அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள்

  • தெஹ்ரான்: அமெரிக்கா ஈரான் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு இடைக்கால ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே இது கையெழுத்தாகும்போது அது போர் பதற்றத்தை அடுத்த 60 நாட்களுக்கு முழுமையாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடைக்கால ஒப்பந்தத்தில் உள்ள 3 முக்கியமான விஷயங்கள் என்ன.. உடன்படிக்கை கையெழுத்தான பிறகு என்ன நடக்கும் என்பது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!

    Advertisement

    வளைகுடா பகுதியில் தொடர்ந்து நீடித்து வரும் போர்ப் பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், சர்வதேச அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை கப்பல் போக்குவரத்திற்காக மீண்டும் திறப்பதற்கும், ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கும் அமெரிக்காவும் ஈரானும் ஒரு முக்கிய வரைவு உடன்படிக்கையை எட்டியுள்ளன.

    Advertisement

    ஈரான் அதிகாரிகள்

    ஜூன் 19 அன்று கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த ஒப்பந்தம், கச்சா எண்ணெய் விநியோகம், மத்திய கிழக்கு போர், சர்வதேச பொருளாதார நிச்சயமின்மை என அனைத்திற்கும் ஒரு தீர்வை தரும் என்று நம்பப்படுகிறது. இந்த உடன்படிக்கையின் முழுமையான விபரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாகப் பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை என்றாலும், இந்த வரைவு ஒப்பந்தத்தைப் பற்றி நன்கு அறிந்த ஈரான் உயர்மட்ட அதிகாரி ஒருவர் சில முக்கியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

    இந்த உடன்படிக்கையின் முதன்மை நோக்கம், போர்ப் பதற்றத்தை உடனடியாகக் குறைத்து, இரு நாடுகளுக்கும் இடையே விரிவான பேச்சுவார்த்தைக்கான ஒரு சுமூகமான சூழலை உருவாக்குவதாகும். முக்கியமாக, இது ஒரு இறுதியான அமைதி ஒப்பந்தம் அல்ல. மாறாக, இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அடுத்த 60 நாட்களுக்குள் தற்காலிகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஓர் இடைக்கால உடன்படிக்கை மட்டுமே ஆகும்.

    Advertisement

    3 முக்கியமான மேட்டர்

    இது முக்கியமாக மூன்று முக்கியப் பிரிவுகளைக் கொண்டுள்ளது: ஹார்முஸ் ஜலசந்தியை வணிகப் போக்குவரத்திற்குத் திறப்பது, ஈரானுக்குப் பொருளாதாரச் சலுகைகளை வழங்குவது மற்றும் அணுசக்திப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது ஆகியவை ஆகும். இந்த இடைக்கால ஏற்பாடு, பல ஆண்டுகளாகத் தொடரும் பதற்றத்தைத் தணித்து, இருதரப்பினரும் நம்பிக்கை மீட்டெடுக்க உதவும் என்று கருதப்படுகிறது.

    இந்த உடன்படிக்கையின் மிக முக்கியமான அம்சம் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதாகும். உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பகுதியை ஹார்முஸ் வழியாகத் தான் நடக்கிறது. இதனால், இந்த பகுதியில் ஏற்படும் எந்தவொரு தடங்கலும் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வை அதிகரிக்கும். இதனால் சர்வதேச நாடுகளின் பணவீக்கமும் அதிகரித்துவிடும்.

    Advertisement

    கட்டுப்பாடுகளை நீக்கும்

    தற்போதைய ஒப்பந்தத்தின்படி, ஈரான் இந்த பாதையை வணிகக் கப்பல்களின் பயன்பாட்டுக்காகத் திறக்கும்.. அதற்குப் பதிலாக ஈரான் துறைமுகங்கள் மீதான கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்கும். இதனால் உலக எரிசக்தி சந்தைகளில் மீண்டும் நிலைத்தன்மை ஏற்படும். குறிப்பாக, கச்சா எண்ணெய் இறக்குமதியைப் பெரிதும் நம்பியிருக்கும் இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு இது பெரும் நிம்மதியைத் தரும். எண்ணெய் விலை உயர்வு காரணமாக ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளைத் தவிர்க்கவும், சர்வதேச சப்ளை செயினை சீராக்கவும் இந்த நடவடிக்கை உதவும்.

