ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்.. அதிர்ச்சியில் இஸ்ரேல்! எதிர்ப்பது ஏன்? பின்னணி

  • ஜெருசலேம்: உலக நாடுகள் நிம்மதி பெருமூச்சு விடும் விதமாக அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் ஒருவழியாக முடிவை நோக்கி நகர்ந்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு எண்ணெய் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பும் என்பதால், போர் நிறுத்தம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் இந்த போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இப்படி இஸ்ரேலில் இருந்து ஒரு சேர ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்பது பற்றிய விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்த போர் முடிவு பெறும் நிலையை எட்டியுள்ளது. சுவிட்சர்லாந்தில் வரும் வெள்ளிக்கிழமை அமெரிக்காவுக்கும் - ஈரானுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேலிய தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உலக நாடுகள் பலவும் இந்த ஒப்பந்தத்தை வரவேற்றாலும், இஸ்ரேல் மட்டும் அதிருப்தி அடைந்துள்ளது.

    Advertisement

    எதிர்ப்பு தெரிவிக்கும் இஸ்ரேல்

    கடந்த பிப்ரவரி மாதம் இஸ்ரேலுடன் இணைந்தே அமெரிக்கா ஈரானை தாக்கியது. அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடாவில் உள்ள அமெரிக்க முகாம்களை ஈரான் தாக்கியது. இதனால், வளைகுடா நாடுகளுக்கும் இந்தப் போர் பரவியது. மற்றொரு பக்கம் இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் மோதிக்கொண்டதால் இந்தப்போர் லெபனானுக்கும் பரவியது. இப்படி மத்திய கிழக்கில் இஸ்ரேல் நாலாபக்கமும் மோதிக்கொண்ட நிலையில், தற்போது அமைதி ஒப்பந்தம் ஏற்பட இருப்பதற்கு அந்த நாட்டில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இஸ்ரேலிய தலைவர்கள் பலரும் 'எக்ஸ்' (X) தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் கூறுகையில், "லெபனானில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கை நடத்தும் போது ஈரான் தாக்கினால், இஸ்ரேல் முழு பலத்துடன் பதிலடி கொடுக்கும்" என்றார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த இந்த ஒப்பந்தம் எங்களுக்கு ஒத்து வராது என்று பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆதரவாளர்களும் கூறி வருகிறார்கள்.

    Advertisement

    தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-கிவிர் கூறுகையில், "டிரம்ப் ஒப்பந்தம் எங்களைக் கட்டுப்படுத்தாது. இஸ்ரேல் அமெரிக்காவுக்கு அடங்கிய நாடு அல்ல. நாங்கள் சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாடு. நாங்கள் நிலையற்ற குடியரசு அல்ல. எங்கள் பாதுகாப்புக்கு உதவாத இந்த ஒப்பந்தத்தில் நாங்கள் இல்லை. ஹிஸ்புல்லாவை முழுவதும் ஒழிப்பது, நாங்கள் கைப்பற்றிய இடங்களில் இருந்து பின்வாங்காமல் இருப்பது, எல்லையில் பயங்கரவாதிகள் வருவதைத் தடுப்பது ஆகியவற்றில் எந்த சமரசமும் செய்ய மாட்டோம்" என்றார்.

    நெதன்யாகுவின் பலவீனமான அணுகுமுறை

    இஸ்ரேல் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் கூறுகையில், "இந்த ஒப்பந்தம் இஸ்ரேலுக்கும் உலகத்துக்கும் எதிரானது" என்று விமர்சித்தார். ஈரானிய ஆட்சியைத் தூக்கி எறிவதற்கும், ஈரான் அணு ஆயுதம் வாங்குவதைத் தடுப்பதற்கும் இஸ்ரேல் தனியாகவே முயற்சி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். லெபனான், சிரியா, காசா ஆகிய இடங்களில் இருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறப் போவதில்லை என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் கூறி வருகிறார்.

