இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தானியங்கி காரை உருவாக்கிய இளைஞர் ஒருவர், அதை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்திருக்கிறார். அப்போது நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.
டெஸ்லா தொடங்கி.. மஹிந்திரா வரை செல்ஃப் டிரைவ் கார்கள் வந்துவிட்டன. ஆனால், இதன் விலை ரொம்ப அதிகம். எனவே, சாமானிய மக்கள் பயன்படுத்தும் கார்களில் இதுபோன்ற வசதியை கொண்டுவர பாகிஸ்தானை சேர்ந்த ஜாஃபர் என்பர் தீவிரமாக முயன்று வந்தார்.
முயற்சி கை கொடுத்தது. அவர் நினைத்தபடி.. குறைந்த விலை கொண்ட சாதாரண காரில் செல்ஃப் டிரைவ் அம்சத்தை கொண்டு வந்திருந்தார். எல்லா வேலையும் முடிந்துவிட்டது.. இப்போது இந்த காரை ஓட்டி காட்டி, பாகிஸ்தானிலும் ஐன்ஸ்டீன்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதுதான். காரின் பின்னால் பத்திரிகையாளர் ஒருவரை உட்கார வைத்துக்கொண்டு, டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் ஜாஃபர் உட்கார்ந்து கொண்டு காரை டெஸ்ட் டிரைவுக்கு கொண்டுவந்துவிட்டார். காரும் நன்றாகத்தான் ஓடியது. "பார்த்தீங்களா.. பாகிஸ்தானில் திறமையானவர்களுக்கு பஞ்சமில்லை" என்று ஜாஃபர் கூறினார். அவர் பேசியது எல்லாம் வீடியோவில் ரெக்கார்ட் ஆகிக்கொண்டிருக்க.. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் கார் கட்டுப்பாட்டை இழந்து.. சாலையின் ஓரத்தில் நின்றுக்கொண்டிருந்த போலீஸ் ஜீப் மீது மோதியது. அவ்வளவுதான்.. உள்ளே இருந்த போலீஸ்காரர்.. என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க என்று டென்ஷன் ஆகிவிட்டார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது. இந்த சம்பவம் இஸ்லாமாபாத்தின் டி-சௌக் பகுதியில் நடந்திருககிறது. திடீரென இன்டெர்நெட் துண்டிக்கப்பட்டதுதான் கார் கட்டுப்பாட்டை இழந்து, போலீஸ் ஜீப்பை இடித்ததற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. காரில் பின்னால் சீட்டில் உட்கார்ந்திருந்த பத்திரிகையாளர் முகமது அலிஜா கூறுகையில், "இதுபோன்ற கண்டுபிடிப்புகளை நாம் ஊக்குவிக்க வேண்டும். அதே நேரத்தில் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார். இந்த கார் டெஸ்லா கார் மாதிரி முழுமையான அதிநவீன ஆட்டோமேட்டிக் ஏஐ மூலம் இயங்கும் கார் கிடையாது. இது செயற்கைக்கோள் மற்றும் இன்டெர்நெட் மூலம் தொலைதூரத்திலிருந்து லேப்டாப் அல்லது மொபைல் அப்ளிகேஷன் மூலம் இயக்கப்பட்ட ஒரு ப்ரோட்டோடைப் கார் ஆகும். இவரது நோக்கம் உலகின் எந்த மூலையிலிருந்தும் செல்போன் அல்லது லேப்டாப் மூலம் இயங்கும் காரை உருவாக்குவதுதான். என்னதான் இந்த சம்பவத்தை பற்றி சோஷியல் மீடியாக்களில் பலரும் விமர்சித்திருந்தாலும்.. எந்த நிறுவனத்தின் ஆதரவும் இல்லாமல், தனி நபராக ஜாஃபர் இந்த காரை உருவாக்கியிருப்பது நிச்சயம் திறமையான விஷயம்தான் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.