நாகர்கோவில்: பிரபல யூடியூபர் மதுமிதா வீட்டில் 118 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கைதான இசக்கி பாண்டி என்பவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் தெரிவித்துள்ளனர். அதில், ரூ.30 லட்சம் கடனில் சிக்கி தவித்துக்கொண்டிருந்த போது, நகை - பணத்துடன் கூடிய மதுமிதாவின் 'ரீல்ஸ்' வீடியோ என்னை கொள்ளையடிக்க தூண்டியதாக தெரிவித்துள்ளார்.
இதனால் அவரது வீட்டில் எப்படியாவது கொள்ளையடித்துவிட வேண்டும் என்பதற்காக ஒரு மாதத்திற்கு முன்பே மதுமிதா வீட்டின் அருகே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியதாகவும், ஒரு மாதமாக மதுமிதா வீட்டினை நோட்டமிட்டதாகவும் இசக்கி பாண்டி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் அனந்தநாடார் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார் (வயது 36). ஏலக்காய் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி பிரபல யூடியூபர் மதுமிதா (29). மதுமிதா தான் வாங்கும் புதிய நகைகளை கழுத்து நிறைய அணிந்துகொண்டும், கட்டுக் கட்டான பணத்துடனும் வீடியோ மற்றும் ரீல்ஸ் போட்டு வந்துள்ளார். இவர் போடும் வீடியோக்களில், பணமழையில் நனைவதை போன்றும் தங்க நகைகள் அதிகம் அணிந்துகொண்டு இருப்பது போன்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தார். இந்த நிலையில் தான் கடந்த 24 ஆம் தேதி குடும்பத்துடன் மதுமிதா திருநெல்வேலி சென்றிருந்த போது, வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் 118 சவரன் நகைகளை அள்ளி சென்றனர். இதனால் அதிர்சியடைந்த தம்பதியினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு 4 பேரை அதிரடியாக கைது செய்தனர். இதில் இசக்கி பாண்டி என்பவர் தான் மூலக்காரணம் என தெரியவந்தது. மதுமிதாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பாலோ செய்து வந்துள்ள இசக்கி பாண்டி, நகை, பணத்தை எப்படி கொள்ளையடிப்பது எனவும் யோசித்து வந்துள்ளார். மதுமிதாவிடம் எப்படி பணம் சம்பாதிப்பது என்பது குறித்தும் சாட்டிங் செய்து பல்வேறு ஆலோசனைகளையும் இசக்கி பாண்டி கேட்டறிந்துள்ளாராம். அப்போது தான் நேரில் சந்திக்க வேண்டும் என்று சொல்லி முகவரியை வாங்கி அவர் வீடு அருகே வாடகைக்கு ஒரு வீடு பார்த்து தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. போலீசிடம் இசக்கி பாண்டி அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:- எனக்கு 30 லட்சம் ரூபாய் கடன் இருந்தது. இதனால் கடன் கொடுத்தவர்கள் எல்லாரும் பணத்தை கேட்டு தொந்தரவு செய்தபடியே இருந்தனர். என்னால் கடனை அடைக்க முடியவில்லை. என்ன செய்யலாம் என யோசித்து கொண்டு இருந்த போது தான், மதுமிதா தனது வீட்டில் நகை, பணம் அதிகமாக இருப்பது போன்ற வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்த்தேன். இதனால் அவரது வீட்டில் கொள்ளையடிக்க முடிவு செய்தேன். இதற்காக குமரி மாவட்டம் ஆசாரிபள்ளத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்து கடந்த ஒரு மாதமாக தங்கி இருந்தேன். எப்படி கொள்ளையடிப்பது என அவரது வீட்டை ஒரு மாத காலமாக நோட்டமிட்டேன். வீட்டில் அவரது கார் இருந்தால் உள்ளே ஆட்கள் இருக்கிறார்கள் என நினைத்து கொள்வேன். சம்பவத்தன்று நான் மதுமிதாவின் வீட்டை நோட்டமிட்டபோது கார் இல்லாததால் வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்துகொண்டேன். இதையடுத்து தான் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று மரத்தை அறுக்கும் எந்திரத்தால் கதவை அறுத்து உள்ளே சென்றேன். மதுமிதா ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு இருந்ததால் எந்த ரூமில் பணம் இருக்கிறது. எந்த ரூமில் நகைகள் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள எளிதாக இருந்தது. பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த நகைகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றேன். நண்பர்களின் உதவியுடன் கொள்ளையடித்த நகைகளை விற்றுவிட்டு கடனை அடைத்துவிடலாம் என நினைத்தேன். அதன்படி சில நகைகளை நண்பர்கள் உதவியுடன் விற்றேன். ஆனால் கொள்ளை சம்பவம் குறித்து டிவி, செய்திகளில் பெரிதாக வந்ததால் மாட்டிக்கொள்வோமோ என பயந்தேன். இதனால் மொட்டை அடித்துக்கொண்டேன். உடனடியாக வீட்டில் இருந்த பை, உடைமைகளை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றபோது போலீசார் என்னை கைது செய்துவிட்டார்கள்" என்று கூறினார்.பிரபல யூடியூபர் மதுமிதா வீட்டில் கொள்ளை
ஒரு மாதம் நோட்டமிட்டேன்
எனக்கு 30 லட்சம் கடன் இருந்தது
கொள்ளையடிக்க வசதியாக இருந்தது