நீதிகேட்ட மாணவிக்கு மெண்டல் டார்ச்சர்.. 3வது மாடியிலிருந்து குதித்து த*கொ*..! கல்லூரி முதல்வர் கைது!

  • கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் விடுதி உணவு சரி இல்லை என மாணவர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டதோடு அதனை ஊடகங்களுக்கு தெரிவித்த மாணவியை கல்லூரி நிர்வாகம் டார்ச்சர் செய்ததால் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர்கள் போராடிய நிலையில் இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த கல்லூரி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கேரள மாநிலம், வெள்ளறடை பகுதியைச் சேர்ந்தவர் ஆன்சிலி குக்கு (21) இவர் கருங்கல் அருகே மூசாரி பகுதியில் செயல்பட்டு வரும் பெத்லகேம் என்ற தனியார் செவிலியர் கல்லூரியில், விடுதியில் தங்கி 3ஆம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 14 ம் தேதி கல்லூரியில் நடைபெற்ற சுதந்திரதினவிழா கொண்டாட்டத்தின்போது , கல்லூரி முதல்வர் சக மாணவிகள் முன் கல்லூரிக்கு செல்போன் கொண்டு வந்ததாக கூறி திட்டி அவரது உடமைகளை சோதனை செய்து மன அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் மாணவி செல்போனே கொண்டு வரவில்லை என கூறியுள்ளார். மேலும் கடந்த ஜனவரி மாதம் கல்லூரி விடுதியில் தரமற்ற உணவு வழங்கியதால் இந்த மாணவி மற்றும் சக மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தினார். அதன் பிறகு பல முறை கல்லூரி நிர்வாகம் மாணவிகளுக்கு டார்ச்சர் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உடனே ஆன்சிலி கல்லூரியின் 3-ஆவது மாடியிலிருந்து குதித்துள்ளார்.

    இதில் அவருக்கு உடலின் பல பாகங்களில் முறிவு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தவரை மீட்ட கல்லூரி நிர்வாகத்தினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மாணவி தற்கொலைக்கு முயன்றதாக கூறாமல், நிகழ்ச்சிக்கு தோரணம் கட்டும் போது தவறி விழுந்ததாக கூறி முதலுதவி சிகிச்சை அளித்து மாணவியின் பெற்றோருக்கு தகவலை தெரிவித்துள்ளனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கல்லூரி முதல்வர் ஷீஜா மாணவிகள் பலர் முன்னிலையில் திட்டியதால் அவமானம் தாங்காமல் தனது மகள் தற்கொலை செய்ததாக கூறி மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் கல்லூரி முதல்வர் ஷீஜா மீது, கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப் பட்டு சொந்த ஊரில் மாணவியின் இறுதி சடங்கு நேற்று நடந்தது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்தது.

    தொடர்ந்து கல்லூரி முதல்வர் ஷீஜா தலைமறைவு ஆனார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில், அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதற்கிடையே மாணவியின் மரணத்துக்கு காரணமான கல்லூரி முதல்வரை கைது செய்ய கோரி மாணவிகள் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே ஷீஜா குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் கிருஷ்ணகிரியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் கல்லூரி முதல்வர் ஷீஜாவை கைது செய்து கருங்கல் பகுதிக்கு கொண்டுவந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English Summary

    Kanyakumari nursing student dies after alleged college harassment; principal arrested following protests demanding justice.