Kanchipuram Horror: பிரசவத்தின் போது பாதி உடலுடன் வெளியே வந்த குழந்தை, தாய் பலி! பிரேமலதா கண்டனம்

  • காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மரக்கடையில் கொத்தடிமை போல் வேலை பார்த்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் தன்னிடம் வாங்கிய கடனை கொடுத்துவிட்டு மருத்துவமனைக்கு செல் என கல் நெஞ்சம் படைத்த அதன் உரிமையாளர் சொன்னதால் குழந்தையும் சேயும் மரக்கடையிலேயே பலியான சோகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    காஞ்சிபுரம் மாவட்டம், சிங்காடிவாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த இருளர் சமூகத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (40), தேன்மொழி (35). அரக்கோணம் சாலை வெள்ளைகேட் அருகே மரம் வெட்டும் பணியில் கடந்த 6 மாதங்களாக ஈடுபட்டு வருகிறார்களாம்.

    Advertisement

    இவர்களுடன் முத்து- காவியா என்ற மற்றொரு தம்பதியும் இருந்தனர். இந்த நிலையில் 9 மாத கர்ப்பிணியான தேன்மொழிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் ஆனந்தன், மரக்கடை உரிமையாளர் ஆறுமுகத்திடம் போய் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுவிட்டது. மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கேட்டாராம்.

    ஆனால் ஆறுமுகமோ சிறிதும் நெஞ்சில் ஈரம் இல்லாமல், தன்னிடம் வாங்கிய ரூ 20 ஆயிரம் கடனை செலுத்தாமல் இந்த இடத்தை விட்டு செல்லவேக் கூடாது என்றாராம். ஆனாலும் ஆனந்தன், தொடர்ந்து கெஞ்சினாராம். அந்த பெண்ணும் வலியால் துடிப்பதை பார்த்தும் ஆறுமுகம் மனமிறங்காமல் அவர்களை வெளியே செல்ல அனுமதிக்காமல் மரக்கடையிலேயே அடைத்துவிட்டாராம்.

    Advertisement

    பிரசவ வலி அதிகமான நிலையில் தேன்மொழிக்கு குழந்தை வெளியே வந்ததாம். அப்போது தேன்மொழிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு வலியும் அதிகமாகவே அவரால் தாங்க முடியாமல் தாயும் சேயும் அதே இடத்தில் இறந்துவிட்டனராம்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனந்தன், ஆறுமுகத்திற்கு போன் செய்து, மனைவி இறந்துவிட்டதை தெரிவித்தாராம். அப்போதும் மனமிறங்காத ஆறுமுகம், சரி விடு அந்த பொண்ணை தூக்கி போட்டுட்டு வேறு ஒருத்தியை கட்டிக்கலாம். உடனே நீ இருளர் குடியிருப்புக்கு பாடியை தூக்கிட்டு போயிடு, இங்க இருந்தால் உன்னையும் என்னையையும் கைது செய்துவிடுவார்கள் என அந்த அப்பாவி ஆனந்தனிடம் ஆறுமுகம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    மேலும் உடலை அடக்கம் செய்ய ரூ 2000 பணத்துடன் ஆம்புலன்ஸ் வாகனம் வைத்து ஆனந்தனையும் தேன்மொழியின் உடலையும் இருளர் காலனிக்கு அனுப்பி வைத்தாராம்.

    அங்கு தேன்மொழியின் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் கர்ப்பப்பையில் இருந்து குழந்தையின் பாதி உடல் வெளியே வந்ததை பார்த்து நெஞ்சே வெடித்து விடும் அளவுக்கு கலங்கி போனார்களாம். இதையடுத்து உறவினர்கள், இருளர் சங்கத்தினரின் துணையுடன் ஆறுமுகம், பொன்னேரிக்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாராம். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு தலைமறைவாக உள்ள ஆறுமுகத்தை தேடி வருகிறார்களாம்.

    இந்த இரக்கமற்ற சம்பவத்தை பலரும் கண்டிக்கிறார்கள், வெறும் ரூ 20 ஆயிரம் பணத்திற்காக இரு உயிர்கள் பறி போக காரணமாக இருந்த கல்நெஞ்சக்காரர் மரக்கடை உரிமையாளர் ஆறுமுகத்திற்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    Advertisement

    இதுகுறித்து தேமுதிக தலைவரும் விருத்தாசலம் எம்எல்ஏவுமான பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் அருகே சிங்காடிவாக்கம் பழங்குடியினர் (இருளர்) காலனியைச் சேர்ந்த தேன்மொழி என்ற ஒன்பது மாத கர்ப்பிணிப் பெண்ணும், அவரது பச்சிளம் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

    தார்ப்பாய் கொட்டகையில் வசித்து வந்த தேன்மொழிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்குச் செல்ல முயன்றபோது, அவர் மற்றும் அவரது கணவர் ஆனந்தன் ஆகியோர் விறகு வியாபாரி ஆறுமுகத்திடம் பெற்றிருந்த 20,000 ரூபாய் முன்பணக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் மருத்துவமனைக்குச் செல்லக்கூடாது என தடுத்து நிறுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    Advertisement

    பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணை மருத்துவமனைக்குச் செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படும் இந்தச் செயல் மனிதாபிமானத்தையே கேள்விக்குறியாக்குகிறது. கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக, ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் உயிரைக் கூட பொருட்படுத்தாமல் தடுத்ததாகக் கூறப்படும் இந்தக் கொடூரமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த சம்பவம் தொடர்பாக உரிய முறையில் முழுமையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து, உச்சபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

    மேலும், உயிரிழந்த தேன்மொழி மற்றும் அவரது பச்சிளம் குழந்தையின் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், இழப்பீடும் விறகு வியாபாரி ஆறுமுகம் வழங்க வேண்டும். உயிரிழந்த தேன்மொழி மற்றும் அவரது பச்சிளம் குழந்தையின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தேமுதிக சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். இவ்வாறு பிரேமலதா தெரிவித்துள்ளார்.

    English Summary

    A woman who was working with her husband as bonded labour at a timber shop died of labour pain, her new born also died as owner denied to send her to hospital when she was having severe labour pain.