கன்னியாகுமரி: கன்னியாகுமரி யாருக்குச் சொந்தம் என்ற விவாதம் இப்போது சோஷியல் மீடியாவில் மீண்டும் வெடித்துள்ளது. கேரள இன்ஸ்டா பெண் பிரபலம் ஒருவர் வெளியிட்ட வீடியோவை தொடர்ந்து தமிழர்களும் மலையாளிகளும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஆனால், கன்னியாகுமரி இன்று தமிழ்நாட்டின் ஒரு மாவட்டமாக இருப்பதற்கு பின்னால் பலருடைய போராட்டமும், கண்ணீரும், உயிர்த்தியாகமும் நிறைந்திருக்கிறது. அந்த வரலாற்றை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா?
எக்ஸ் தளத்தில் Great Kerala என்ற கணக்கில் இளம்பெண் ஒருவரின் வீடியோ ஷேர் செய்யப்பட்டுள்ளது.. அதில் அவர் கன்னியாகுமரியில் வாழும் மக்களின் மொழி அடையாளம் குறித்துப் பேசியுள்ளார்.
"கன்னியாகுமரியில் சிலருக்கு மலையாளம் நன்றாகப் பேசத் தெரியும். ஆனால், அந்த மொழியை எழுதவும் படிக்கவும் தெரியாது. அதேபோல், தமிழை நன்றாக எழுதவும் படிக்கவும் தெரியும். ஆனால், தமிழில் பேசத் தெரியாது. இப்படிப்பட்ட மொழி சூழலில் வாழும் எங்களை மலையாளிகள் என்று அழைப்பதா, தமிழர்கள் என்று அழைப்பதா" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து, கன்னியாகுமரியின் மொழி அடையாளம் குறித்து இணையத்தில் விவாதம் தொடங்கியுள்ளது. அந்தப் பெண் எழுப்பிய கேள்வி ஒருபுறம் இருக்க, வீடியோவைப் பகிர்ந்த Great Kerala கணக்கு திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரி மக்களின் மொழி அடையாளத்தை ஒப்பிட்டுக் குறிப்பிட்டிருப்பதும் விவாதத்தை அதிகரித்துள்ளது. இதனால், இது ஒரு பெண்ணின் தனிப்பட்ட மொழி அனுபவம் குறித்த கேள்வியா அல்லது கன்னியாகுமரியின் மாநில அடையாளத்தைப் பற்றிய விவாதத்தை மீண்டும் கிளப்பும் முயற்சியா என்ற கேள்வியையும் பலர் எழுப்பி வருகின்றனர். இந்த வீடியோவை பகிர்ந்த Great Kerala கணக்கு, திருவனந்தபுரத்தில் 98 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் மலையாளிகள் என்றும், கன்னியாகுமரியில் தமிழர்களும் மலையாளிகளும் வசிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து "கன்னியாகுமரியை கேரளாவுடன் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விவாதம் நடைபெறுகிறதா" எனக் கேள்வி எழுப்பி, தமிழர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.. கன்னியாகுமரி தமிழ்நாட்டுடன் இணைந்ததற்குப் பின்னால் எத்தனையோ மக்களின் தியாகம் இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டியும் வருகிறார்கள். இன்றைய கேரள மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ்தான் கன்னியாகுமரி பகுதி இருந்தது. அப்போது அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு உள்ளிட்ட தெற்குப் பகுதிகளில் பெரும்பான்மையான மக்கள் தமிழைத் தாய்மொழியாக கொண்டிருந்தனர். 1949-ல் திருவிதாங்கூர் - கொச்சி சமஸ்தானங்கள் இணைக்கப்பட்ட பிறகும், தமிழர்கள் வாழ்ந்த இந்த பகுதிகள் தொடர்ந்து அங்கேயே இருந்தன. தங்களது மொழி, உரிமை, வாழ்வாதாரம் போன்றவற்றை பாதுகாக்கவும், தமிழர்கள் வாழும் பகுதிகளை அன்றைய சென்னை மாகாணத்துடன் இணைக்கவும் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். 1946-ம் ஆண்டிலேயே அகில திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. பிறகு இந்த இயக்கம் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் என்ற பெயரில் செயல்பட்டது. அதன் முக்கியத் தலைவராக மார்ஷல் நேசமணி உருவெடுத்தார். கன்னியாகுமரி பகுதியை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை சாதாரணமான அரசியல் கோரிக்கையாக மட்டும் இருக்கவில்லை. மொழி உரிமை, சமூக நீதி, மக்களின் அடிப்படை உரிமைகள் எனப் பல்வேறு பிரச்சினைகளுக்காகவும் மக்கள் போராடினார்கள்.. திருவிதாங்கூர் ஆட்சிக் காலத்தில் தமிழர்கள் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டதாக வரலாற்று பதிவுகள் தெரிவிக்கின்றன. