உலகின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) ஈரான் அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய பிட்காயின் அடிப்படையிலான நவீன கப்பல் காப்பீட்டுத் திட்டத்திற்கு அமெரிக்கா மிகப் பெரிய முட்டுக்கட்டை போட்டுள்ளது.
ஈரானுக்குச் சொந்தமான சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் தோராயமாக 9500 கோடி ரூபாய்) மதிப்பிலான கிரிப்டோகரன்சி சொத்துக்களை அமெரிக்கா அதிரடியாகப் முடக்கி கைப்பற்றியுள்ளது. அமெரிக்க அரசு நிர்வாகம் ஈரானுக்கு எதிராகத் தீவிரமாக நடத்தி வரும் பொருளாதார நெருக்கடி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
ரீகன் தேசிய பொருளாதார மாநாட்டில் (Reagan National Economic Forum) நடைபெற்ற ஃபாக்ஸ் பிசினஸின் "குட்லோ" (Kudlow) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) இந்த முக்கியமான தகவலை வெளியிட்டார், உலக அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
அமெரிக்க நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் பேசுகையில், அமெரிக்க நிர்வாகம் ஈரானுக்கு எதிராக எடுத்து வரும் கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் சொத்துப் பறிமுதல் நடவடிக்கைகள், அந்த நாட்டை ஒரு கடுமையான நிதி நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் பொருளாதார வேட்டையின் கீழ், ஈரானின் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான கிரிப்டோ சொத்துக்கள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன. ஈரானிய அரசு பயன்படுத்தி வந்த கிரிப்டோ டிஜிட்டல் வாலட்களை (Crypto Wallets) அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகள் நேரடியாகக் கண்டறிந்து, அவற்றிலிருந்த டிஜிட்டல் பணத்தை முழுமையாகப் பறிமுதல் செய்துள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார். இது ஈரானின் நிதி நிலையை முற்றிலுமாக நிலைகுலையச் செய்துள்ளது. சர்வதேச அளவில் அமெரிக்க டாலர், சீன யூவான் அல்லது ஐரோப்பிய யூரோ என எந்தவொரு பாரம்பரியப் பணப் பரிவர்த்தனை வடிவத்தில் ஈரான் வர்த்தகம் செய்தாலும், மேற்கத்திய நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து அதன் மீது உடனடியாகப் பொருளாதாரத் தடைகளை விதித்து விடுகின்றன. இதனால் ஈரானால் உலக நாடுகளுடன் சுதந்திரமாகப் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடிவதில்லை. இந்த சர்வதேச தடைகளை உடைத்தெறிந்து, உலகளாவிய வர்த்தகத்தை எவ்விதக் கட்டுப்பாடும் இன்றித் தொடர்வதற்காகவே ஈரான் கிரிப்டோகரன்சி என்ற டிஜிட்டல் நாணய முறையைக் கையில் எடுத்தது. இதன் ஒரு பகுதியாகவே, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்கள் மற்றும் சரக்குகளுக்கு கிரிப்டோகரன்சி அடிப்படையில் காப்பீடு வழங்கும் "ஹார்முஸ் சேஃப்" (Hormuz Safe) என்ற புதிய டிஜிட்டல் தளம் ஈரானால் தொடங்கப்பட்டது. உலகின் எந்தவொரு நாட்டைச் சேர்ந்த கப்பல் உரிமையாளர்கள் மற்றும் சரக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களும் இந்தத் தளத்தில் பதிவு செய்து, பிட்காயின் (Bitcoin) நாணயம் வாயிலாகப் பணம் செலுத்தி தங்களின் கப்பல்களுக்குக் காப்பீட்டுப் பாதுகாப்புப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. பிட்காயின் என்பது எந்தவொரு தனிப்பட்ட நாட்டின் கட்டுப்பாட்டிலும் இல்லாத ஒரு திறந்தவெளி நாணயம் (Open Currency) என்பதால், இதனை மேற்கத்திய அரசுகளால் கண்காணிக்கவோ அல்லது தடுத்து நிறுத்தவோ முடியாது என்று ஈரான் கணக்குப்போட்டது. இந்த "ஹார்முஸ் சேஃப்" திட்டம் மூலம் ஆண்டுக்கு 10 பில்லியன் டாலர் (சுமார் 83,000 கோடி ரூபாய்) வரை பெரும் வருவாய் ஈட்டவும் ஈரான் அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால் தற்போது இதற்கும் அமெரிக்கா வேட்டு வைத்துள்ளது என்பது ஈரானுக்கு பெரும் சோமாக மாறியுள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடி கிரிப்டோ வாலட் பறிமுதல் நடவடிக்கையால் ஈரானின் உள்நாட்டுப் பொருளாதாரம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாக அமெரிக்க நிதித்துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார். தற்போதைய கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக ஈரானியப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்குக் கடந்த சில மாதங்களாக சம்பளம் கூட வழங்க முடியாத இக்கட்டான சூழல் அங்கு உருவாகியுள்ளது. இதன் விளைவாக ஈரானில் பணவீக்கம் (Inflation) முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அசுர வேகத்தில் உயர்ந்து, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விண்ணைத் தொட்டுள்ளன.கிரிப்டோகரன்சி பறிமுதல்
ஹார்முஸ் சேஃப் தளம்
சம்பளம் கொடுக்க கூட காசு இல்ல