6 வீடு இருக்கு.. எங்கே திருடுவீங்க? வங்கி லாக்கர், கட்டிங் மிஷின்.. மதுமிதா வீடியோ மீண்டும் வைரல்

  • கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே யூடியூபர் மதுமிதா வீட்டில் 118 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கடந்த 2 நாட்களாகவே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோஷியல் மீடியாவில் ஆடம்பர வாழ்க்கை மற்றும் பணம், நகைகளுடன் மதுமிதா வெளியிட்ட வீடியோக்களும் இப்போது போலீஸ் விசாரணையில் முக்கியமாக கவனிக்கப்பட்டு வருகின்றன.

    Advertisement

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் வினோத்குமார். 33 வயதான இவர் ஏலக்காய் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி மதுமிதா, 28 வயதானவர். யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வீடியோக்கள் மூலம் லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ்கள் உள்ளனர்..

    Advertisement

    விருதுநகர் வினோத்குமார்

    வினோத்குமார் குடும்பத்தினர் சில ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோவில் ராஜாக்கமங்கலம் அருகே தம்மத்துகோணம் பகுதியில் வீடு வாங்கி குடியேறியுள்ளனர். சம்பவத்தன்று வினோத்குமார் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வீட்டை பூட்டிவிட்டு நெல்லைக்கு சென்றிருந்தார். இரவில் வீடு திரும்பியபோது முன்பக்க கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

    இதனால் அருகிலிருந்த மரவேலை தொழிலாளி ஒருவரை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்ததும், வீட்டில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததும் தெரியவந்தது. படுக்கையறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த 118 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    Advertisement

    கன்னியாகுமரி மதுமிதா

    இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அன்சுல் நாகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

    அதேபோல் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவு நேரத்தில் இளைஞர் ஒருவர் நடந்து செல்லும் காட்சி பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது. அந்த காட்சிகளை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    தங்கம் நகைகள் - பணமழை

    இதற்கிடையே மதுமிதா சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்த வீடியோக்களும் போலீசாரின் கவனத்தை ஈர்த்துள்ளன. கையில் கட்டுக்கட்டாக பணம் மற்றும் நகைகளை வைத்திருப்பது போலவும், பணமழையில் நனைவது போலவும் அவர் பல ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இதனால் அவரது வீட்டில் பணம், நகைகள் இருப்பதை தெரிந்து கொண்ட யாராவது, அவர் குடும்பத்துடன் வெளியே சென்ற நேரத்தை பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.

    Advertisement

    மதுமிதா வசிக்கும் பகுதியில் ஏராளமான வலை மற்றும் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் உள்ளன. அங்கு வடமாநில தொழிலாளர்கள் பலர் வசித்து வருகிறார்கள்.. மேலும், கொள்ளையர்கள் கட்டிங் மிஷினை பயன்படுத்தி கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். இதுபோன்ற முறையில் வடமாநில கொள்ளை கும்பல்கள் கொள்ளையில் ஈடுபடுவது வழக்கம் என்பதால், இந்த சம்பவத்திலும் வடமாநில கும்பலுக்கு தொடர்பு இருக்கிறதா என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

    பழைய வீடியோ வைரல்

    இதுதொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சி.சி.டி.வி. காட்சிகள், கைரேகைகள் மற்றும் கொள்ளை நடந்த விதம் ஆகியவற்றை வைத்து மர்மநபர்களை அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருகிறது.

    Advertisement

    இதனிடையே, இதுவரை மதுமிதாவின் வீடியோக்களை பார்க்காதவர்களும், இந்த திருட்டை கேள்விப்பட்டதுமே, மதுமிதாவை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வத்தில், மதுமிதாவின் பழைய வீடியோக்களை பார்க்க ஆரம்பித்து வருகிறார்களாம். இதனால் மதுமிதாவின் வீடியோக்கள் அதிகமான வியூவ்ஸ்களை பெற்று வருகிறது.. நேற்று முன்தினம் ஒரே நாளில் அவரது வீடியோக்களை சராசரியாக 50 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் வரை பார்த்து வந்துள்ளனர்.

