இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா?

  • மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நம் நாட்டுக்கு பெரிய ஆஃபரை வழங்கி உள்ளார். 5ம் தலைமுறையை சேர்ந்த ஸ்டெல்த் ரக சுகோய் எஸ்யூ-57 ரக போர் விமானங்களை இந்தியாவுடன் சேர்ந்து தயாரிக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் விரைவில் 5ம் தலைமுறை விமானத்தை வாங்க திட்டமிட்டு வரும் நிலையில் ரஷ்யாவின் இந்த ஆஃபர் நம் நாட்டுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த சுகோய் எஸ்யூ -57 ஸ்டெல்த் போர் விமானத்தின் சிறப்புகள் என்ன? ரஷ்யாவின் ஆஃபரை மத்திய அரசு ஏற்குமா? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Advertisement

    ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு விமானப்படை மிகவும் முக்கியம். அந்த வகையில் நம் நாட்டின் விமானப்படையும் பலமாக கட்டமைக்கப்பட்டு வருகிறது. நம் நாட்டின் விமானப்படை வீரர்களின் திறமைக்கும் கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடத்தப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையே சாட்சியாகும். குறைந்த நேரத்தில் துல்லிய தாக்குதல் நடத்துவதில் நம் நாட்டின் விமானப்படை கைதேர்ந்ததாக உள்ளது.

    Advertisement

    ஆனால் தற்போது நம் நாட்டின் விமானப்படையில் போர் விமானங்களின் பற்றாக்குறை உள்ளது. அதோடு நவீன ரக 5ம் தலைமுறை விமானங்கள் இல்லாமல் உள்ளது. அமெரிக்கா, சீனா, ரஷ்யாவிடம் 5ம் தலைமுறை விமானங்கள் உள்ளன. ஆனால் நம் நாட்டிடம் அதிநவீன 'ரபேல்' போர் விமானங்கள் தான் உள்ளன. இந்த 'ரபேல்' போர் விமானங்கள் 4.5ம் தலைமுறையை சேர்ந்தவை.

    தற்போது ஒவ்வொரு நாடுகளுக்கும் இடையே மோதல் என்பது அதிகரித்து வருகிறது. இதனால் காலத்துக்கு ஏற்ப நவீன ரக போர் விமானங்களை நவீனமயமாக்குவது தேவையாக உள்ளது. இதனை மத்திய அரசும் உணர்ந்துள்ளது. இதனால் தான் 5ம் தலைமுறை விமானத்தை சொந்தமாக்க உருவாக்க திட்டமிட்டுள்ளது. ஏஎம்சிஏ எனும் மேம்பட்ட நடுத்தர போர் விமானம் (AMCA or Advanced Medium Combat Aircraft) திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.

    Advertisement

    இதன் முக்கிய நோக்கம் என்பது இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படைக்காக 5ம் தலைமுறை விமானத்தை உருவாக்குவது தான். இந்த விமானம் அனைத்து வானிலைகளிலும் இயங்கும் வகையிலும், நவீன வசதியுடன் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2035ம் ஆண்டுக்குள் உற்பத்தியை தொடங்கும் வகையில் இந்த திட்டத்தை Aeronautical Development Agency எனும் மத்திய பாதுகாப்பு துறையின் ஏஜென்சி திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில் தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நம் நாட்டுக்கு பெரிய ஆஃபரை வழங்கி உள்ளது. அதாவது ரஷ்யாவிடம் தற்போது சுகோஸ் எஸ்யூ-57 ஸ்டெல்த்(Sukhoi Su-57) என்ற 5ம் தலைமுறை விமானம் உள்ளது. இது ஸ்டெல்த் வகையை சேர்ந்தது. அதாவது எதிரிகளின் ரேடாரில் சிக்காமல் அதிரடியாக தாக்குதல் நடத்தும் தன்மை கொண்டது. இந்த விமானத்தை இந்தியாவுடன் சேர்ந்து தயாரிக்க தயார் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுபற்றி விளாடிமிர் புதின் கூறுகையில், ''இந்தியாவுடன் சேர்ந்து 5ம் தலைமுறை விமானத்தை தயாரிக்க தயாராக இருக்கிறோம். இது சாத்தியமாகும் பட்சத்தில் நம் நாட்டுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான உறவு இன்னும் ஆழமாகும். இதுதொடர்பான ஒப்பந்தத்துக்கு எந்த தடையும் இல்லை'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் இந்தியா ஒப்புக்கொண்டால் சுகோய் எஸ்யூ -57 ஸ்டெல்த் ரக 5ம் தலைமுறை விமானத்தை இருநாடுகளும் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளலாம் என்பதை அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

    இதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. ரஷ்யாவும், நம் நாடும் நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன. நம் நாட்டில் பயன்பாட்டில் உள்ள ராணுவ தளவாடங்களில் 60 சதவீதத்துக்கு மேலானவை ரஷ்யாவில் இருந்து வாங்கியவை தான். மேலும் தொடர்ந்து புதின்- மோடி இடையே நல்ல உறவு உள்ளது. இப்படியான சூழலில் தான் இந்த ஆஃபரை புதின் வழங்கி உள்ளார்.

