மஸ்கட்: ஓமன் நாட்டின் கடற்கரைக்கு அருகே, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு வணிகக் கப்பல் மீது இன்று பயங்கரத் தாக்குதல் நடத்தப்பட்டது. கப்பலில் சுமார் 24 இந்தியர்கள் சிக்கித் தவித்த சூழலில், அவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணிகளும் நடைபெற்றது. இந்த திடீர் தாக்குதல் சம்பவம் சர்வதேச சமூகத்தினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியக் கிழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் கடைசியில் தொடங்கிய போர் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. நேரடித் தாக்குதல்கள் நின்றுவிட்ட போதிலும், இன்னும் முழுமையாக அமைதி திரும்பவில்லை. ஆங்காங்கே தாக்குதல்கள் தொடர்ந்து நடந்தே வருகிறது. இப்போதும் அப்படியொரு சம்பவம் தான் மீண்டும் நடந்துள்ளது.
இன்று திங்கள்கிழமை ஓமன் கடற்கரையிலிருந்து சுமார் 15 கடல் மைல் தொலைவில் 'மாரிவெக்ஸ்' (Marivex) என்ற சரக்குக் கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்தப் பகுதியில் திடீரென ஒரு வெடிப்புச் சத்தம் கேட்டது. ஏதோ ஒன்று வந்து கப்பலில் மோதியது போல இருந்ததாக ஊழியர்கள் கூறினர். இது ட்ரோன் அல்லது ஏவுகணை மூலம் நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தாக்குதலுக்கு உள்ளான இந்தக் கப்பல் 'பலாவு' நாட்டின் கொடியுடன் பயணித்தது. இதில் மிக முக்கியமாக, 24 இந்திய மாலுமிகள் பணியாற்றி வந்தனர். இந்திய மாலுமிகள் சங்கமான FSUI, இந்தக் கப்பலில் இந்தியர்கள் இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் கப்பலின் எஞ்சின் அறையில் ஒரு பெரிய ஓட்டை விழுந்தது. இதனால் கப்பலுக்குள் மிக வேகமாகத் தண்ணீர் புகத் தொடங்கியது. மேலும், எஞ்சின் அறையில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து கப்பலில் பெரும் தீ விபத்தும் ஏற்பட்டது. இதனால் கப்பல் தனது நிலைத்தன்மையை இழந்து கடலில் மூழ்கும் அபாயத்திற்குத் தள்ளப்பட்டது. கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் உயிருக்குப் போராடிய நிலையில், அவசர உதவி கோரி SOS செய்திகளை அனுப்பினர். பொதுவாகக் கப்பலில் ஏதேனும் எமர்ஜென்சி சூழல் ஏற்பட்டால் அங்கிருந்து தப்பிக்க உயிர் காக்கும் படகுகள் இருக்கும். ஆனால், இந்த டிரோன் தாக்குதலில் அந்தக் கப்பலில் இருந்த உயிர் காக்கும் படகுகளும் சேதமடைந்ததால், மாலுமிகளால் உடனடியாகக் கப்பலை விட்டு வெளியேற முடியவில்லை. இந்த ட்ரோன் தாக்குதலை யார் நடத்தியது என்பது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை. இருப்பினும், அமெரிக்கப் படைகள் தவறுதலாக இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, SOS மெசேஜ்ஜை தொடர்ந்து கப்பலில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்றது. ஹெலிகாப்டர்கள் மூலம் மாலுமிகளை மீட்கும் பணிகள் நடந்தது. சேதமடைந்த கப்பலில் இருந்து மாலுமிகள் ஒவ்வொருவராக ஹெலிகாப்டர் மூலம் தூக்கிச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அதேநேரம் ஈரான் மோதல் தொடங்கிய பிறகு.. கடந்த சில வாரங்களில் ஓமன் கடற்பகுதியில் நடக்கும் இரண்டாவது பெரிய சம்பவம் இதுவாகும். முன்னதாக கடந்த மே 13ம் தேதி, சோமாலியாவிலிருந்து ஷார்ஜா நோக்கிச் சென்ற ஒரு இந்தியக் கப்பல் ஓமன் கடற்பகுதியில் தீப்பிடித்து மூழ்கியது. அதிர்ஷ்டவசமாக, அதில் இருந்த 14 இந்திய மாலுமிகளும் ஓமன் கடலோரக் காவல்படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்தச் சூழலில் தான் இப்போது மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற தாக்குதல்கள் அந்தப் பகுதியில் பயணிக்கும் கப்பல்களின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்திய மாலுமிகள் சிலர் இந்தத் தாக்குதலால் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய வெளியுறவுத் துறை மற்றும் கடல்சார் அமைப்புகள் இந்தச் சூழலைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.திடீர் தாக்குதல்
கப்பல்
மீட்புப் பணிகள்
முதல்முறை இல்லை