    திடீரென உயர்ந்த வியூவ்ஸ்

    அவரது சில வீடியோக்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்து டிரெண்டிங்கிலும் இடம்பெற்றுள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பிற மாநிலங்களை சேர்ந்த நெட்டிசன்களும் மதுமிதாவின் சமூக வலைதள பக்கத்தை தேடிப் பிடித்து பார்த்து வருகிறார்கள். நேற்று காலை நிலவரப்படி அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

    Advertisement

    பெரும்பாலான வீடியோக்களில் மதுமிதா மட்டுமே தனியாக இருக்கிறார்..ஒரு சில வீடியோக்களில் மட்டுமே கணவர் மற்றும் குழந்தையுடன் தோன்றுகிறார். மதுமிதா தனியாக இருக்கும் வீடியோக்களை அவரது கணவர்தான் கேமராவில் பதிவு செய்துள்ளார். கணவருடன் இணைந்து எடுக்கும் வீடியோக்களை வீடியோ ஸ்டாண்ட் மூலம் அமைத்துவிட்டு இருவரும் சேர்ந்து பதிவு செய்துள்ளனர்.

    ஒரே நாளில் லட்சக்கணக்கானோர் மதுமிதாவின் வீடியோக்களை பார்க்கத் தொடங்கியிருப்பதால், சமூக சோஷியல் மீடியாவில் அவருக்கு கிடைக்கும் வருவாயும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    வங்கி லாக்கரில் நகைகள் - 6 வீடு

    மதுமிதாவின் பெரும்பாலான வீடியோக்களில் பிரம்மாண்டமான ஆடம்பர பங்களா, காஸ்ட்லி கார்கள், பல்வேறு நகைக்கடைகளில் நகைகள் வாங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, வீட்டின் படுக்கையறையில் கட்டுக்கட்டாக பணத்தை வைத்திருப்பது, பணமழை பெய்வது போல் தன் மீதும், தனது குழந்தையின் மீதும் ரூபாய் நோட்டுகளை வீசுவது, பூஜை அறையில் நகைகளையும் பணத்தையும் பரப்பி வைத்து கொள்வது, போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் இணையத்தில் கவனம் பெற்றன.

    ஒருபக்கம், இப்படி பணம், நகைகள் வீட்டில் இருப்பதை வெளிப்படுத்தும் பல வீடியோக்களை வெளியிட்டிருந்தாலும், திருடர்களுக்கே சவால் விடக்கூடிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது..

    அந்த வீடியோவில் மதுமிதா பேசும்போது, நான் எப்போதுமே நகைகளை வீட்டில் வைத்திருக்க மாட்டேன், பாதுகாப்புக்காக வங்கி லாக்கரில்தான் வைப்பேன், என் வீட்டில் வந்து திருட சொல்லி கமெண்ட் போடுகிறீர்களே? எனக்கு 6 வீடு இருக்கு.. எந்த வீட்டில் வந்து திருடுவே? இவ்வளவு பணம் நகைகளை சம்பாதித்து வைத்துள்ள எனக்கு அதை காப்பாற்ற வழி எனக்கு தெரியாதா" என்றெல்லாம் அந்த வீடியோவில் பேசுகிறார்.

    திருடனுக்கு பாராட்டு?

    ஆனால், உண்மையிலேயே அவர் சொன்னபடி வங்கி லாக்கரில் அவர் வைத்திருந்தால், இப்படி நகை திருடு போயிருக்காது என்கிறார்கள். தன்னுடைய ஆடம்பர வாழ்க்கை முறையையும், வீட்டில் இருக்கும் செல்வ வளத்தையும் வெளிப்படையாக காட்டியதே இந்த கொள்ளைக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்..

    கடந்த 2 நாட்களாகவே ஏராளமான இணையவாசிகள் மதுமிதாவைதான் திட்டி தீர்த்து வருகிறார்கள். இப்படியெல்லாம் ஆடம்பரத்தை காட்டி கொள்ள வேண்டுமா? யாரந்த திருடன், கண்டுபிடித்து ஒரு மாலை போடவேண்டும், உலகத்திலேயே ஒரு திருடனுக்கு சப்போர்ட் செய்யும் சம்பவம் இதுவாகத்தான் இருக்கும், என்று கமெண்ட் பதிவிட்டு வருகிறார்கள்.. மேலும் சிலர் இதுவே டிராமாவாக இருக்கலாம், கணக்கு காட்டுவதற்காக கொள்ளை நாடகம் போட்டிருக்கலாம் என்கிறார்கள்..

    English Summary

    Kanyakumari Madhumitha Bathed in Gold.. Cutting Machine, 6 Houses, Bank Locker.. Old Video Goes Viral