    இதில் உள்ள அடுத்த முக்கியமான அம்சம் ஈரானுக்கு வழங்கப்படும் பொருளாதாரச் சலுகைகள் ஆகும். பேச்சுவார்த்தை நடைபெறும் காலத்தில் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதிக்காது என்றும், ஈரான் எண்ணெய் ஏற்றுமதிக்குத் தற்காலிக விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும், சர்வதேச வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் சுமார் 25 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை விடுவிக்கவும் அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

    Advertisement

    ஏன் முக்கியம்

    பல வருட பொருளாதாரத் தடைகளால் உலக நிதி அமைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்த ஈரானுக்கு, இந்த நிதி விடுவிப்பு தற்காலிக நிவாரணத்தை வழங்கும். இது தவிர, சுமார் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார புனரமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் உடன்பாட்டில் விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிதி உதவி ஈரானின் உள்நாட்டுப் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், அடிப்படை உள்கட்டமைப்பு திட்டங்களை மீட்டெடுக்கவும் உதவும்.

    அணுசக்தி விவகாரங்கள்

    அடுத்து மிக முக்கியமான அணுசக்தி விவகாரங்கள் தொடர்பானது. அமெரிக்கா - ஈரான் உறவில் அணுசக்தி மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயமாக இருந்து வருகிறது. தற்போதைய வரைவு உடன்படிக்கையின்படி, பேச்சுவார்த்தை நடைபெறும் காலத்தில் அணு ஆயுதங்களை உருவாக்கப் போவதில்லை என்றும் யுரேனியம் செறிவூட்டுவதை நிறுத்தி வைப்பதாகவும், அணுசக்தி நிலையங்களை விரிவாக்கம் செய்ய மாட்டோம் என்றும் ஈரான் உறுதியளித்துள்ளது. இதற்குப் பிரதிபலனாக, இரு நாடுகளும் அடுத்த 60 நாட்களுக்குள் விரிவான அணுசக்தி ஒப்பந்தம், செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு மற்றும் பொருளாதாரத் தடைகளை நீக்குவது குறித்து விவாதிக்க ஒப்புக்கொண்டுள்ளன.

    Advertisement

    போர் நிறுத்தம் மட்டும் இந்த உடன்படிக்கையின் இலக்கு இல்லை. மாறாக உலக பொருளாதாரம், கச்சா எண்ணெய் விலையேற்றத்தைத் தடுப்பது ஆகியவற்றையும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஈரான் மற்றும் சர்வதேச நாடுகளுக்கிடையே பொருளாதார உறவை வளர்ப்பதன் மூலம் எதிர்காலத்தில் மீண்டும் மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்

    பதற்றத்தைத் தணிக்கும்

    இந்த உடன்படிக்கை உடனடிப் பதற்றத்தைத் தணித்தாலும், முக்கியமான பேச்சுவார்த்தைகள் இனிமேல் தான் தொடங்க உள்ளன. பொருளாதாரத் தடைகளை மொத்தமாக நீக்குவது, அணு உலைகளில் சர்வதேச ஆய்வு முறைகள் மற்றும் கச்சா எண்ணெய் வர்த்தகக் கட்டுப்பாடுகள் போன்ற சிக்கலான முடிவுகள் அடுத்த 60 நாட்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும். இவை வெற்றிகரமாக நடந்தால், இதுவே கடந்த பல ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே ஏற்பட்ட மிக முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனையாக மாறும்!

    English Summary

    US and Iran have finalized a historic 60-day interim agreement ahead of the June 19 signing(அமெரிக்கா ஈரான் இடையே கையெழுத்தான முக்கியமான அமைதி ஒப்பந்தம்): US Iran peace deal latest news in tamil.