புளியரை, களியக்காவிளை சோதனை சாவடிகளில் மணல் லாரிகளுக்கு பெரிய சிக்கல்.. தமிழக அரசு மிகப்பெரிய முடிவு

  • கன்னியாகுமரி: தென்காசி மாவட்டம் புளியரை, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடிகளில் ஏராளமான லாரிகள் கேரளா செல்வதற்கு வரிசையில் எப்போதும் நிற்கும்.. அந்த லாரிகளில் மணல், ஜல்லி என ஏராளமான கனிம வளங்கள் கொண்டு செல்லப்படும். பொதுவாக ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு கனிம வளங்கள் முறைப்படி கொண்டு செல்வதை தடுக்க எந்த அரசாலும் தடுக்க முடியாது. ஆனால் முறைகேடாக கொண்டு செல்லப்படுவதை நிச்சயம் தடுக்க முடியும். அதற்கான விதிமுறைகளை வகுக்க முடியும். அந்த வகையில் தமிழக அரசு மிகப்பெரிய முடிவு எடுத்துள்ளது.இந்த முடிவினை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வரவேற்றுள்ளது. அதுபற்றி பார்ப்போம்.

    Advertisement

    தமிழக-கேரளா எல்லையான புளியரை சோதனைச் சாவடி வழியாகவும், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடி வழியாகவும் தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் தமிழ்நாட்டின் மணல், ஜல்லி, பாறைகள், எம் சாண்ட் உள்பட கனிம வளங்களை ஏற்றி செல்கின்றன. பல டன் கனிவ வளங்கள் கேரளாவிற்கு செல்கிறது. இதில் கணிசமான அளவு முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டுகள் இருக்கிறது. சோதனை சாவடிகளில் லஞ்சம் வாங்கி கொண்டு போலீசார் கனிம லாரிகளை அனுமதிப்பதாக அண்மையில் கேரள ஊடகம் ஒன்று செய்திகளை வெளியிட்டு அதிரவைத்தது. இந்த பிரச்சனையை பற்றி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு மிக நன்றாகவே தெரியும். குறிப்பாக தென்காசி மாவட்டம் இந்த பிரச்சனையால் மிக ஆழமாகவே பாதிக்கப்பட்டுள்ளது.

    Advertisement


    மேற்கு தொடர்ச்சி மலை

    பலரும் எழுப்பும் கேள்வி என்னவென்றால், தமிழக இயற்கை வளங்களை கேரளா சுரண்டுகிறது. பதிலுக்கு கழிவுகளையும் குப்பைகளையும் கொண்டு வந்து கொட்டுகிறது என்று குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால் இதில் இருக்கும் அரசியல் பலருக்கும் தெரியாது. கேரளா தமிழ்நாடு போன்ற மாநிலம் கிடையாது.மேற்கு தொடர்ச்சி மலையின் அந்த பகுதிகள் எல்லாம் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகள் ஆகும். 'சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம்' ஆக அறிவித்து பாதுகாத்து வருகிறது.

    கேரளாவில் மலையை உடைப்பது சாத்தியமில்லை

    கேரளாவின் நீதிமன்றங்களும் அரசாங்கமும் மலைகளை உடைக்கவோ, மணல் அள்ளவோ மிகக் கடுமையான தடைகளை விதித்து பின்பற்றி வருகின்றன. அதேபோல் கேரளாவில் உள்ளூர் மக்களின் எதிர்ப்பை குவாரி ஆரம்பித்துவிட முடியாது. அவர்கள் அந்த அளவிற்கு நெருக்கடி கொடுத்து மூட வைத்துவிடுவார்கள். எனவே கேரளாவில் பல இடங்களில் குவாரி ஆரம்பிப்பது என்பது கனவில் கூட நினைக்க முடியாத ஒன்று

    Advertisement

    திருநெல்வேலி ஜில்லாவின் நிலை

    ஆனால தமிழ்நாட்டில் அப்படி இல்லை.. குவாரி ஆரம்பிப்பது மட்டுமின்றி, இங்கு எல்லாமே எளிது.. இதனால் தமிழகத்தில் இருந்து தான் கேரளாவிற்கு பல்வேறு கனிம வளங்கள் எடுத்து செல்லப்படுகின்றன. விலையும் அதிகமாக கிடைப்பது, நல்ல லாபம் போன்ற காரணங்களால் குவாரி பிசினஸ் என்பது திருநெல்வேலி ஜில்லாவில் ஏக பிரபலம். திருநெல்வேலி ஜில்லா என்று கூற காரணம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி இந்த நான்கு மாவட்டங்களிலும் குவாரி பிசினஸ் கேரளாவில் உள்ள டிமாண்ட் காரணமாக கொடிகட்டி பறக்கிறது.

