ஹார்முஸில் கப்பல் போக ஆரம்பித்த அடுத்த நொடி.. ஈரான் கைகளுக்கு வரும் பல கோடி டாலர்! எப்படி?

  • தெஹரான்: அமெரிக்கா ஈரான் இடையேயான பல மாதங்களாக நீடித்து வந்த மோதல் ஒரு வழியாக முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த முதலாம் கட்ட ஒப்பந்தத்தில் செறிவூட்டப்பட்ட யூரேனியம் தொடர்பாக எந்தவொரு டீலும் இல்லை. அதேநேரம் ஹார்முஸ் மற்றும் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் தொடர்பாக முக்கியமான ஒப்பந்தங்கள் இறுதியாகிறது.

    Advertisement

    அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே பல மாதங்களாக நீடித்து வரும் போர் பதற்றம் மற்றும் மோதல்கள் ஒரு முடிவுக்கு வரவுள்ளதாகத் தெரிகிறது. உலகப் பொருளாதாரத்தில் மிக முக்கியமான ஒரு பகுதியாகக் கருதப்படும் 'ஹார்முஸ் ஜலசந்தி' மீண்டும் திறக்கப்பட உள்ளதும், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட உள்ளதும் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கும் எனத் தெரிகிறது.

    Advertisement

    அமைதி ஒப்பந்தம்

    அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்படவுள்ள இந்த ஒப்பந்தத்தின்படி, ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் கப்பல் போக்குவரத்திற்காகத் திறக்க வேண்டும். இதற்குப் பதிலாக, அமெரிக்கா ஈரான் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகளைத் தளர்த்தும். இந்த இரண்டு நடவடிக்கைகளும் ஒரே நேரத்தில் நடைபெறும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    உலகில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெயில் பெரும் பகுதி இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே மற்ற நாடுகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. போர் பதற்றம் காரணமாக இந்தப் பாதை மூடப்பட்டிருந்தது. தற்போது இந்தப் பாதையைத் திறப்பதன் மூலம் உலகளாவிய எரிசக்தி போக்குவரத்து மீண்டும் சீராகும்.

    Advertisement

    கண்ணி வெடிகள்

    அதேநேரம் ஹார்முஸ் ஜலசந்தியில் வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றுவது ஒரு சவாலான காரியம். ஒப்பந்தத்தின் முதல் கட்டமாகப் போக்குவரத்து தொடங்கப்படும். அதன் பிறகு, அடுத்த கட்டமாகவே இந்தப் பாதையில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவும் பாகிஸ்தானும் இந்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் எனக் கூறியுள்ளது. ஆனால், ஈரான் தரப்பு சற்று நிதானமாகவே உள்ளது. இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகாது என்றும், ஆனால் அடுத்த சில நாட்களில் இது சாத்தியமாகலாம் என்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஈரானுக்கு நல்ல செய்தி

    இந்த ஒப்பந்தம் ஈரானுக்குப் பொருளாதார ரீதியாகப் பெரும் நிம்மதியைத் தரும்.. ஏனென்றால் பல ஆண்டுகளாக அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளால் ஈரான் பொருளாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்து ஈரான் மீண்டு வரும். மேலும், அமெரிக்காவால் முடக்கி வைக்கப்பட்டிருந்த ஈரானின் பில்லியன் கணக்கான டாலர் சொத்துக்கள் விடுவிக்கப்படும். குறிப்பாக ஈரான் தனது கச்சா எண்ணெய்யை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்படும். இது ஈரான் பொருளாதாரத்தைக் காப்பாற்ற உதவும்.

    Advertisement

    எல்லாம் முடியாது

    அதேநேரம் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதுடன் அனைத்தும் முடிந்துவிடாது. இது முதலாம் கட்டம் மட்டுமே.. ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த விவாதங்கள் அடுத்த கட்டமாகத் தொடங்கும். ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு வரும் 60 நாட்களில், ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அழிப்பது அல்லது அகற்றுவது குறித்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால், அது உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதியைத் தரும். குறிப்பாக, கச்சா எண்ணெய் விலை குறைவதற்கும், சர்வதேச வர்த்தகம் தடையின்றி நடப்பதற்கும் இது வழிவகுக்கும். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான நீண்ட காலப் பகை இதன் மூலம் தீருமா என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

    English Summary

    The US and Iran are close to signing a Phase-1 peace agreement to reopen the Strait of Hormuz and lift economic sanctions(அமெரிக்கா ஈரான் இடையே வெடிக்கும் போர் பதற்றம்): US Iran Peace Treaty latest news in tamil.