நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள்

  • கன்னியாகுமரி: நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. என்பது போல் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பொதுமக்கள் டாஸ்மாக்கை தொடர் போராட்டம் நடத்தி மூட வைத்துள்ளார்கள். இதையடுத்து இனிப்பு வழங்கி பொது மக்கள் கொண்டாடினார்கள். முன்னதாக டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி விடிய விடிய போராடி மக்கள் மூட வைத்துள்ளார்கள். பாயாசம் தயார் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார்கள்.

    Advertisement

    கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே தெருவுக்கடை பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை ஒன்று செயல்பட்டு வந்தது. அந்த கடையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த 21-ந் தேதி கடைக்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தொடர்ந்து டாஸ்மாக் கடை நிர்வாகத்தினர் மதுக்கடையை மூட 4 நாட்கள் கால அவகாசம் கேட்டனர். இதற்கு ஒத்துக்கொண்ட மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    Advertisement

    ஆனால் கால அவகாசம் முடிந்தும் கடை திறந்து செயல்பட்டதால் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி நேற்று முன்தினம் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்களிடம் குளச்சல் டிஎஸ்பி(பொறுப்பு) காந்தி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன் பாடு ஏற்படாததால் போராட்டம் விடிய விடிய நடைபெற்றது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இதுபற்றிய தகவல் அறிந்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் நேற்று காலை 9 மணியளவில் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவருடன் டாஸ்மாக் கோட்ட மேலாளர் சரவணன், கிள்ளியூர் தாசில்தார் அஜிதா, கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Advertisement

    அப்போது இந்த டாஸ்மாக் கடை நேற்று முதல் நிரந்தரமாக மூடப்படும் என அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்தார். அத்துடன் கடை மூடப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கி வெற்றியை கொண்டாடினார்கள்.

    தொடர்ந்து அமைச்சர் ராஜேஷ்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தெருவுக்கடைப் பகுதியில் நீண்ட காலமாக ஒரு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வந்தது. இந்த பகுதியை பொறுத்த வரையில் ஒரு போக்குவரத்து நெரிசலான பகுதி. இங்கே தேவாலயங்கள், கோவில்கள், பள்ளிக்கூடங்கள், வணிக வளாகங்கள் உள்ளன. இதனால், நீண்ட காலமாக இந்த மதுக்கடையை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு கன்னியாகுமரி மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று, துறை அதிகாரிகளிடம் ஆலோசித்து தெருவுக்க டைப் பகுதியில் செயல்பட்ட இந்த கடை மூடப்பட்டுள்ளது" இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    English Summary

    In Kanyakumari, residents staged an all-night protest and successfully forced the closure of a TASMAC liquor shop.