    பெரும் புள்ளிகளின் பிசினஸ்

    இதனால் தமிழக அரசியல்வாதிகள்,பெரும்புள்ளிகள் இந்த பிசினஸை செய்து வருகிறார்கள். அதேநேரம் முறைகேடு நடப்பதாகவும், அதிகப்படியான லாரிகளால் நெரிசல் ஏற்படுவதாகவும், சாலைகள் மோசமாக பாதிக்கப்படுவதாகவும் உள்ளூர் மக்கள் போராடாமல் இல்லை. எனினும் புளியரை மற்றும் களியக்காவிளை சோதனை சாவடிகளில் முறையான அனுமதிச் சீட்டு இல்லாமல் மற்றும் அல்லது ஒரு பாஸை வைத்துக் கொண்டு பலமுறை லாரிகளை ஓட்டும் முறைகேடுகள் நடப்பதாக பல புகார்கள் உள்ளது. அதேபோல் சோதனை சாவடிகளில் போலீசாருக்கு லஞ்சம் தந்து லாரிகளில் கனிம வளங்களை சிலர் கடத்துவதாகவும் கேரள ஊடகங்களே அண்மையில் செய்தி எல்லாம் வெளியிட்டன.

    Advertisement


    மொட்டை அடிக்கப்படும் திருநெல்வேலி

    இந்த சூழலில் உள்ளூர் மக்களும் இப்போது கடுமையாக போராட தொடங்கிவிட்டார்கள். ஏனெனில் கேரளாவின் கனிம வளத் தேவைக்காக தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மலைகள் முழுமையாக மொட்டை அடிக்கப்படுவதை அவர்கள் ஏற்கவில்லை. தமிழகத்தின் தேவையைப் பூர்த்தி செய்தது போக, கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் கனிம வளங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். இதனை விஜய் தலைமையிலான தவெக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அரசின் முடிவினை சுற்றுச்சூழல் அமைப்பான பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வரவேற்றுள்ளது.

    அரசு பெரிய முடிவு

    அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில்,அண்டை மாநிலங்களுக்குக் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் புவியியல் மற்றும் சுரங்கங்கள் துறை இயக்குனருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு சட்டவிரோத சுரங்கங்கள், "கனிம போக்குவரத்து மற்றும் சேமித்தலை தடுத்தல் மற்றும் கனிம விநியோகஸ்தர்கள் விதிகள் 2011ல் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி தமிழ் நாட்டின் தேவைக்கான கனிம வளங்களை உறுதி செய்வதற்காக அண்டை மாநிலங்களுக்குக் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதற்கு இடைக்காலத் தடை விதிப்பது உள்ளிட்ட ஒழுங்குபடுத்தும் அதிகாரம் புவியியல் மற்றும் சுரங்கங்கள் துறை இயக்குனருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    பூவுலகின் நண்பர்கள் வரவேற்பு

    தமிழ் நாட்டின் இயற்கை வளங்கள் அனைவருக்கும் பொதுவானது. குறிப்பிட்ட தனி நபர்களின் வணிக லாப நோக்கத்திற்காக அவற்றை அண்டை மாநிலங்களுக்கு விற்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. மாநிலத்தின் தேவையைத் தாண்டி இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதைத் தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இத்திருத்தத்தைப் பூவுலகின் நண்பர்கள் சார்பில் வரவேற்கிறோம்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    The Tamil Nadu government has taken a major decision to formulate regulations aimed at preventing the illegal transport of mineral resources at the Puliyarai and Kaliyakkavilai check-posts. The organization 'Poovulagin Nanbargal' has welcomed this move. Let us take a look at the details.