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், வேலைநிறுத்தங்கள் என பல்வேறு வழிகளில் மக்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். கன்னியாகுமரி இணைப்புப் போராட்டத்தில் 1954-ம் ஆண்டு துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் மட்டுமல்ல, அதற்கு முன்பே உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 1948-ம் ஆண்டு குமரி மாவட்டத்தின் மாங்காடு பகுதியில் உரிமை மீட்புப் போராட்டப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தைக் கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மாங்காடு தேவசகாயம், பைங்குளம் செல்லையன் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். கன்னியாகுமரி தமிழ்நாட்டுடன் இணைய வேண்டும் என்ற கோரிக்கைக்காக மக்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே போராட்டத்தில் இறங்கியிருந்தனர் என்பதற்கு இந்தச் சம்பவம் முக்கியமான சான்றாக உள்ளது. 1954-ம் ஆண்டு போராட்டம் தீவிரமடைந்தது. மார்ஷல் நேசமணி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்யக் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரின் துப்பாக்கிச்சூடும் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.. ஏராளமானோர் காயமடைந்தனர். குறிப்பாக, 1954 ஆகஸ்ட் 11-ம் தேதி மார்த்தாண்டம் மற்றும் புதுக்கடையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். மார்த்தாண்டத்தில் தேம்பனூர் பொன்னையன், மேக்கன்கரை ராமையன், மணலி எம். பாலையன், தொடுவெட்டி பப்பு பணிக்கர் ஆகியோர் உயிரிழந்தனர். புதுக்கடையில் அருளப்பன், கிள்ளியூர் முத்துசுவாமி, தோட்டவரம் குமாரன், செல்லப்ப பிள்ளை, தேங்காய்பட்டணம் பீர்முகம்மது ஆகியோர் உயிரிழந்தனர். இந்தப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் இன்றும் கன்னியாகுமரி இணைப்பு வரலாற்றில் நினைவுகூரப்பட வேண்டியவை. இந்தப் போராட்டம் வீதிகளில் நடந்த எதிர்ப்புடன் மட்டும் நின்றுவிடவில்லை. தேர்தல் அரசியலிலும் தமிழர்கள் தங்களது கோரிக்கையை வலுவாக வெளிப்படுத்தினார்கள். 1954-ம் ஆண்டு திருவிதாங்கூர் - கொச்சி சட்டமன்றத் தேர்தலில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மக்களிடம் இருந்த ஆதரவை இந்தத் தேர்தல் முடிவு வெளிப்படுத்தியது. மாநில மறுசீரமைப்பு ஆணையத்திடமும் தமிழர் தலைவர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். கன்னியாகுமரியின் 4 தாலுகாக்களுடன், மேலும் பல தமிழர்கள் வாழும் பகுதிகளையும் சென்னை மாகாணத்துடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். மக்களின் கோரிக்கையை அரசியல் ரீதியாக எடுத்துச் செல்வதிலும் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் தொடர்ந்து செயல்பட்டது. தமிழர்கள் வாழும் பகுதிகளின் மொழி நிலை, மக்களின் விருப்பம், நிர்வாகச் சிக்கல்கள் போன்றவற்றை எடுத்துக்கூறி மனுக்கள் அளிக்கப்பட்டன. மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் முன்பும் இந்தக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஒரு பகுதியை எந்த மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும்போது அங்கு வாழும் மக்களின் மொழி அடையாளத்தையும் விருப்பத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே தமிழர் தலைவர்களின் முக்கிய வாதமாக இருந்தது. தேவிகுளம், பீர்மேடு பகுதிகளிலும் தமிழர்கள் தங்களது உரிமைக்காகப் போராடினார்கள். குறிப்பாக, தேவிகுளத்தில் போராட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டபோதும், அதனை மீறி பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டங்களும் நடைபெற்றன. இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன், ஏராளமான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. தேவிகுளத்தில் மட்டும் 464 பேர் மீது பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதாகவும், அவர்களில் 20 பேர் பெண்கள் என்றும் வரலாற்று ஆய்வுக் கட்டுரை ஒன்று குறிப்பிடுகிறது. கன்னியாகுமரியின் 4 தாலுகாக்களை மட்டும் இணைக்க வேண்டும் என்பதோடு இந்தப் போராட்டம் முடிந்துவிடவில்லை. தேவிகுளம், பீர்மேடு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களும் தாங்கள் வாழும் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அங்கும் கூட்டங்கள், மறியல் போராட்டங்கள் எனப் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால், மாநில