கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு பள்ளியில் மாணவிகள் சீருடையில் மது அருந்தும் காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் போது வருங்கால இந்தியா மாணவர்கள் கையில்! என்ற தலைவர்களின் கனவு நீர்த்து போய்விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசுப் பள்ளியில் கடந்த ஜூலை மாதம்
இரண்டு மாணவிகள் மது அருந்தியதாக புகார் எழுந்தது.
இந்த புகார் குறித்து மாணவிகளிடம் பள்ளி நிர்வாகம் விசாரணை நடத்திய போது, "இந்த சம்பவம் பள்ளியில் நடைபெறவில்லை. வீட்டில் வைத்து நடந்தது" என கடிதம் எழுதி கொடுத்தனர். இதனால் பள்ளி நிர்வாகம் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் மாணவிகள் மது அருந்திய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற்ற சம்பவம் என்று உறுதி செய்யப்படு உள்ளது. இதையடுத்து சரிவர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கத் தவறியதாக அந்த பள்ளி தலைமை ஆசிரியரை இடம் மாற்றம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இந்த பள்ளியில் மாணவன் ஒருவன் சக மாணவர்களுக்கு போதை சாக்லேட் கொடுத்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. பள்ளி வளாகத்தில் மாணவிகள் மது அருந்திய வீடியோ வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு மாணவி, மதுபானத்தை ஊற்றிக் கொடுத்து, இன்னொரு மாணவியிடம் குடி என சொல்வது போலவும், அதற்கு அந்த மாணவி "நீ குடிடி" என சொல்கிறார். அப்போது யாரோ ஒரு மாணவி வீடியோ எடுப்பதை அறிந்த மது குடிக்கும் மாணவிகள், "ஏன்டி வீடியோ எடுக்குறே" என கேட்கிறார்கள். ஏற்கெனவே திருவண்ணாமலை, செங்கல்பட்டு பகுதிகளில் அரசு பள்ளி மாணவிகள் சீருடையில் பேருந்துகளிலும் பொது இடங்களிலும் மது அருந்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அது போல் மாணவர்களும் மது அருந்திவிட்டு பள்ளிகளுக்கு வருவது, ஆசிரியர் தட்டி கேட்டால் அவர் மீது தாக்குதல் நடத்துவது, ஆபாசமாக பேசுவது, மாணவர்களுக்குள் மோதல் போக்கு, மாணவிகளை காதலிப்பதாக தொந்தரவு செய்வது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. இது வருங்கால இந்தியா மாணவர்கள் கையில் என கூறியிருந்த தியாகிகளின் கனவை சிதைக்கும் வகையில் உள்ளது. இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நீட், ஜே.இ.இ., கியூட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்கச் சென்ற மாணவிகள் சிலர் வகுப்பறையில் அமர்ந்து துணை உணவுகளுடன் மது அருந்தும் காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டிய வகுப்பறைகள் மதுக்கூடங்களாக மாறி வருவது மிகவும் கவலையளிக்கிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களும், மாணவிகளும் மது அருந்துவது இப்போது தான் புதிதாக நடக்கும் ஒன்றல்ல. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே இத்தகைய நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் நிகழ்வுகள் ஒவ்வொருமுறையும் வெளிவரும் போதெல்லாம் இளைய சமுதாயம் எங்கே செல்கிறது? என்ற கவலையும், அதை விட அதிகமாக, எதிர்காலத் தூண்களாக வளர்த்தெடுக்கப்பட வேண்டிய குழந்தைகளை அரசும், சமூகமும் சீரழிக்கின்றனவே? என்ற ஆத்திரமும் தான் ஏற்படுகின்றன. இத்தகைய நிகழ்வுகளை முற்றிலுமாக தடுக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. இளைய தலைமுறையினருக்கான பிரதிநிதிகளாக தங்களைக் காட்டிக் கொள்ளும் தவெக ஆட்சியிலும் இத்தகையக் கொடுமைகள் தொடர்கின்றன. அரசு பள்ளியில் மாணவிகள் மது அருந்தியதைத் தடுக்கத் தவறியதற்காக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், மிகவும் எளிதாக மது கிடைக்கும் சூழலை உருவாக்கிய ஆட்சியாளர்களையும், வகுப்பறையில் அமர்ந்து மது அருந்துவதை ஒரு சாகசமாகக் கருதும் மனநிலையை மாணவர்களிடம் ஏற்படுத்தியவர்களுக்கும் என்ன தண்டனை? ஒரு காலத்தில் மதுக்கடைகள் ஊருக்கு வெளியிலும், சுடுகாடுகளுக்கு அருகிலும் தான் விற்பனை செய்யப்படும். அங்கு மது அருந்துவதற்காக செல்பவர்கள், யார் கண்களிலும் படாமல் பதுங்கி, பதுங்கி தான் செல்வார்கள். அந்த நிலையை மாற்றி பள்ளிகளுக்கும் மக்கள் கூடும் இடங்களுக்கும் அருகில் மதுக்கடைகளை அமைத்து அவற்றுக்கு வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யும் நிலையை உருவாக்கியது யார்? பள்ளிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டு விட்டதாக ஆட்சியாளர்கள் அறிவித்த பிறகும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் குறைந்தது இரு மதுக்கடைகளையாவது கடந்து செல்ல வேண்டிய சூழல் இப்போதும் நிலவுவது யாருடைய தவறு? ஒழிக்கப்பட வேண்டிய விஷயங்கள் இவ்வளவு இருக்கும் போது, ஆன்லைனில் முன்பதிவு செய்து, வரிசையில் நிற்காமல் எளிதாக மது வாங்குவதற்கான இணையதளத்தை ஆட்சியாளர்கள் உருவாக்கியது தான் சீர்திருத்தமா? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு எல்லாம் ஆட்சியாளர்கள் விடையளித்து தீர்வு காண வேண்டும். மனிதர்களை ஒழிக்கும் மதுவை ஒழிப்பதே அரசின் கடமையாக இருக்க வேண்டும். எனவே, மக்களுக்கும், மாணவர்களுக்கு மது எளிதாகக் கிடைப்பதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். குறைந்தது ஆண்டுக்கு 1000 மதுக்கடைகளை மூடி, அடுத்த மூன்றாண்டுகளில் தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த முதலமைச்சர் விஜய் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.அன்புமணி கண்டனம்