திரும்பிய பக்கமெல்லாம் மரண ஓலம்.. வெனிசுலா இரட்டை நிலநடுக்கம்.. 250ஐ நெருங்கும் உயிரிழப்புகள்!

  • வெனிசுலா: இந்திய நேரப்படி நேற்று அதிகாலை வெனிசுலா நாட்டை இரட்டை நிலநடுக்கம் தாக்கியது. வெறும் ஒரு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து தாக்கிய இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த வெனிசுலாவையும் புரட்டிப் போட்டது. இதன் மீட்புப் பணிகள் ஒரு பக்கம் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை சுமார் 235 பேர் பூகம்பத்தால் உயிரிழந்துள்ளனர்.

    Advertisement

    வெனிசுலாவில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இயற்கை பேரிடரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளது என்றும், மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை என்றும் அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை அன்று அறிவித்துள்ளது.

    Advertisement

    உயிரிழப்புகள் அதிகரிப்பு

    சேதமடைந்த கட்டிடங்களில் இருந்து மீட்புப் பணிகளை அதிகாரிகள் தீவிரமாக நடத்தி வரும் நிலையில், உயிரிழப்புகள் எண்ணிக்கை 188ல் இருந்து 235 ஆக உயர்ந்துள்ளதாகவும், 1,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் கார்லோஸ் அல்வராடோ தெரிவித்துள்ளார்.

    புதன்கிழமை அன்று ஒரே நிமிட இடைவெளியில் ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆக பதிவான இரண்டு மாபெரும் நிலநடுக்கங்கள் வெனிசுலா நாட்டை உலுக்கியெடுத்தன. இந்த இரட்டை நிலநடுக்கங்கள் காரணமாகத் தலைநகர் கராகஸ் மற்றும் லா குவைரா போன்ற பகுதிகளில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியதோடு, பெருமளவிலான உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

    Advertisement

    மிக மோசமான நிலநடுக்கம்

    கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் அந்நாட்டைத் தாக்கிய மிக மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அமெரிக்கா, அர்ஜென்டினா, பிரேசில், மெக்சிகோ, பொலிவியா, சிலி, பனாமா மற்றும் ஈக்வடார் உள்ளிட்ட பல உலக நாடுகள் வெனிசுலாவுக்கு உதவிகளை வழங்க முன்வந்துள்ளன.

    தலைநகர் கராகஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான அதிர்வுகள் காரணமாக மக்கள் பீதியடைந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர். இதனால் அங்குள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் அலுவலக கட்டிடங்கள் உடனடியாக காலி செய்யப்பட்டன. பேரிடரின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, கராகஸ் நகருக்கு அருகிலுள்ள சைமன் பொலிவார் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

    Advertisement

    அவசரநிலை

    தற்போதைய அசாதாரணச் சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளார். மேலும், பள்ளி கட்டிடங்களைத் தற்காலிக நிவாரண முகாம்களாகவும், நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையங்களாகவும் பயன்படுத்துவதற்குக் கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளதால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த பேரழிவைத் தொடர்ந்து, இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள தங்களது உறவினர்களைத் தேடி அலையும் மக்களின் நெஞ்சை உலுக்கும் காட்சிகளைப் பார்க்க முடிகிறது. தங்கள் வீடுகளை இழந்து வீதிகளுக்கு வந்த கராகஸ் நகர மக்கள், தங்களது செல்ல பிராணிகளுடன் நடைபாதைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

    Advertisement

    நிதி ஒதுக்கீடு

    பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைக்க இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தலைமையிலான வெனிசுலா அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உள்கட்டமைப்பு, மருத்துவமனைகள் மற்றும் வீடுகளைப் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க முதற்கட்டமாக 200 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மறுசீரமைப்பு நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. மேலும், இந்த பேரிடரில் தங்களது தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளை இழந்த மக்களுக்கு உதவும் வகையில் பொது மற்றும் தனியார் வங்கிகள் மூலமாக சிறப்புக் கடன் உதவிகள் வழங்கப்படும் என்றும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    The death toll from Venezuela's twin earthquakes has risen to 235, with over 1,500 injured(வெனிசுலாவை அதிர வைத்த இரட்டை நிலநடுக்கம்): Venezuela Earthquake latest news in tamil.