கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் சொத்தவிளை கடற்கரை பகுதியில் அறக்கட்டளை நடத்தி வந்தவர் தாமஸ் கொரோஸ் டென்ஸ் . ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த இவர், முன்பு ஒரு முறை காவல் நிலையத்திற்கு ரத்தம் சொட்ட சொட்ட வந்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். தற்போது தாமஸ் கொரோஸ் டென்ஸ் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த 60 வயதாகும் தாமஸ் கொரோஸ் டென்ஸ்கி என்பவர் கடந்த 2004-ம் ஆண்டு சுனாமிக்கு பின் கன்னியாகுமரி மாவட்டம் வந்தார். சுனாமியால் பாதித்தவர்களுக்கு உதவி செயத தாமஸ், சொத்தவிளை கடற்கரை பகுதியில் அறக்கட்டளை நடத்தி அதன் அமைப்பாளராக இருந்து பல்வேறு சமூக சேவைகளை தொடர்ந்து செய்து வந்தார்.
ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தாமஸ் கொரோஸ் டென்ஸ்கி ஆஸ்திரியா நாட்டுக்கு சென்றார். பின்னர் கடந்த செப்டம்பரில் ஒரு வருட விசா அனுமதியுடன் இந்தியா வந்த அவர் சொத்தவிளை கடற்கரையில் உள்ள சொந்த வீட்டில் தங்கி இருந்து வந்தார். இந்த சூழலில் தாமஸ் கொரோஸ் டென்ஸ்கி கடந்த 4 நாட்களாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் வளர்த்து வந்த நாய்கள் மட்டும் தொடர்ந்து சத்தமாக குறைத்து கொண்டே இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து புத்தளம் கிராம நிர்வாக அலுவலர் பரத் அருணுக்கு தகவல் அளித்தனர்.. அதன் பேரில் அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது தாமஸ் கொரோஸ் டென்ஸ்கி இறந்து கிடந்தார். உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அவர் இறந்து 2 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என்பதை அறிந்தார். உள்ளூர் மக்களும் அங்கு கூடினார்கள். பின்னர் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பரத் கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் தனீஷ் லியோன் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த தாமஸ் கொரோஸ் டென்ஸ்கியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாமஸ் கொரோஸ் டென்ஸ்கியின் சாவுக்கான காரணம் என்ன என்பது தெளிவாக தெரியவில்லை? பிரேத பரிசோதனைக்கு பிறகே அவர் எவ்வாறு இறந்தார் என்பது தெரிய வரும்? என்று போலீசார் தெரிவித்தனர். முன்னதாக கடந்த அக்டோபர் 3-ந்தேதி நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு அரசு விரைவு பஸ்சில் தாமஸ் கொரோஸ் டென்ஸ்கி சென்று கொண்டிருந்தபோது அவர் வைத்திருந்த பை பயணிகளுக்கு இடையூறாக இருந்தது. இதை கண்டித்த பயணிகளை தாமஸ் கொரோஸ் டென்ஸ்கி திட்டியதாக தெரிகிறது. இதை விளவங்கோட்டை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான 46 வயதாகும் பாபு என்பவர் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கோபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பாபு, தாமஸ் கொரோஸ் டென்ஸ்கியை பிடித்து தள்ளினார். இதில் பேருந்தின் ஜன்னல் கண்ணாடி இடித்து தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் ரத்தம் வழிந்தோடிய நிலையில் பஸ்சில் இருந்து இறக்கிவிடப்பட்ட தாமஸ் நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்துக்கு வந்தார். உடனே கோட்டார் போலீசார் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தாமஸ் கொரோஸ் டென்ஸ்கி கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் ராணுவவீரர் பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல் முன்னாள் ராணுவவீரர் கொடுத்த புகாரின் பேரில் தாமஸ் கொரோஸ் டென்ஸ்கி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தார்கள். இந்த நிலையில் தாமஸ் கொரோஸ் டென்ஸ்கி அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.