டார்க் பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்?

  • வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் எவ்வித முன்னேற்றமும் இன்றி முட்டுக்கட்டையில் நின்று கொண்டிருக்கும் இந்தச் சூழலில், உலக வர்த்தகத்தின் மிக முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி இருதரப்பாலும் முடக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், அங்குச் சிக்கித் தவிக்கும் வணிகக் கப்பல்களை மீட்க அமெரிக்கப் படைகள் அதிரடியாகக் களம் இறங்கியுள்ளதாம். கடந்த மூன்று வாரங்களில் மட்டும், குறைந்தது 70 கப்பல்களை அமெரிக்கா, ஹார்முஸை கடக்க உதவியுள்ளது.

    Advertisement

    அமெரிக்கா ஈரான் இடையேயான போர் பல மாதங்களாகத் தொடர்ந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிப் போர் இதுவரை முடிவுக்கு வரவில்லை. நேரடித் தாக்குதல்கள் நின்றுவிட்ட போதிலும், பதற்றம் தொடர்கிறது. குறிப்பாக ஹார்முஸை பதற்றம் இருக்கிறது. ஒரு பக்கம் ஈரான் படைகளை ஹார்முஸை முடக்கியுள்ள நிலையில், இன்னொரு பக்கம் பாதுகாப்பிற்கு அமெரிக்கா நிற்கிறது.

    Advertisement

    ஈரான்

    ஈரான் நாட்டின் எல்லையை ஒட்டிச் செல்லும் இந்த ஹார்முஸ் ஜலசந்தியில், ஈரானின் அதிகாரப்பூர்வ அனுமதி மற்றும் சுங்கக் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் கப்பல்கள் மீது ட்ரோன் அல்லது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படும் அச்சுறுத்தல் நிலவி வந்தது. ஈரான் இது தொடர்பாக வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்திருந்தது.. சில கப்பல்கள் மீது தாக்குதல்களும் நடத்தியிருந்தது. இதனால் பல கப்பல்கள் அந்தப் பக்கம் செல்லவே அஞ்சினர்.

    அமெரிக்கா உதவி

    இந்தச் சூழலில் தான் அங்குச் சிக்கியிருந்த கப்பல்களுக்கு அமெரிக்கா உதவியுள்ளது தெரிய வந்துள்ளது. சுமார் 70+ கப்பல்கள் அந்தப் பகுதியைக் கடந்து செல்ல அமெரிக்கா உதவியதாகக் கூறப்படுகிறது. ஈரானின் ரேடார்களில் சிக்காமல் இருப்பதற்காக, அமெரிக்க ராணுவத்தின் வழிகாட்டுதலைப் பெறும் கப்பல்கள் தங்களின் இருப்பிடத்தைக் காட்டும் டிரான்ஸ்பாண்டர் கருவிகளை முற்றிலும் அணைத்துவிட்டுப் பயணிக்கின்றன. இதுபோல டிரான்ஸ்பாண்டரை மறைத்துவிட்டுப் பயணிக்கும் கப்பல்களை டார்க் பேஸேஜ் என்றே குறிப்பிடுவார்கள்.

    Advertisement

    கப்பல்களின் பாதுகாப்பைக் கருதி அவை பயணிக்கும் துல்லியமான பாதையை அமெரிக்கா பொதுவெளியில் வெளியிடவில்லை. இருப்பினும், அமெரிக்கா காட்டும் பாதையானது ஈரானின் கடற்கரை எல்லைக்கு மிக அருகில் இல்லாமல், பாதுகாப்பான தூரத்தில் இருப்பதாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    அமெரிக்கப் படைகள்

    அமெரிக்கா வழிகாட்டும் கப்பல்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும், 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' வெளியிட்டுள்ள செய்தியின்படி, கிட்டத்தட்ட 2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யைச் சுமந்து வந்த ஒரு மெகா கிரேக்க சூப்பர்டேங்கர் கப்பலை அமெரிக்கக் கடற்படை பத்திரமாக வழிநடத்திக் கொண்டு சேர்த்துள்ளது தெரிய வந்துள்ளது.

    Advertisement

    கடந்த மே மாத தொடக்கத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க 'ப்ராஜெக்ட் ஃப்ரீடம்' என்ற திட்டத்தைத் தொடங்கினார். ஆனால், தொடங்கிய சில மணிநேரங்களிலேயே அந்தத் திட்டம் திடீரென வாபஸ் பெறப்பட்டது. தற்போது அமெரிக்காவின் சென்ட்ரல் கமாண்ட் கப்பல்களுக்கு நேரடியாகத் துப்பாக்கி ஏந்திய கடற்படைப் பாதுகாப்பை வழங்கவில்லை என்றாலும், வணிகக் கப்பல்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து கொண்டு, அவை ஹார்முஸ் ஜலசந்தையைத் தடையின்றிக் கடப்பதற்கான ராஜதந்திர ஒருங்கிணைப்பு உதவிகளைத் தொடர்ந்து வழங்கி வருவது தெரிய வந்துள்ளது.

    பேச்சுவார்த்தை

    மறுபுறம், லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்கா உடனான மறைமுகப் பேச்சுவார்த்தைகளை ஈரான் நேற்று (திங்கட்கிழமை) நிறுத்தியுள்ளதாக 'தஸ்னிம்' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. "ஒரு முனையில் போர்நிறுத்தத்தை மீறினால், அது அனைத்து முனைகளிலும் போர்நிறுத்தத்தை மீறியதற்குச் சமம்! இதற்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் தான் முழுப் பொறுப்பு!" என்றார்.

    English Summary

    US Central Command successfully coordinated the safe passage of over 70 commercial vessels(ஹார்முஸ் ஜலசந்தியில் தொடரும் பதற்றம்): All things to know about Strait of Hormuz.