நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் கோவை, திருப்பூர், ஈரோடு பகுதியில் அதிக அளவில் பணியாற்றுகிறார்கள். இவர்கள் பலர் தினமும் செல்லும் ரயிலில் கோவை செல்கிறார்கள். அப்படித்தான் ஆரல்வாய்மொழியில் இருந்து ரீனா என்பவர் தனது மகனை கல்லூரியில் சேர்ப்பதற்காக கோவைக்கு புறப்பட்டார். ஓடும் ரயிலில் அந்த பெண் பயணியிடம் செல்போன் திருடிய நிலையில், அழைப்பு மணி ஒலித்ததால் வாலிபர் சிக்கினார்.
ஒவ்வொரு வாரமும் சொந்த ஊருக்கு ரயில்களில் செல்வோருக்கு தான் ரயில்களில் இருக்கும் கூட்டம் தெரியும். அந்த கூட்டத்தில் தூங்காமல் விடிய விடிய முழித்துக் கொண்டு சொந்த ஊர் சென்று இறங்கியது அப்பாடா என்று நிம்மதி அடைவார்கள்.. அதே நபர் ஞாயிறு இரவுகள் தூங்காமல் விடிய விடிய பல மணி நேரம் முழித்துக்கொண்டே கூட்டத்தின் இடிபாடுகளில் சிக்கி வேலை செய்யும் ஊருக்கோ, கல்லூரி பயிலும் ஊருக்கோ வருகிறார்கள்.
தென்மாவட்டத்தைச் சேர்ந்த பலரது ரயில் பயணம் வலி நிறைந்ததாகவே இருக்கும். ஏனெனில் கூட்ட நெரிசலால் தூங்க முடியாது. சற்று அசந்தால் செல்போனை தூக்கிவிடுவார்கள். நகை பணத்தை பறித்துவிடுவார்கள் கொள்ளைக்காரர்கள். அப்படியான சம்பவம் நாகர்கோவிலில் நடந்துள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக திருடிய திருடனை அழைப்பு மணி காட்டிக்கொடுத்துவிட்டது. அதுபற்றி விரிவாக பார்ப்போம். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தெற்கு தெருவை சேர்ந்த 45 வயதாகும் ரீனா சம்பவத்தன்று இவர் தனது மகனை கல்லூரியில் சேர்ப்பதற்காக கோவைக்கு புறப்பட்டுள்ளார். இதற்காக அவர் கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்துள்ளார். அப்போது, ரீனா தனது செல்போனை அருகில் வைத்திருந்த நிலையில் வள்ளியூர் அருகே சென்ற போது, திடீரென அது காணாமல் போய்விட்டது. உடனடியாக பதற்றமடைந்த ரீனா, ரயிலின் அந்த பகுதி முழுவதும் தேடி பார்த்தும் செல்போன் கிடைக்கவில்லை. பின்னர், சக பயணிகள் உதவியுடன் தனது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு அழைத்துள்ளார். அப்போது, அருகில் அமர்ந்திருந்த ஒருவரது பையில் இருந்து செல்போன் அழைப்பு மணி ஒலிக்கும் சத்தம் கேட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து அங்கிருந்த சக பயணிகளின் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்து அவரிடமிருந்த செல்போனை மீட்டார்கள். மேலும் இதுகுறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்த இளைஞரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் குழித்துறை கழுவன்திட்டை காலனி பகுதியைச் சேர்ந்த 35 வயதாகும் பிரீஜித் என்பதும், செல்போனை ரீனாவிடம் இருந்து திருடியதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.