    Advertisement

    எல்லைப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகப் பெரிய சாதனை என்றும், சர்வதேச அழுத்தம் வந்தாலும் லெபனானில் இருந்து படைகளைத் திரும்பப் பெற மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார். இந்த முடிவைப் பிரதமர் நெதன்யாகு ஏற்கனவே அமெரிக்க அதிபரிடம் சொல்லிவிட்டதாகவும் அவர் கூறினார். இஸ்ரேலில் எதிர்க்கட்சிகளும் இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜனநாயகக் கட்சித் தலைவர் யாயர் கோலன், "இது நாட்டுக்கு கடினமான காலை" என்றார்.

    நெதன்யாகுவை விமர்சித்த அவர், "விமானிகள், வீரர்களின் உயிர்த்தியாகத்தால் கிடைத்த வெற்றிகளை நெதன்யாகுவின் பலவீனமான அணுகுமுறை அழித்துவிட்டது" என்று குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சித் தலைவர் யாயர் லாபிட், "இந்த ஒப்பந்தம் உண்மையானதாக இருந்தால், இஸ்ரேலின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையின் மிகப் பெரிய தோல்வி இது. இதற்கு நெதன்யாகுவே பொறுப்பு" என்று சாடியுள்ளார். இப்படி இஸ்ரேலில் இருந்து ஒரு சேர ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்ற கேள்விகள் எழலாம். இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

    Advertisement

    இஸ்ரேல் ஏன் இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கிறது?

    அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் அனைத்து முனைகளிலும் போரை நிறுத்துவதுதான். ஆனால் இஸ்ரேல் லெபனானில் தன் ராணுவ நடவடிக்கையைத் தொடரும் என்று சொல்லி வருகிறது. அமெரிக்காவும் ஈரானும் மட்டும் நேரடியாகப் பேசுவதால் தங்களை ஓரங்கட்டுவதாக இஸ்ரேல் நினைக்கிறது. ஈரானின் அணு ஆயுதத் திட்டம்தான் இஸ்ரேலுக்கு மிகப் பெரிய கவலை. இந்த ஒப்பந்தத்தில் அது போதுமான அளவு கட்டுப்படுத்தப்படவில்லை என்று இஸ்ரேல் நினைக்கிறது.

    ஈரான் அணு ஆயுதம் பெறாமல் இருக்க இஸ்ரேல் தன் முயற்சியில் தொடர்ந்து செயல்படும் என்று நெதன்யாகு முன்பே சொல்லியிருந்தார். ஆனால் தற்போது அவரது அதிகாரப்பூர்வ கருத்து இன்னும் வரவில்லை. முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிப்பது, லெபனான், ஏமன், காசா உள்ளிட்ட இடங்களில் ஈரான் ஆதரவு அமைப்புகளுக்கு உதவி செய்வது ஆகியவற்றை இஸ்ரேல் பெரிய பிரச்சினைகளாக கருதுகிறது.

    Advertisement

    கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல் தொடர்ந்து போர்களைச் சந்தித்து வருகிறது. 2023-ல் காசாவில் ஹமாஸ் அமைப்புடன் போரிட்டது. அதன்பிறகு, 2024-ல் லெபனானில் ஹிஸ்புல்லாவுடன், கடந்த ஆண்டு ஈரானுடன் 12 நாள் போரில் ஈடுபட்டது. தற்போது ஹிஸ்புல்லாவுடன் மீண்டும் மோதல் என இஸ்ரேல் எப்போதும் பதற்றமான சூழலிலேயே இருந்து வரும் நிலையிலும் தற்போதைய அமைதி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது.

    English Summary

    Israel has strongly opposed the emerging US-Iran peace deal, arguing that it fails to adequately address Iran’s nuclear ambitions, missile program and regional proxy groups. Israeli leaders insist the agreement does not guarantee their security and will not limit their military operations.