    Advertisement

    ஆனால் இந்த ஆஃபரை இந்தியா ஏற்குமா? என்பது கேள்விக்குறி தான். ஏனென்றால் இதற்கு முன்பு கடந்த 2018 ம் ஆண்டில் ரஷ்யா இதுபேன்ற ஒரு திட்டத்தை முன்வைத்தது. எஃப்.ஜி.எஃப்.ஏ எனும் 5ம் தலைமுறை போர் விமானங்கள்(FGFA or Fifth Generation Fighter Aircraf) என்ற பெயரில் அந்த திட்டத்தை முன்வைத்தது. அதில் ரஷ்யா - இந்தியா 5ம் தலைமுறை விமானத்தை தயாரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதனை இந்தியா மறுத்ததோடு, தனியாகவே தயாரித்து கொள்கிறோம் என்று அறிவித்தது.

    இதன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. அதாவது SU -57 விமானத்தின் ஸ்டெல்த் திறன் பற்றி நம் நாடு கவலை தெரிவித்தது. அதோடு தொழில்நுட்ப பரிமாற்றத்திலும் சில கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டது. இதனால் இந்தியா அந்த திட்டத்தை ஏற்கவில்லை. ஆனால் தற்போது மீண்டும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த ஆஃபரை வழங்கி உள்ளார். இது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    ஏனென்றால் ரஷ்யாவின் இந்த சுகோய் எஸ்யூ -57 ரக போர் விமானம் என்பது அமெரிக்காவின் எஃப் 22 ராப்டர் மற்றும் எஃப் 35 ரக போர் விமானங்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டத. இந்த விமானத்தை ரஷ்யாவின் சுகோய் நிறுவனம் தயாரிக்கிறது. மணிக்கு மாக் 2 வேகத்தில செல்லும் திறன் கொண்டது. அதாவது மணிக்கும் 2,400 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும். இந்த விமானத்தில் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் நிற்காமல் 3,500 கிலோமீட்டர் வரை பறக்கும் தன்மை கொண்டது.

    ஸ்டெல்த் தொழில்நுட்பம் (Stealth Technology) உள்ளதால் எதிரிகளின் ரேடாரில் சிக்காது. எதிரி நாட்டு ரேடார்களின் கண்களில் மண்ணைத் தூவி எளிதில் சிக்காமல் மறைந்து தாக்குதல் நடத்தும். விமானத்தின் உள்ளேயே ஏவுகணைகளை பதுக்கி வைத்து கொள்ள முடியும். இதன் இன்ஜினில் 'Thrust Vectoring' தொழில்நுட்பம் உள்ளது. இதனால் குறுகிய இடத்திலேயே சட்டென விமானத்தை திருப்பி எதிரிகளின் விமானங்களை தாக்க முடியும்.

    இது மல்டிரோல் திறன் கொண்டதாக உள்ளது. இதனால் இந்த விமானத்தை வைத்து வான்வழித் தாக்குதல் (Air-to-Air), வானில் இருந்து தரை வழி தாக்குதல் (Air-to-Ground) மற்றும் வானில் இருந்து கடலில் எதிரிகளின் இலக்கை தாக்குதல் (Air-to-Sea) என அனைத்து வகை தாக்குதல்களுக்கும் பயன்படுத்த முடியும். நவீன ரேடார் உள்ளதால் ஒரே நேரத்தில் பல நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்குகளை கண்காணித்து அதன் மீது துல்லியமாக தாக்குதல் நடத்த முடியும். ஏஐ தொழில்நுட்ப வசதி உள்ளதோடு, கணிணி ஆட்டோமேஷன் வசதி உள்ளது. இதனால் பைலட் பணியின் சுமை பெருமளவு குறையும்.

    மேலும் நம்முடைய எதிரியான பாகிஸ்தான் சீனாவிடம் இருந்து ஜே-35ஏஇ எனும் 5ம் தலைமுறை போர் விமானங்களை வாங்க தயாராகி வருகிறது. இது நம் நாட்டுக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. இதனால் நம்நாட்டுக்கும் 5ம் தலைமுறை போர் விமானங்கள் அவசியமானதாக உள்ளது. இதனால் ரஷ்யாவின் இந்த புதிய ஆஃபரை இந்தியா ஏற்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    முன்னதாக கடந்த ஆண்டு அமெரிக்க அதிபராக பொறுப்பபேற்ற டிரம்பை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது அமெரிக்கா அந்த நாட்டின் எஃப்-35 ரக 5ம் தலைமுறை விமானத்தை நம் நாட்டுக்கு தருவதாக கூறியது. ஆனால் நம் நாடு அதனை ஏற்கவில்லை. தற்போது ரஷ்யாவிடம் இருந்து சுகோய் எஸ்யூ -57 ரக போர் விமானத்தை இணைந்து தயாரிக்கும் ஆஃபர் வந்துள்ளதால் இரண்டையும் ஒப்பீடு செய்து மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும் என்கின்றனர் டிஃபென்ஸ் வல்லுநர்கள்.

    English Summary

    Russia offers to share Su-57 stealth fighter technology with India, underpinning deeper defence cooperation while evaluating timelines for production and transfer. The discussion follows past FGFA attempts and contrasts with other regional air force developments, including potential acquisitions from China and the United States.