எல்லைகளை இறுதி செய்தபோது தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் கேரளத்திலேயே தொடர்ந்தன. கன்னியாகுமரியின் 4 தாலுகாக்கள் மட்டுமே சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டன. இதனால், தமிழர்கள் வாழ்ந்த எல்லாப் பகுதிகளும் ஒரே மாநிலத்துடன் இணைய வேண்டும் என்ற கோரிக்கை முழுமையாக நிறைவேறவில்லை. தங்களது மண்ணின் உரிமைக்காகப் போராடிய மக்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் களத்தில் நின்றனர். குடும்பங்களை பிரிந்து சிறை சென்றவர்கள், போலீசாரின் அடக்குமுறைகளை எதிர்கொண்டவர்கள் என இந்த போராட்டத்தின் பின்னால் சொல்லப்படாத பல துயரங்கள் உள்ளன. கன்னியாகுமரி மக்களின் உரிமைக்காகப் போராட்டக் களத்தில் இறங்கிய மார்ஷல் நேசமணி, மக்களை ஒன்றுதிரட்டி தொடர்ந்து போராடினார். அவருடன் அப்துல் ரசாக், சிதம்பரநாதன் நாடார், எம். வில்லியம், டி.டி. டேனியல், பி. தாணுலிங்கம் நாடார், ஆர். பொன்னப்ப நாடார் உள்ளிட்ட பல தலைவர்களும் களத்தில் நின்றனர். இவர்களின் தொடர் முயற்சிகளுக்கும், மக்களின் போராட்டத்துக்கும் கிடைத்த முக்கியமான வெற்றியாக 1956 நவம்பர் 1 அமைந்தது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, திருவிதாங்கூர் - கொச்சி மாநிலத்தில் இருந்த அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு ஆகிய நான்கு தாலுகாக்களும் பிரிக்கப்பட்டு, சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டன. இதன் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் உருவானது. இன்று தமிழ்நாட்டின் தென்கோடி மாவட்டமாக விளங்கும் கன்னியாகுமரி, அன்றைய மக்களின் போராட்டத்தால் கிடைத்த உரிமையின் அடையாளமாகத் திகழ்கிறது. இந்த வெற்றிக்காக போராடிய மார்ஷல் நேசமணியை குமரித் தந்தை என்று மக்கள் அன்புடன் அழைக்கின்றனர். ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. பெண் ஒருவர் தனது மொழி அடையாளம் குறித்துக் கேள்வி எழுப்பியிருக்கலாம். கன்னியாகுமரியில் தமிழர்களும் மலையாளிகளும் இணைந்து வாழலாம். இரு மொழிகளையும் பேசும் மக்களும் இருக்கலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், கன்னியாகுமரி தமிழ்நாட்டுடன் இணைந்ததற்கு பின்னால் இருக்கும் வரலாற்றையும், அதற்காக தங்களது உயிரையே கொடுத்த மக்களையும் மறந்துவிட முடியாது. அதனால் கன்னியாகுமரி யாருக்குச் சொந்தம் என்ற விவாதம் எழும்போது, அந்த மண்ணின் வரலாற்றையும், மக்களின் போராட்டத்தையும், உயிர்த்தியாகத்தையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். அந்தத் தியாகத்தின் மூலம்தான் இந்த மண் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக உருவானது. எந்தக் காலம் மாறினாலும் சரி, எந்தத் தலைமுறை வந்தாலும் சரி, ஒரு மண்ணுக்காக சிந்தப்பட்ட ரத்தத்தின் சரித்திரம் மட்டும் ஒருபோதும் மாறாது. இன்று கன்னியாகுமரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு அந்த போராட்டத்தின் வலி தெரியாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் வாழும் மண் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இருப்பதற்காக அன்று எத்தனையோ குடும்பங்கள் தங்கள் உறவுகளை இழந்திருக்கின்றன. தாய்மொழிக்காகவும், தங்கள் மண்ணின் உரிமைக்காகவும் உயிரைக் கொடுத்த அந்த எளிய மனிதர்களின் தியாகத்தை எந்த விவாதத்தாலும் அழித்துவிட முடியாது. இனி வரும்காலம் அவர்களின் பெயர்களை மறக்க செய்தாலும், அவர்கள் சிந்திய ரத்தம் இந்த மண்ணின் வரலாற்றில் என்றும் அழியாமல் இருக்கும். ஏனென்றால், எல்லைகள் வரைபடத்தில் மாறலாம்... ஆனால் உயிர்த்தியாகம் எழுதிய ரத்தச் சரித்திரம் ஒருபோதும் மாறாது.. மாறாது.. மாறாது..!!மலையாள பெண்
கன்னியாகுமரி யாருக்கு
எப்படி உருவானது குமரி மாவட்டம்?
உயிரை பணயம் வைத்த போராட்டம்
மார்ஷல் நேசமணி தியாகம்
திருவிதாங்கூர் கொச்சி தேர்தல்
தமிழர்களின் உரிமை போராட்டம்
4 தாலுகாக்கள் இணைப்பு
மார்ஷல் நேசமணி தலைமையில் போராட்டம்
1956 நவம்பர் 1.. கிடைத்த வெற்றி
மறக்க முடியாத ரத்த வரலாறு
கன்னியாகுமரி கதை