்றைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார். இது மட்டுமன்றி, அமெரிக்க இலக்குகளை நோக்கிப் பாய்ந்து வந்த ஈரானின் பல போர் ட்ரோன்களையும் அமெரிக்க ராணுவம் நடுவானில் சுட்டு வீழ்த்தி வேட்டையாடியுள்ளது.

    Advertisement

    விடியக்காலையில் விழுந்த ஏவுகணைகள்

    அமெரிக்காவின் இந்த நள்ளிரவுத் தாக்குதலுக்குப் பதிலடியாக, இன்று (வியாழக்கிழமை) அதிகாலை உள்ளூர் நேரப்படி 04:50 மணிக்கு, ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை அமெரிக்காவின் முக்கிய வான்படைத் தளம் ஒன்றின் மீது ஏவுகணைகள் மூலம் அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் அந்நாடு ஊடகம் அறிவித்துள்ளது.

    ஈரானின் பந்தர் அப்பாஸ் விமான நிலையத்திற்கு அருகே அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்த ஆக்ஷன் எடுக்கப்பட்டதாகக் கூறியுள்ள ஈரான் ராணுவம், தாக்கப்பட்ட அமெரிக்க விமானத் தளம் எங்குள்ளது என்ற ரகசியமாகவே வைத்துள்ளது. "மீண்டும் அமெரிக்கா தங்களின் இறையாண்மையில் கைவைத்தால், இதைவிடப் பயங்கரமான தீர்க்கமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என ஈரான் எச்சரித்துள்ளது.

    Advertisement

    வளைகுடா அமைதி ஒப்பந்தம்

    இதற்கிடையே, வளைகுடா அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, உலக வர்த்தகத்தின் உயிர்நாடியாக விளங்கும் 'ஹார்முஸ் ஜலசந்தி' கடல் எல்லையை ஈரானும் ஓமனும் கூட்டாக இணைந்து நிர்வகிக்கப் போவதாக ஈரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதனை திட்டவட்டமாக மறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "ஹார்முஸ் ஜலசந்தி சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்காக எப்போதும் போலத் திறந்தே இருக்கும்.. அதில் யாருடைய ஆதிக்கத்தை அனுமதிக்க முடியாது" என கூறியிருக்கிறார்.

    சிக்கல்

    ஒரு கையில் அமைதி ஒப்பந்தம்.. மறு கையில் ஏவுகணை பட்டன் என அமெரிக்காவும் ஈரானும் ஆடும் இந்த ஆபத்தான போர்க்கள ஆட்டம் சர்வதேச அரசியலின் ஆகச்சிறந்த முரண்நகை. தற்காற்பிற்காகவே தாக்குதல் நடத்தினோம் என அமெரிக்காவின் சென்ட்காம் வாதாடினாலும், மூன்று நாட்களில் இரண்டு முறை ஈரானுக்குள் புகுந்து அமெரிக்கா நடத்தியுள்ள இந்தத் தாக்குதல், தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை அடியோடு சிதைத்துவிடும் அச்சுறுத்தலாகும்.

    English Summary

    Despite a temporary ceasefire, a direct military escalation occurred US CENTCOM forces launched midnight strikes inside Iran(அமெரிக்கா ஈரான் மாறி மாறி தாக்குதல் நடத்தியதால் பதற்றம்): US Iran Conflict Escalates latest news in tamil.