மூச்சு இருந்தது.. 130 அடியில் பங்கி ஜம்பிங் விபரீதம்.. இளம்பெண்ணுக்கு நடந்தது என்ன! பகீர் தகவல்

  • பிரேசிலியா: பிரேசில் நாட்டில் பங்கி ஜம்பின்போது கயிறு மாட்டப்படாததால் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த பகீர் சம்பவம் அரங்கேறியது. இதற்கிடையே அன்றைய தினம் என்ன நடந்தது.. அந்த பெண் கீழே விழுந்தவுடன் என்ன செய்தார்கள் என்பது தொடர்பாகச் சம்பவத்தை நேரில் பார்த்த நர்ஸ் சில பரபர தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

    Advertisement

    பொதுவாகவே பலருக்கும் சாகச விளையாட்டுகள் எப்போதும் ரொம்பவே பிடிக்கும். அந்த விளையாட்டு கொடுக்கும் த்ரில்லிங் அனுபவம் எப்போதுமே தனி. ஆனால், முறையான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாதபோது, அதே சாகசம் ஒருவரின் உயிரைப் பறிக்கும் எமனாகவும் மாறிவிடும். அப்படியொரு சம்பவம் சமீபத்தில் பிரேசில் நாட்டில் நடந்த நிலையில், அது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    Advertisement

    என்ன நடந்தது!

    அதாவது பிரேசிலின் சாவ் பாலோ மாகாணத்தில் உள்ள லிமேரா மற்றும் கோர்டிரோபோலிஸ் நகரங்களுக்கு இடையே 'ஸ்கெலட்டன் பிரிட்ஜ்' என்று அழைக்கப்படும் ஒரு பாலம் உள்ளது. இது சாகச விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இங்கு 21 வயதான மரியா எடுவார்டா ரோட்ரிக்ஸ் டி ப்ரீடாஸ் என்ற இளம்பெண் பங்கி ஜம்பிங் செய்யச் சென்றார்.

    சுமார் 130 அடி உயரம் கொண்ட பாலத்திலிருந்து பங்கி கயிற்றை கட்டி தூக்கி எரிவார்கள். அதுதான் அந்த ஊர் ஸ்டைல்.. ஆனால், மரியாவை தூக்கி எரிந்தபோது, அவரது உடலில் பாதுகாப்பு கயிறு இணைக்கப்படவில்லை. இதனால் அவர் நேரடியாகத் தரையில் மோதி உயிரிழந்தார். சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்தச் சம்பவத்தின் வீடியோ பார்ப்பவர்களை உறைய வைக்கிறது.

    Advertisement

    கயிறு இல்லை

    அதில் அங்கிருந்த பயிற்சியாளர்கள் அந்தப் பெண்ணைத் தங்கள் தோளில் தூக்கி வைத்து, பாலத்தின் விளிம்பிலிருந்து கீழே தள்ளிவிடுவது தெரிகிறது. அவர் தூக்கி எரிந்த சில நொடிகளில், அங்கிருந்தவர்கள் "கயிறு இணைக்கப்படவில்லை" என்று அலறுவதும் கேட்கிறது. மிகவும் அலட்சியமாக, பாதுகாப்பு கயிற்றை அவரது உடலில் மாட்டாமலேயே அவரை கீழே தள்ளிவிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    நர்ஸ் சொன்ன தகவல்

    இதற்கிடையே விபத்து நடந்த இடத்திற்கு முதலில் சென்ற ராய்சா டயஸ் என்ற செவிலியர் இது தொடர்பாக சில அதிர வைக்கும் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவர் அப்போது பணியில் இல்லை என்றாலும், அந்தப் பெண்ணைக் காப்பாற்ற உடனடியாக ஓடிச் சென்றார். அவர் மேலும் கூறுகையில், "அந்தப் பகுதி மிகவும் செங்குத்தாகவும், சேறும் சகதியுமாக இருந்ததால் கீழே இறங்குவது கடினமாக இருந்தது. நான் என் கைகளைக் காயப்படுத்திக் கொண்டு எப்படியோ கீழே இறங்கினேன். அங்கு ஒரே ஒரு கயிறு மட்டுமே இருந்தது" என்று அவர் கூறினார்.

    Advertisement

    அவர் கீழே சென்றபோது, மரியா எடுவார்டா உயிருடன் தான் இருந்தார். நர்ஸ் ராய்சா அவரிடம் பேசவும் செய்துள்ளார். அவர் மேலும், "அவர் மூச்சு விடக் கூட சிரமப்பட்டார். அவரிடம் நாடித்துடிப்பு இருந்தது. மிகவும் பலவீனமாக இருந்தாலும் நாடித்துடிப்பு இருக்கவே இருந்தது.. நான் அவரிடம்.. கவலைப்படாதே, ஒன்றும் ஆகாது என்று தைரியம் கூறினேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்," என்று ராய்சா கண்ணீருடன் தெரிவித்தார்.

    விசாரணை

    இந்தச் சம்பவம் தொடர்பாக ஆறு பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஒரு உரிமம் பெறாத சாகச விளையாட்டு நிகழ்வு என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதுகாப்பு விதிகள் ஏன் மீறப்பட்டன? இவ்வளவு பெரிய கவனக்குறைவு எப்படி நடந்தது? என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது அலட்சியத்தால் ஏற்பட்ட கொலை என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    கவனம்

    எப்போதுமே சாகச விளையாட்டுகளில் ஈடுபடும் முன், அந்த நிறுவனம் அரசிடம் முறையான உரிமம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பயிற்சியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களைச் சரியாக மாட்டியுள்ளார்களா என்பதை நாமும் ஒருமுறை சரிபார்ப்பது அவசியம். பழைய பாலங்கள் அல்லது கைவிடப்பட்ட கட்டிடங்களில் நடத்தப்படும் சாகச விளையாட்டுகளைத் தவிர்ப்பது நல்லது.

    English Summary

    21-year-old Maria Eduarda Rodrigues de Freitas died during a bungee jump as organizers threw her off without attaching the safety cord: Brazil Bungee Jumping Tragedy latest news in tamil.