அரசு ஊழியர்கள் கையில் எவ்வளவு பணம்? தினமும் கணக்கு கேட்கும் கன்னியாகுமரி கலெக்டர்.. ஏன் இந்த அதிரடி

  • கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை ஒழிக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் பிரதாப் பிறப்பித்துள்ள அதிரடி சுற்றறிக்கை இப்போது தமிழகம் முழுவதும் பெரும் விவாதத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அரசுத்துறைகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஊழல் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் வெளியாகியுள்ள இந்த அதிரடி உத்தரவு, ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் உலுக்கியுள்ளது. ஆனால் இதன் மூலம் லஞ்சத்தை மொத்தமாக ஒழிப்பது சாத்தியமா??

    Advertisement

    சமீபத்தில் அரசு ஊழியர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒரு முக்கியமான உத்தரவை பிறப்பித்திருந்தது.. அனைத்து பணப் பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் மயமாகிவிட்ட இன்றைய சூழலில், அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு கொண்டுவரும் சொந்த பணத்திற்கு குறிப்பிட்ட வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று கோர்ட் சுட்டிக்காட்டியிருந்தது.

    Advertisement

    அதுமட்டுமல்லாமல், ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய இதுபோன்ற கடுமையான வழிகாட்டுதல்கள் அவசியமானது என்றும், செப்டம்பர் 3-க்குள் அரசு தரப்பு இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    கன்னியாகுமரி கலெக்டர் ஆக்‌ஷன்

    இப்படிப்பட்ட சூழலில்தான், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் கடந்த மாதம் வெளியிட்டிருந்த அதிரடி சுற்றறிக்கை, இப்போது சோஷியல் மீடியாவிலும், அரசு வட்டாரங்களிலும் வேக வேகமாகப் பரவி வருகிறது. அந்த சுற்றறிக்கையில் உள்ளதாவது:

    "அலுவலக நடைமுறையின்படி, அரசு துறைகள் மற்றும் பிற அரசு நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தங்கள் கையிருப்பில் உள்ள ரொக்கப் பணம் விபரத்தை, அதற்கான பதிவேட்டில் பதிவு செய்து, அலுவலக தலைவரின் கையெழுத்து பெற வேண்டும். அனைத்து வேலை நாட்களிலும், இதை பராமரிக்க வேண்டும்.

    Advertisement

    ஆனால், பெரும்பாலான அலுவலகங்களில், இப்பதிவேடு தொடர் பராமரிப்பில் இல்லை. இப்பதிவேட்டை பராமரிக்க, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன. அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.. அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணிபுரிவோர், ஒவ்வொரு நாளும் தங்கள் கையிருப்பில் உள்ள ரொக்கப்பணத்தை பதிவு செய்ய, பிரத்யேகமான பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்..

    இது வருகை பதிவேட்டுடன், அலுவலக தலைவர் ஒப்புதல் பெற்று, சம்பந்தப்பட்ட கண்காணிப்பாளரால் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்பட வேண்டும்.. இப்பதிவேட்டை மேல் அதிகாரிகள், மாதம் இரு முறை ஆய்வு செய்ய வேண்டும்.

    அரசு ஊழியர்கள் கையில் ரொக்கப்பணம்

    அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும், தேவைக்கு அதிகமான ரொக்கத்தை கையிருப்பாக வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். இப்பதிவேட்டை பராமரிக்காத அலுவலகத்தில், அதன் தலைவர், கண்காணிப்பாளர், வருகை பதிவேட்டை பராமரிக்கும் பணியாளர் ஆகியோர் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சுற்றறிக்கையில் கலெக்டர் எச்சரித்துள்ளார்.

    Advertisement

    கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த நடைமுறை மாநிலம் முழுவதிலுமுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருவதால், ஊழல்வாதிகளின் நெஞ்சில் இப்போதே நடுநடுக்கம் ஏற்பட்டுள்ளது..

    2 அதிரடிகள் - ஆரம்பப்புள்ளிகள்

    நீதிமன்ற உத்தரவும், கன்னியாகுமரி கலெக்டரின் இந்த மாஸ் நடவடிக்கையும் லஞ்சத்தை ஒழிப்பதற்கான மிகச் சரியான மற்றும் அவசியமான ஆரம்பப்புள்ளியாகவே பார்க்கப்படுகிறது.

    ஏனென்றால், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் எக்கச்சக்கமாக வளர்ந்துவிட்ட நிலையில், அரசு அலுவலகங்களுக்கு எதுக்காக பணியாளர்கள் பெரிய அளவில் ரொக்க பணத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற கேள்விக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

    Advertisement

    அதேபோல, அலுவலகங்களில் கையிருப்பு பணத்தை பதிவு செய்யும் பதிவேட்டை கண்காணிப்பது, உயர் அதிகாரிகள் மாதத்திற்கு 2 முறை ஆய்வு செய்வது போன்ற நடைமுறைகள் லஞ்ச பணப்பரிமாற்றத்திற்கு நேரடி தடைகளை ஏற்படுத்தும்... முக்கியமாக, பதிவேட்டை பராமரிக்காத அலுவலக தலைவர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை பாயும் என்ற எச்சரிக்கை இருப்பதால், அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டிய கட்டாயமும் இதன் மூலம் உருவாகியுள்ளது.

    லஞ்சத்தை விரட்டுவது சாத்தியமா

    ஆனால் வெறும் பதிவேடு பராமரிப்பு மட்டும் ஊழலை முழுமையாகத் தடுத்துவிடுமா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. டிஜிட்டல் பரிமாற்றங்கள், மறைமுக பணப் பரிவர்த்தனைகள் மற்றும் காகித பயன்பாடற்ற அலுவலக முறைகளை இன்னும் தீவிரமாக நடைமுறைப்படுத்தினால்தான் முழுமையான பலனை எதிர்பார்க்க முடியும்... இருந்தாலும், நிர்வாக ரீதியாக லஞ்சத்தைக் கட்டுப்படுத்த இதுபோன்ற அதிரடியான மற்றும் வெளிப்படையான விதிமுறைகள் கண்டிப்பாக ஊழல்வாதிகளுக்கு ஒரு பெரிய பயத்தை ஏற்படுத்தும் என்பதில் நோ டவுட்..!!

    Advertisement

    இந்த அதிரடி உத்தரவுகள் மற்றும் நடைமுறைகள் தமிழகம் முழுவதும் உள்ள மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டால், அரசு அலுவலகங்களில் லஞ்ச பேயை விரட்டுவது சாத்தியமே..!!!

    English Summary

    Government Employees Cash in Hand.. Kanyakumari Collector Issues Major Order to Record Daily Cash Holdings